சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 75 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி அதனை முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோருக்கு ஊட்டி விட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வழக்கமாக ஜெயலலிதாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடும் அதிமுக தொண்டர்கள் இம்மமுறை உற்சாகம் சற்று தூக்கலாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தான்.
அதிமுகவின் பொதுச்செயலர் மற்றும் பொதுக்குழுவுக்கான தீர்ப்பை நேற்று உச்சநீதிமன்றம் வெளியிட்டது. அதில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும், ஜூலை 11ல் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.
இந்நிலையில், இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அதை குறிப்பிடும் விதமாக 75 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடினர்.
வெட்டிய கேக்கை எடப்பாடி பழனிசாமி அருகில் வலது புறத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு முதலில் ஊட்டினார். பின்னர் மற்றொரு கேக் துண்டை இடது புறத்தில் இருந்த கோகுல இந்திராவுக்கு ஊட்ட இடமே குதூகலமானது. வளர்மதியும் தன் பங்குக்கு ஸ்பூனில் எடுத்து எடப்பாடிக்கு ஊட்டி விட்டார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜெயலலிதாவின் பிறந்தநாள் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் செம ஹாப்பியில் இருந்து வருகின்றனர்.
{{comments.comment}}