Flashback 2023: பரபரப்பான.. எதிர்பாராத சம்பவங்கள்.. ஈவேரா திருமகன் முதல் Michaung வரை!

Dec 15, 2023,06:22 PM IST

சென்னை: 2023ம் ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே மறக்க முடியாத பல சம்பவங்களையும், நினைவுகளையும் பதித்து விட்டு விடை பெற்றுச் செல்லக் காத்திருக்கிறது.


ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழ்நாட்டில் ஒரு துயரச் சம்பவம் நடந்தேறியது. பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேராவின் திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஆண்டின் இறுதிப் பகுதியிலும்  கூட புயல் வந்து புரட்டிப் போட்டு விட்டது.




2023ம் ஆண்டை உலுக்கிய சில சம்பவங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.


திருமகன் ஈவேரா மரணம்: (ஜனவரி 4) ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா திடீர் மரணமடைந்தார். மிகவும் இளம் வயதில் அவரது மரணத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. அரசியல் சார்பற்று அனைவருடனும் அன்புடன் பழகியவர் திருமகன். தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரனான அவருக்கு காங்கிரஸ் கட்சியில் மிகப் பெரிய எதிர்காலம் காத்திருப்பதாக அனைவரும் கருதிய நிலையில் யாரும் எதிர்பாராத தருணத்தில் மரணமடைந்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகன்தான் திருமகன். அவர் இறந்ததால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதியில் இளங்கோவனே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


ராகுல் காந்தி தகுதி நீக்கம்: (மார்ச் 24) குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மோடி சமூகத்தவர்களை இழிவுபடுத்தும் வகையில், "மோடி என்ற துணைப் பெயர் கொண்டவர்கள் திருடர்களாக இருக்கிறார்கள்" என்று பேசியதற்காக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, சூரத் கோர்ட், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து தீர்ப்பு வந்த அடுத்த நாளே அதாவது மார்ச் 24ம் தேதி ராகுல் காந்தியின் எம்.பி பதவி  தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்து மீண்டும் தனது பதவியைப் பெற்றார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் எம்.பி பதவி அதி வேகத்தில் பறிக்கப்பட்டது 2023ம் ஆண்டின் மிகப் பரபரப்பான சம்பவமாக அமைந்தது.




மணிப்பூர் கொடூரம்: (மே) மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களின் உச்சம் வெளி உலகுக்குத் தெரிய வந்து உலகமே அதிர்ந்தது. இரு பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில்  நடக்க வைத்து சித்திரவதை செய்த கும்பலின் செயலைக் கண்டு இந்தியாவே பதறியது. மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்த இந்த சம்புத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார். நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய மிக முக்கியமான,  சோகச் சம்பவம் இது.


I.N.D.I.A கூட்டணி: (ஜூலை 18) நாட்டையே ஆச்சரியப்படுத்திய முடிவை, பெங்களூரில் கூடிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி அறிவித்தது. தங்களது கூட்டணிக்கு I.N.D.I.A என்று பெயர் சூட்டியுள்ளதாக இந்தக் கூட்டணி வெளியிட்ட அறிவிப்பு நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது. நாட்டின் பெயரையே பாரத் என்று மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் பதறும் அளவுக்கு இந்த முடிவு கொண்டு போய் விட்டது. இப்போது பாஜகவினர் பெரும்பாலும் பாரத் என்ற பெயரையே பரவலாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சந்திரயான் 3 திட்டம் வெற்றி: (ஆகஸ்ட் 23) நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கல திட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. அதுவரை நிலவின் தென் துருவத்தை யாரும் தொட்டுப் பார்த்திராத நிலையில் இந்தியாவின் சந்திரயான் 3ல் பொருத்தப்பட்டிருந்த விக்ரம் லேன்டர் நிலவில் கால் பதித்து புதிய வரலாறு படைத்தது. நிலவில் கால் பதித்த நாடுகள் வரிசையில் இந்தியாவும் தனது பெயரை இணைத்துக் கொண்டது. நிலவில் தரையிறங்கியதோடு மட்டுமல்லாமல், விக்ரம் லேன்டரை மீண்டும் ஒரு முறை மேலே எழுப்பி கீழே அமர வைத்து புதிய சாதனையையும் சத்தம் போடாமல் செய்து அசத்தியது இஸ்ரோ.




மிரள வைத்த பிரக்ஞானந்தா: (ஆகஸ்ட் 24) உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் மாக்னஸ் கார்ல்சனை மிரட்டி விட்டார் இந்தியாவின் இளம் சாம்பியன் பிரக்ஞானந்தா. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் கார்ல்சனை எளிதில் வெல்ல முடியாமல் திணற வைத்து அதன் பின்னர் வெற்றி பெற விட்டார். 2வது இடத்தை பெற்றாலும் கூட உலகின் நம்பர் ஒன் வீரருக்கு தண்ணி காட்டி ஒட்டுமொத்த செஸ் உலகையும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டார் பிரக்ஞானந்தா. போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லத் தவறினாலும் கூட ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டையும் பெற்று அசத்தினார் பிரக்ஞானந்தா.


உத்தரகாண்ட் தொழிலாளர்கள் மீட்பு: (நவம்பர் 12 முதல் 28) உத்தகரகாண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியின்போது திடீரென வளைவு ஒன்று சரிந்து விழுந்ததில் அதன் மறு பகுதியில், அதாவது சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். நவம்பர் 12ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணிகள் தொடங்கின. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குழுவினர் திரண்டு இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 16 நாள் தீவிர முயற்சிக்குப் பின்னர் நவம்பர் 28ம் தேதி மாலைக்கு மேல் அனைத்துத் தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவர் கூட பாதிக்கப்படாத வகையில் அத்தனை பேரும் நலமுடன் மீட்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் தலைமையில் நடந்த இந்த மீட்புப் பணியானது, இந்தியாவின் மிகப் பெரிய மீட்புப் பணி என்ற பெருமையையும் பெற்றது.




அச்சுறுத்திய Michaung: (டிசம்பர் 3) வங்கக் கடலில் உருவாகி மிகப் பெரும் மிரட்டலைக் கொடுத்து விட்டது மிச்சாங் எனப்படும் மிக்ஜாம் புயல். சென்னைக்கு வெகு அருகே நெருங்கி வந்த இந்தப் புயலானது கிட்டத்தட்ட 24 மணி நேரம் சென்னை அருகேயே நிலை கொண்டிருந்ததால் மிகப் பெரிய மழைப் பொழிவு கிடைத்தது. இதன் காரணமாக சென்னை நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பை சந்தித்தது. சென்னை மட்டுமல்லாமல், சென்னை புறநகர்களை உள்ளடக்கிய திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் கடும் பாதிப்பை சந்தித்தன.

சமீபத்திய செய்திகள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

news

ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!

news

உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!

news

மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

news

TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!

news

Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

news

விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்