சென்னை: அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தரப்பு தீவிரமாக களம் இறங்கியுள்ளதாம். புதுச்சேரியைச் சேர்ந்த மிக முக்கியப் புள்ளி ஒருவர் மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக தரப்பு தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக புதுச்சேரியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அதிமுக - பாஜக இணைந்து கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டன. இந்த கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. ஆனால் இந்தக் கூட்டணியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. மாறாக, இருந்த ஆட்சியையும் அதிமுக பறி கொடுத்தது. திமுக 10 வருடம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதல்வரானார்.
சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் பெரும் பிரளயம் ஏற்பட்டது. முதலில் ஓ.பி.எஸ். கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து பாஜகவை கூட்டணியிலிருந்து விலக்கி அதிமுக முடிவெடுத்தது. அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையிலான மோதலால் அரசியல் அரங்கே பரபரப்பானது.
அண்ணாமலை தலைமை மீது கடும் கோபத்துடன் இருந்த அதிமுக தரப்பு மேல்மட்டத் தலைவர்கள் இனி பாஜகவுடன் கூட்டணியும் கிடையாது, உறவும் கிடையாது என்று கூறி விட்டனர். இந்த விவகாரம் அப்படியே நீடிக்கிறது. ஆனாலும் அதிமுக இல்லாமல் தனித்துப் போட்டியிடத் தயங்கிய பாஜக, கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயற்சித்தது. ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வராததால் கூட்டணி அமையும் வாய்ப்பு ஏற்படவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவும், பாஜக கூட்டணியில் பாமகவும் இணைந்து கூட்டணி பிரிந்து போட்டியிட்டது. யாருக்குமே வெற்றி கிடைக்கவில்லை. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் பாஜக, அதிமுக கூட்டணிகள் தோல்வியைத் தழுவின. திமுக பெரும் வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில் வருகிற 2026 சட்டசபைத் தேர்தலை மிகப் பெரிய அளவில் பலத்துடன் சந்திக்க அதிமுகவும், பாஜகவும் தீவிரமாக உள்ளன. காரணம், போட்டிக் களத்தில் தற்போது விஜய்யும் இறங்கியுள்ளார். ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இப்படிப் போட்டியிட்டால் நிச்சயம் திமுகதான் ஜெயிக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். எனவேதான் கூட்டணிக்காக மீண்டும் அதிமுகவை உள்ளே இழுக்க பாஜக முடிவு செய்துள்ளதாம். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க சில முயற்சிகளில் பாஜக தரப்பு இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அண்ணாமலை மாற்றம்?
அதிமுக கூட்டணியை விட்டு விலக முக்கியக் காரணமே அண்ணாமலைதான். அவர் தவிர்த்து வேறு சில 2ம் நிலைத் தலைவர்களின் அடாவடிப் பேச்சுக்களும் கூட அதிமுகவை கோபப்படுத்தியதால்தான் அவர்கள் கூட்டணி கிடையாது என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். எனவே இந்த பிரச்சினையை முதலில் சரி செய்ய பாஜக மேலிடம் தீர்மானித்துள்ளதாம். அதாவது முதலில் அண்ணாமலையை மாற்றுவது. அவரை ராஜ்யசபா எம்.பி ஆக்கி மத்திய அமைச்சர் பதவி கொடுத்து டெல்லிக்கு அழைத்துச் செல்வது. அதேபோல அதிமுகவை கடுமையாக விமர்சித்த வேறு சில தலைவர்களையும் கூட டம்மியாக்குவது.
அண்ணாமலைக்குப் பதிலாக புதிதாக வரும் தலைவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியைக் கொண்டவராக இருப்பாராம். அதேசமயம், அவர் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் இணக்கமானவராக இருக்கும் வகையிலான தலைவராக பார்த்து அவரை மாநிலத் தலைவராக்குவது என்ற திட்டத்தில் பாஜக உள்ளதாம். இதைச் செய்தாலே அதிமுக தரப்பில் உள்ள அதிருப்தியும், கோபமும் பாதி குறைந்து விடும் என பாஜக கணக்கு போடுகிறது.
புதுச்சேரி புள்ளி
இதுதவிர இன்னொரு பக்கம் வேறு ஒரு முயற்சியையும் பாஜக கையில் எடுத்துள்ளதாம். புதுச்சேரியில் ஒருவர் இருக்கிறார். அந்தப் புள்ளி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்கிறார்கள். புதுச்சேரி வட்டாரத்தில் மிகவும் பிரபலமான இந்த புள்ளி மிகப் பெரிய பணக்காரர், மல்ட்டி மில்லியனர். பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவரை தங்களது வட்டத்துக்குள் பாஜக கொண்டு வந்துள்ளதாம்.
இந்த புள்ளியின் மூலமாக தற்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசி, அதிமுகவை பாஜக கூட்டணியில் சேர்க்க பாஜக தரப்பு தீவிர முயற்சி எடுத்து வருகிறதாம். புதுச்சேரிக்கு புள்ளிக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட் எப்படியாவது அதிமுகவை கூட்டணியில் இணைய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நல்லது என்று அந்த புள்ளிக்கு விவரமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதாம்.
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்த அந்த புள்ளி தற்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் இதுகுறித்துப் பேசியுள்ளதாக சொல்கிறார்கள். இப்படி திரைமறைவில் நடந்து முயற்சிகளின் எதிரொலியாகத்தான், பாஜகவுடன் கூட்டணியா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, எங்களது கருத்துக்களுடன் ஒத்து வருகின்ற அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டணி வைப்போம் என்று மழுப்பலான பதிலை எடப்பாடியார் சொன்னதாக சொல்கிறார்கள்.
அதிமுக கூட்டணியில் மாற்றம்
பாஜக எடுத்து வரும் முயற்சிகள் தீவிரமடைந்து வருவதாலும், பல்வேறு விதமான செய்திகள் எடப்பாடியார் தரப்புக்கு பரிமாறப்பட்டுள்ளதாலும், அவருக்கு சாதகமான தலைமையை பாஜக மேலிடம் செய்யும் என்று கருதப்படுவதாலும், அனேகமாக மீண்டும் பாஜக கூட்டணிக்கு அதிமுக போகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் அதிமுக தரப்பிலுமே கூட வலுவான கூட்டணி அமைக்காவிட்டால் மீண்டும் பெரும் தோல்வியே கிடைக்கும் என்ற கருத்து நிலவுகிறதாம்.
அதிமுக மேல் மட்ட தலைவர்கள் பலரும் கூட மீண்டும் பாஜகவுடன் சேரலாம், அண்ணாமலை மட்டும்தானே நமக்குப் பிரச்சினை, அவரை மாற்றி விட்டால் நமக்கு பிரச்சினை இல்லையே.. அப்படி செய்தால் நாம் தாராளமாக கூட்டணியை அமைக்கலாம். அதுதான் நமது கட்சிக்கும் நல்லது. இல்லாவிட்டால் மீண்டும் பெரும் தோல்வியைத் தழுவினால் கட்சி உடைந்து சிதறி விடும் என்ற கருத்தை எடப்பாடியாரிடம் சில தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனராம்.
ஒருவேளை அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஒப்புக் கொண்டால், அக்கூட்டணியில் பாமகவும், தேமுதிகவும் இடம் பெறலாம். இந்தக் கூட்டணி தேர்தலை சந்திக்கும்போது தமிழ்நாடு பாஜகவின் தலைவராக வேறு ஒருவர் இடம்பெற்றிருக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}