சென்னை: தமிழ்நாட்டின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால், யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக்கோரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு ஏற்ப திமுக மாணவரணியின் சார்பில் 06.02.2025 அன்று போராட்டம் நடத்தப்படும் என்றும், திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள் என்றும் திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம்
ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை - அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட - ஆளுநர்களுக்கு “நடத்தை விதிகள்” (Code of Conduct) உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் (Time Frame) செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக வலியுறுத்தும்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஓர் அங்கம். ஆனால் அந்த அவையின் மரபை மதிக்கமாட்டார். சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவார். மாநில அரசின் “Constitutional Head” ஆளுநர். ஆனால் மாநில அரசின் ஆளுநர் உரையை படிக்கமாட்டார். தமிழ்த்தாய் வாழ்த்தை சிறுமைப்படுத்துவார். சமஸ்கிருதம் - இந்தி மொழி புகழ் பாடுவார்.
ஆளுநர் மாளிகையின் ஒட்டுமொத்த செலவும் மாநில அரசின்- அதாவது மாநிலத்து மக்களின் வரிப்பணம். ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு வழிகாட்ட வேண்டியவர் ஆளுநர் மாளிகையில் அமர்ந்து எதிர்கட்சித் தலைவர் போல் அரசியல் செய்வார். பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து "துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகத்தை” உருவாக்குவார். ஆனால் அதே பல்கலைக்கழகங்களில் பா.ஜ.க. அரசியல் பிரசங்கம் செய்வார். அக்கப்போர் அரசியல் மட்டுமே ஆளுநரின் அஜெண்டாவாக இருக்கிறது.
“ஆளுநரை நியமிப்பதற்குப் பதில் ஏன் தேர்ந்தெடுக்க கூடாது' என அரசியல் நிர்ணய சபையில் விவாதித்த போது - “அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடுவார். அப்படி அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது ஜனநாயகத்தை அடிமைப்படுத்துவது போலாகிவிடும் (amount to surrender of democracy)" என சட்ட அறிஞர்கள் குறிப்பிட்டனர். நியமிக்கப்பட்ட ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று அதைத்தான் அடாவடியாகச் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியிலோ, தமிழ்நாட்டு மக்களின் நலனிலோ, தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திலோ அவரே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அரசியல் சட்டத்திலோ நம்பிக்கை துளிகூட இல்லை. அவருக்கு இருக்கும் ஒரே ஆர்வம் வெகுஜன விரோத வலதுசாரி அரசியல் மட்டும் தான். அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
அரசின் கொள்கை முடிவுகளை நிறைவேற்ற முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து துணை நிற்க வேண்டிய அரசியலுக்கு அப்பாற்பட்டவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்" என அரசியல் நிர்ணய சபை எதிர்பார்த்தது. ஆனால் ஆளுநர் ரவி நியமனத்தில் அது தவிடுபொடியாகிப் போனது என்பதை இந்த எம்.பி.க்கள் கூட்டம் மிகவும் வேதனையுடன் பதிவு செய்ய விரும்புகிறது.
சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா அவர்கள், "இந்தியாவில் உள்ள ஆளுநர்கள் எங்கு செயல்படக் கூடாதோ அங்கு செயல்படுகிறார்கள். எங்கு செயல்பட வேண்டுமோ அங்கு செயல்படாமல் இருக்கிறார்கள்" எனக்குறிப்பிட்டு, “ஆளுநர்கள் பற்றிய வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருவது சோக கதை" என்றார். (Governors in India were playing a role where they ought not to be and were inactive when they should be playing an active role. Cases coming to the court on Governors is a sad Story).
இந்த கருத்திற்கு முற்றிலும் பொருத்தமான ஒரு ஆளுநராக தமிழ்நாடு ஆளுநர் ரவி இருப்பது உள்ளபடியே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளது. அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்கவே ஆளுநராக அமர்ந்து இருக்கிறார்.
