சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது கஸ்டடியில் எடுத்துள்ளனர். அவரை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள் அமலாக்கத்துறை காவலில் அனுமதித்து நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 12ம் தேதி வரை அவரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு கஸ்டடி கோரி அமலாக்கத்துறை மனு செய்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் விசாரணைக் காலத்தின்போது தினசரி 2 முறை காவிரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை வழக்கறிஞர் , செந்தில் பாலாஜிக்குத் தேவையான மருத்துவ உதவியை நாங்களே பார்த்துக் கொள்வோம் என்று உச்சநீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி அல்லி, அவரை அமலாக்கத்துறை காவலில் அனுமதித்து உத்தரவிட்டார். அதன் பின்னர் இந்த உத்தரவுடன், சென்னை புழல் சிறைக்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை தங்களது காவலில் எடுத்தனர்.
அதன் பிறகு அவரை சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனில்அமைந்துள்ளது தங்களது அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் செந்தில் பாலாஜி கொண்டு வரப்பட்டுள்ளார்.
பண மோசடி புகார் தொடர்பாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அவரது இடங்களில் ரெய்டுகளும் நடத்தப்பட்டன. இதன் இறுதியில் அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
கைதுக்குப் பின்னர் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு காவிரி மருத்துவமனையில் இருதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
{{comments.comment}}