சென்னை: உதயநிதி நடிகர் அஜித்துக்கு வாழ்த்து செல்கிறார். எதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். விஜய்க்கு கோபம் வருவதற்காக தான் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா என எனக்கு தெரியவில்லை என்று பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டை விஜய் கடந்த 27ம் தேதி வெற்றிகரமாக நடந்தி முடித்துள்ளார். அந்த மாநாட்டில் "திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். மக்கள் ஆட்சி என்ற பெயரில் குடும்ப ஆட்சி நடத்தி ஊழல் செய்பவர்கள் தான் எங்களின் முதல் எதிரி" என்று திமுக.,வை தாக்கி பேசியிருந்தார். இது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் அஜித்துக்கு தனது சமூக வலைதளத்தில், நம்முடைய SDAT Logoவை அஜித்குமார் ரேசிங் யூனிட்டின், கார்,ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. இதன் மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி,ஊக்குவித்துள்ள அஜித்குமாருக்கு SDAT சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அவர் மட்டும் இல்லாமல் திமுக அமைச்சர்கள் சிலரும் அஜீத்தை வாழ்த்தியிருந்தனர். அதேபோல திமுகவினர் பலரும் கூட அஜீத்தை வாழ்த்தி வருகின்றனர். இது பேசு பொருளாகியுள்ளது. விஜய் மீது உள்ள கோபத்தால்தான் அஜீத் ரசிகர்களின் ஆதரவைப் பெற அஜீத்தை திமுகவினர் வாழ்த்தி வருவதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து டாக்டர் தமிழிசையும் கருத்து தெரிவித்துள்ளா். நந்தனம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், உதயநிதி நடிகர் அஜித்துக்கு வாழ்த்து செல்கிறார். எதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். விஜய்க்கு கோபம் வருவதற்காக தான் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா? என எனக்கு தெரியவில்லை. ஆனால், உலக அரங்கில் விளையாட்டை முன்னிறுத்த அஜித்துக்கு வாழ்த்து கூறிவிட்டு, சாமானிய மக்கள் விளையாடும் மாநகராட்சி விளையாட்டு திடல்களுக்கு 10 பேர் பயிற்சி பெற்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 1200 கட்ட வேண்டும் என்று மிகக் கொடுமையான தீர்மானத்தை மாநகராட்சி நிறைவேற்றி இருக்கிறது. (தற்போது அந்த முடிவை மாநகராட்சி திரும்பப் பெற்று விட்டது)
சாமானிய மக்கள் பயன்படுத்தும் விளையாட்டு திடலுக்கு கட்டணம் விடுத்து இருப்பதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. போதைப்பொருள் தடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் மாதாவரத்தில் 27 கோடி ரூபாய் போதை பொருட்கள் பிடிக்கப்பட்டிருக்கிறது. போதைப் பொருளிலிருந்து குழந்தைகளை வெளியில் கொண்டு வர விளையாட்டு தேவை. அனைத்து மக்களும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் தீபாவளியை கொண்டாட வேண்டும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}