சென்னை: U Turn திமுக அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார்.
திமுக அரசு சமீப காலமாக பல்வேறு குளறுபடிகள் காரணமாக மக்களிடையே விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மிகப் பலவீனமான எதிர்க்கட்சிகள் இருந்தபோதும் கூட, திமுக அரசு அவர்களது வாய்க்கு அவ்வப்போது அவல் போட்டு வருவதாக அரசியல்விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஒரு அறிவிப்பு வெளியாகும் பின்னர் அது வாபஸாகும் அல்லது ரத்து செய்யப்படும். இப்படி பல குளறுபடிகள் திமுக அரசில் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் 12 மணி நேர வேலை மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது வாபஸ் பெறப்பட்டது. அதேபோல திருமண மண்டபங்களில் மது அருந்தலாம் என்று அரசாணை வெளியாகி பலத்த எதிர்ப்பு காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள ட்வீட்டில், தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து, பள்ளி கல்வி துறையில் LKG வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இந்த நிர்வாக திறனற்ற அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று எடப்பாடி பழனிச்சாமி போட்ட டிவீட்டில், மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள்.
மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி என்று சாடியிருந்தார்.
{{comments.comment}}