Flashback 2023: அதிரடி வெளிநடப்பு செய்த ஆர். என்.ரவி.. கதறி அழுத செந்தில் பாலாஜி.. மறக்க முடியுமா?

Dec 31, 2023,05:33 PM IST

சென்னை: மறக்க முடியாத பல சம்பவங்களுடன் 2023ம் ஆண்டு விடை பெறுகிறது. ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை எந்த மாதத்திலும் நம்மை நிம்மதியாக இருக்க விடவில்லை இந்த 2023ம் ஆண்டு.


2023ம் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஒரு தொகுப்பாக இப்போது காணலாம். முதலில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான முக்கிய சம்பவங்களின் அணிவகுப்பு.


ஜனவரி: சட்டசபையில் வெளிநடப்பு செய்த ஆர்.என். ரவி




ஜனவரி 2: மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஜனவரி 3: நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகினார்.


ஜனவரி 4: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரையில் இடம் பெற்ற சில வாசகங்களை வாசிக்க மறுத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. இதற்கு எதிராக உடனடியாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் ஆர். என். ரவி. சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


ஜனவரி 13: தமிழ்நாடு அரசின் பணிகளில் சேர தமிழ் கட்டாயம் என்ற சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.


ஜனவரி 20: கூகுள் நிறுவனத்தில் பன்னிரண்டாயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.


ஜனவரி 30: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரதிய ஜோடோ யாத்திரை காஷ்மீரில் வெற்றிகரமாக முடிவடைந்தது.


ஜனவரி 31:  பெண் சீடர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குஜராத்தைச் சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


பிப்ரவரி: பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பரபரப்பை ஏற்படுத்திய நெடுமாறன்




பிப்ரவரி 3: அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த சீனாவின் ராட்சத பலூனை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது.


பிப்ரவரி 6: ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அங்கீகரிக்கும் வேட்புமனுவில் கையெழுத்திட அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது.


பிப்ரவரி 5: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மரணமடைந்தார்.


பிப்ரவரி 6: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் 


பிப்ரவரி 12: திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் நான்கு நான்கு ஏ டி எம் களில் துணிகர திருட்டு நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது.


- தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார்.


பிப்ரவரி 13: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அறிவித்தார்.


பிப்ரவரி 20: மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து ஆளுநராக மாற்றப்பட்டார்.


பிப்ரவரி 22: டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் பலத்த மோதலுக்கு பின் நடந்தேறியது. புதிய மேயராக ஷெல்லி ஓபராய் தேர்வு செய்யப்பட்டார்.


பிப்ரவரி 27: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ நியமிக்கப்பட்டார்.


- ஹின்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியாவின் கௌதம் அதானி அதல பாதாளத்திற்கு சரிந்தார்.


மார்ச்: வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விஷமிகள்




மார்ச் 1: சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு அளித்த டாக்டர் பட்டம் போலியானது என்று தெரியவந்தது. நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு இந்த அமைப்பு டாக்டர் பட்டம் வழங்கி இருந்தது.


மார்ச் 3: வட மாநில தொழிலாளர்கள் கொலை செய்யப்பபடுகிறார்கள் என்றி கூறி போலியான வீடியோக்களை வெளியிட்டு சில விஷமிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இது வட மாநிலங்களில் கொதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த வீடியோக்கள் போலி என்று தமிழ்நாடு அரசு உடனடியாக நிரூபித்தது. பாஜகவைச் சேர்ந்த சிலர் மீதும், ஆங்கில மீடியாக்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. இதனால் வதந்தி அடங்கியது.


மார்ச் 5: சிவகங்கை மாவட்டம் கீழடியில் கட்டப்பட்ட தொல்லியல் அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


மார்ச் 10: சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஸீ ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மார்ச் 20: பெண்ணைக் காதலிப்பதாக கூறி, ஆபாசமாக பழகி, அவர்களுடன் ஆபாச கோலத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்ட சர்ச்சையில் சிக்கிய விளவங்கோடு பாதிரியார் பெனடிக் அன்டோ கைது செய்யப்பட்டார்.


- நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் 60 பவுன் நகை திருடு போனதாக பரபரப்பு ஏற்பட்டது. வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.


மார்ச் 23: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலம் சூரத் கோர்ட் தீர்ப்பளித்தது. பிப்ரவரி 24ம் தேதி அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.


மார்ச் 24: மறைந்த பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவர் வசித்து வந்த சென்னை மந்தவெளிப் பகுதியில் உள்ள சாலைக்கு டி எம் சௌந்தரராஜன் பெயர் சூட்டப்பட்டது.


- சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


மார்ச் 28: அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக, சட்டரீதியாக அறிவிக்கப்பட்டார்.


மார்ச் 31: மணப்பாறை முறுக்கு உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கியது.


ஏப்ரல்: திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை




ஏப்ரல் 3:  சென்னை கலாஷேத்ரா மாணவிகள் அளித்த பாலியல் கொடுமை புகாரின் பேரில் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.


- கேரளாவில் ஓடும் ரயிலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள்


ஏப்ரல் 5: எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய பயணத்தை தமிழ்நாட்டின் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி தொடங்கினார். மே 23ஆம் தேதி எவரெஸ்ட் உச்சியை அடைந்து புதிய வரலாறு படைத்தார். எவரெஸ்ட் உச்சியைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண் இவர்தான்.


ஏப்ரல் 6: தூத்துக்குடி  ஸ்டெர்லைட் போராட்டத்தை நடத்த வெளிநாட்டு பணம் பயன்படுத்தப்பட்டது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது.


- நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்தது


ஏப்ரல் 8: சென்னை கோயம்புத்தூர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


ஏப்ரல் 12: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது.


