- சகாயதேவி
பல திரைப்படங்கள் வந்தாலும் சில திரைப்படங்கள்தான் நம்ம மனசுல எப்பவுமே நின்று கொண்டே இருக்கும். அப்படி ஒரு படம் தான் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஒரு அற்புதமான படம் பர்ஹானா.
படம் வந்தது மே மாதம்தான் என்றாலும் சமீபத்தில்தான் பார்க்க வாய்க்கக் கிடைத்தது.. பார்த்துமே மனசை ஏதோ செய்து விட்டாள் இந்த பர்ஹானா.
பர்ஹானா அப்படிங்கற ஒரு முஸ்லிம் பெண்ணை மையப்படுத்தி, கூடவே சமூக கருத்தையும் சேர்த்து இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார்கள். படம் ரொம்ப இயல்பாக இருக்கிறது. கதையை அழகாக பின்னணியுள்ளனர். பாடல்கள் அதிகம் கிடையாது. வெளிநாட்டுக் காட்சிகள் சுத்தமாக இல்லை. செட் போடவில்லை.. கவர்ச்சியா.. மூச்!
எதுவுமே இல்லாமலும் இந்த படம் நிற்கிறது, அதுவும் மிக உயரமாக நிற்கிறது. நம்மைப் போன்ற ரசிகர்களின் மனதில் பதிந்து போகிறது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் பெண்களுக்கும் மட்டுமே பெரும்பாலும் அதிகமாக பிடிக்கும். ஆனால் பெரும்பாலான பெண்களை மையப்படுத்தி படம் "ஆண்களுக்கானது" என்பதை பெரும்பாலான ஆண்கள் உணருவதில்லை. இந்தப் படம் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் எல்லாரையும் திருப்திப்படுத்தும் ஒரு அற்புதமான படம்.
ஒரு நீண்ட சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும் ஒரு கார் .. அந்தக் காரில் நடக்கும் சில்மிஷம்.. அதற்கு பின்பு பெரிய ஹோட்டல் அறை .. எதிர்பாராமல் நடக்கும் ஒரு கொலை இப்படியாக ஆரம்பிக்கிறது படம். படத்தின் பெயர் போடுவதற்கு முன்பாகவே ஏதோ ஒன்றை யோசிக்க வைத்து விட்டு தான் டைரக்டர் படத்தை தொடர்கிறார்.
படத்தின் டைட்டில் முடிந்த பிறகு .. பரபரப்பில்லாத ஒரு சாதாரண மிக எளிமையான ஒரு முஸ்லிம் பெண் தொழுது கொண்டிருக்கிறாள். கைக்குழந்தையோடு மூன்று குழந்தைகள் கணவர் அவர்களோடு இருக்கும் வாப்பா இப்படியாக இயல்பாக ஆரம்பிக்கிறது. வெகு இயல்பாக கதை அப்படியே போய் அந்த வீட்டு சூழ்நிலையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது.
குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த பெண் வேலைக்கு செல்ல விரும்புகிறாள் . வேலைக்கு அனுப்ப வீட்டில் விருப்பமில்லை என்றாலும் சூழ்நிலை காரணமாக போகிறாள். பளிங்கு மாளிகை போல இருக்கும் கம்பெனி கஸ்டமர் கால் என படம் இன்னொரு திசையில் பயணிக்க ஆரம்பிக்கிறது. கால் சென்டர் . தூரத்தில் இருந்து ஒலிக்கும் ஒரு ஆண் குரல். இந்த பக்கமாக இருந்து ஒலிக்கும் மென்மையான ஒரு குரல். அது ஈஷா.
இந்த இரு குரலுக்கும் என்ன சம்பந்தம் இந்த இரு குரல்களையும் இணைத்தது என்ன? இந்த இரு குரல்கள் இணைந்ததால் அதற்கு பின்பு எழுந்த பிரச்சனைகள் என்ன? அத்தனை சவால்களையும் அந்தப் பெண் தீர்த்தாளா அல்லது அதில் சிக்கி அழிந்து போனாளா? இப்படி பல கேள்விகளுக்கு பதிலாக நிற்கிறாள் பர்ஹானா.
குடும்பம், கணவன் மனைவி இருவருக்குமான உறவு தேய்ந்து வரும் இந்த காலத்தில் எங்கேயோ கேட்கும் ஏதோ ஒரு குரல் இனிய பாடலாய், அக்கறையோடு, அனுசரணையாக தோன்றலாம். நாம் பார்க்கும் முகங்கள் அழகாய் தோன்றலாம். ஆனால் அந்த முகங்களுக்கு இன்னொரு முகம் உண்டு என அறியாமல் தன்னை தொலைத்து போகும் பேதைகளுக்கான ஒரு பாடமாக இந்த படத்தை பார்க்கலாம்.
அந்த பெண்ணின் வீடு, தூரமாய் ஒலிக்கும் ஒரு ஒற்றை குரல், கால் சென்டர் அலுவலகம், மெட்ரோ ரயில் பயணம், தொலைபேசி , இப்படியான சில இடங்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்த படத்தை எவ்வளவு சுவாரசியமாக கொடுக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை எழுப்பியுள்ளார் இயக்குநர்.
படத்தின் முடிவில் வரும் ஒரு வசனம் நம் வாழ்க்கையோடு இணைந்து போகும். எல்லா பறவைகளும் உயரமாய் பறப்பதில்லை. ஒவ்வொரு பறவைகக்கும் பறக்கும் தூரம், உயரம் உண்டு. அதற்கேற்ற மாதிரி நம்ம வாழ்க்கையை ��ாம வாழ வேண்டும். எதையோ தேடி யாரையோ பார்த்து ஏங்கி வாழுற வாழ்க்கையை விட நமக்கான வாழ்க்கையை நாம மகிழ்ச்சியாக வாழலாம் அப்படிங்கற ஒரு அழகான மெசேஜை இந்த படம் சொல்லிட்டு போகுது.
இந்த படத்தை பொழுது போக்காக மட்டும் இல்லாமல், நம்ம வாழ்க்கையோடுமனம் இணைத்து அசைபோடும். இவ்வளவு அர்த்தமுள்ள படத்தை எடுத்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசனை பாராட்டலாம் படத்தின் கதாபாத்திரங்கள் எல்லாம் சிறப்பு. ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டையில் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்து கலக்கியவர் இந்த படத்திலும் மிக அற்புதமாக நடிப்பில், குறிப்பாக உடல் மொழியில் பிரமிக்க வைத்திருக்கிறார். அவரது நடிப்பு முழுவதும் முகத்தில்தான் இருக்கிறது. பர்தா அணிந்து முகம் மூலமாக தனது உணர்வுகளை, அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜித்தன் ரமேஷ் மிக அற்புதமான நடிப்பு. "வாப்பா", பிறகு வாப்பா கடையின் பக்கத்து கடை பெண்மணி, அலுவலக தோழிகள் என எல்லோருமே இயல்பாக நடிப்பு என இயல்பான நடிப்பால் நம்மை கவர்ந்து விடுகிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு பெரிய சிறப்பாக அமைந்திருக்கிறது. பெரும்பாலும் எல்லோரும் படம் பார்த்திருப்பீங்க, ஒரு வேளை மிஸ் செய்திருந்தால் தவறாமல் பாருங்க.
{{comments.comment}}