ஏப்ரல் 14: DMK Files என்ற பெயரில், திமுகவினர் செய்த ஊழல்கள் என்று கூறி அவர்களது சொத்து பட்டியல் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதையடுத்து அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.


- தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நாட்டிலேயே மிக உயரமான 125 அடி உயர அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது. 


ஏப்ரல் 15: உத்திரப்பிரதேசத்தில் கோர்ட் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் சமாஜ்வாடி கட்சி எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது தம்பி ஆகியோர் செய்தியாளர்கள் போர்வையில் இருந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


ஏப்ரல் 17: குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்டது. 


ஏப்ரல் 19:  உலக அளவில் சீனாவை பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி ஆகும்.


ஏப்ரல் 25: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அதிகாரி சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். மணல் கடத்தல் கும்பலால் இந்த கொலை நடந்தது. இந்த கொலையில் ஈடுபட்ட மாரிமுத்து மற்றும் ராமசுப்பிரமணியன் ஆகியோருக்கு துரிதமாக விசாரணை நடத்தப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 


ஏப்ரல் 29: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக சென்னை கடற்கரையில் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள பேனா நினைவு சின்னத்திற்கு 15 நிபந்தனைகள் விதித்து மத்திய அரசு கொள்கை அனுமதியை வழங்கியது.


மே: நிதித்துறையிலிருந்து மாற்றப்பட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்




மே 2: மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மரணம்.


மே 7: கேரளாவின் மலப்புரம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியானார்கள்.


மே 8: பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் திண்டுக்கலை சேர்ந்த மாணவி நந்தினி 600 க்கு 600 மதிப்பெண் எடுத்து புதிய வரலாறு படைத்தார். 


மே 9: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. பால்வளத்துறை அமைச்சராக இருந்து வந்த சா,மு நாசர் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் மனோ தங்கராஜ் பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டார். புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவி ஏற்றார்.  நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் தங்கம் தென்னரசு நிதி அமைச்சர் ஆனார். 


மே 10: கேரளாவில் சிகிச்சை அளித்த பெண் டாக்டர் வந்தனா தாஸ் என்பவரை குடிபோதையில் இருந்த கைதி ஆவேசத்துடன் கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


மே 13: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்று பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியது. சித்தராமையா முதல்வரானார். டி கே சிவக்குமார் துணை முதல்வரானார்.


மே 14:  விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயத்தை குடித்து மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர்.


மே 18: ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு அளித்தது.


மே 19:  செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்படும். அதன் பிறகு அது செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.


மே 23: டெல்லியில் இருந்து சண்டிகருக்கு லாரி மூலமாக ராகுல் காந்தி பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


மே 28: டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். திருவாவடுதுறை ஆதீனம் அன்பளிப்பாக வழங்கிய செங்கோல் அங்கு நிறுவப்பட்டது. குடியரசுத் தலைவர் இந்த விழாவுக்கு அழைக்கப்படாதது சர்ச்சையைக் கிளப்பியது.


மே 31: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.


ஜூன்: செந்தில் பாலாஜி அதிரடி கைது.. நெஞ்சு வலி.. கதறி அழுகை!




ஜூன் 5:  இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பலை நாகப்பட்டினத்தில் மத்திய அமைச்சர் சார்பானந்தா சோனாவால் தொடங்கி வைத்தார்.


- கேரளா மற்றும் தமிழ்நாட்டை பரபரப்பில் ஆழ்த்தி வந்த அரிகொம்பன் யானை தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த யானையை வனத்துறையினர் வெற்றிகரமாக மடக்கிப் பிடித்தனர். அதன் பின்னர் யானை நெல்லை வனப்பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது.


ஜூன் 12: முன்னாள் முதலமைச்சர் ஊழலுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்தது.


ஜூன் 13: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது.


- தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜி அதிரடியாக கைது செய்யப்பட்டார். பல மணி நேர விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட அவர் நெஞ்சுவலி என்று கூறி கதறி அழுததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


ஜூன் 14: இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் மோசடி செய்து வீடியோ எடுத்து மிரட்டி கைதான நாகர்கோல் காசிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது .


- சிபிஐ சோதனைக்கு தமிழ்நாடு அரசு வழங்கியிருந்த சிறப்பு அனுமதியை மாநில அரசு ரத்து செய்தது.


ஜூன் 15 : அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.


ஜூன் 16: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


- டெல்லி நேரு அருங்காட்சியகத்தின் பெயர் பிரதம மந்திரி அருங்காட்சியகம் என்று மாற்றப்பட்டது.


ஜூன் 17: தமிழ்நாடு சட்டசபை தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு சென்னையில் நடந்த விழாவில், நடிகர் விஜய் ரொக்கப் பரிசு அளித்து கௌரவித்தார். 


ஜூன் 18: ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்பு குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசிய சர்ச்சையில் சிக்கிய திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.


ஜூன் 20: ஆழ் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக சென்ற நீர் மூழ்கி சுற்றுலாக் கப்பல் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஐந்து கோடீஸ்வரர்களும் உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.


ஜூன் 22: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.


ஜூன் 23: கோவையின் முதல் பெண் பஸ் டிரைவர் என்ற பெயர் பெற்ற ஷர்மிளா ஓட்டிய பஸ்ஸில் திமுக எம்பி கனிமொழி பயணம் செய்தார். அவர் பயணம் செய்த சில மணி நேரத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை.. தனது பஸ் நிறுவன முதலாளி தனது தந்தையை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி தனது வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ஷர்மிளா. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஜூன் 26 ஆம் தேதி மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் காரை பரிசாக அளித்தார்.


ஜூன் 30:  தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற்றார். புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவி ஏற்றார். தமிழக தலைமைச் செயலாளராக இருந்து வந்த இறையன்புவும் ஓய்வு பெற்றார். அவருக்குப் பதில் சிவ் தாஸ் மீனா புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்