குடியரசு தினத்தில் கூட அரசியல் செய்வதை அவர் விட்டு வைக்கவில்லை. எந்த எதிர்கட்சியும் கூட குடியரசு தின வாழ்த்தில் அரசை குறை கூறுவதில்லை. ஆனால் "By Order of Governor” என ஒவ்வொரு ஆணையும் வெளிவரும் தன் அரசையே குடியரசு தின வாழ்த்தில் குறை சொல்லி -நாட்டின் பெருமையை - தமிழ்நாட்டின் சிறப்பை சிறுமைப்படுத்தியதற்கு இக்கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை- அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர் ஒருவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற நன்னடத்தை விதிகளை (Code of Conduct) உருவாக்கிட வேண்டும் என்றும், மாநில அரசின் கோப்புகள், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் ஆகியவற்றில் கையெழுத்திட ஆளுநருக்கு காலநிர்ணயம் (Time Frame) செய்ய வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள அந்த கோரிக்கையையும் நடைபெற இருக்கும் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் வலியுறுத்திட இந்த எம்.பி.க்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலம் ரத்து - முதல்வருக்கு நன்றி
மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசை பணிய வைத்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதலமைச்சர் அவர்களுக்கும், துணை நின்ற மக்களுக்கும் நன்றி!
மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கடும் அழுத்தம் கொடுத்து மதுரை அரிட்டாப்பட்டியில் அமையவிருந்த டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை தடுத்து நிறுத்தி - மூன்றே மாதங்களில் கொடுத்த அனுமதியை ஒன்றிய அரசே ரத்து செய்ய வைத்து வெற்றி வாகை சூடிய வணிகர்கள் உள்ளிட்ட போராடிய அனைத்து மக்களுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் இக்கூட்டம் நன்றியினையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த கனிம சுரங்க அனுமதி கொடுக்க கூடாது என தமிழ்நாடு அரசின் மூலம் 3.10.2023இல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. 23.11.2024, வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு நடத்திய போது அமைச்சர் மூர்த்தி அவர்கள் அரசின் சார்பில் "கனிமச் சுரங்கத்தை தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதிக்காது" என உறுதிமொழி அளிக்கப்பட்டது. உடனே ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார் முதலமைச்சர் அவர்கள். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில இக் கனிம சுரங்க திட்டத்த ரத்து செய்ய வேண்டும் என 9.12.2024 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவற்றிற்கு எல்லாம் உச்சகட்டமாக, "தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் வரை இந்த கனிம சுரங்க திட்டத்தை அனுமதிக்க மாட்டேன்” என்ற முதலமைச்சர் அவர்களின் பேச்சு, போர்ப்பிரகடனமாகவே அமைந்திருந்தது. இவை அனைத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளின் முன்பு அடிபணிய வைத்தது. டங்க்ஸ்டன் கனிம சுரங்க அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பானது ஜனநாயக ரீதியில் - மாநில உரிமைகளை பாதுகாக்கும் திராவிட மாடல் அரசின் போராட்டத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்றே இக்கூட்டம் பதிவு செய்ய விரும்புகிறது. மக்கள் நலனைக் காக்க இறுதிவரை உறுதியாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டுதல்களை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ் நிலத்தில் அறிமுகமான இரும்பு - பிரதமருக்கு கோரிக்கை
“உருக்கு இரும்பு 5370 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளது” என உலகுக்கு அறிவித்த திராவிட மாடல் அரசின் சாதனையை ஒன்றிய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது!
“இரும்பின் தொன்மையை நாட்டுக்கு அறிவித்தல்" "இரும்பின் தொன்மை நூலை வெளியிடுதல்" "கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்" "கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம்" ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், “கீழடி இணையத் தளத்தை தொடங்கி வைத்தல்” என தமிழ் பண்பாட்டை உலகுக்கு எடுத்துச் செல்லும் “ஐம்பெரும் விழாவை” நடத்தி - “உருக்கு இரும்பு தொழில்நுட்பம் 5370 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது " என்று உலகிற்கு அறிவித்து - தமிழ்நாட்டின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு இந்தியாவின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே எழுதப்படும் சூழலை உருவாக்கியுள்ள திராவிட மாடல் அரசின் கதாநாயகன் முதலமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ் மண்ணின் இந்த கண்டுபிடிப்பை இந்திய தேசிய காங்கிரஸின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் பாராட்டியிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் இக்கூட்டம் ஒன்றிய அரசு சார்பில் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சியை முன்னெடுக்கவில்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்வதோடு, ஒன்றிய அரசும், பிரதமர் அவர்களும் தமிழ்நாட்டின் தொன்மை பற்றிய இந்த நிகழ்வை முன்னெடுக்க வேண்டும் என இந்த எம்.பி.க்கள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
டெல்லியில் திமுக மாணவர் அணி போராட்டம்
கூட்டாட்சி தத்துவம் மாநில கல்வி உரிமை - உயர் கல்வி அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரி கழக மாணவரணி கழக எம்.பி.க்கள் போராட்டம்!
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை ஆளுநரே நியமிக்கும் அதிகாரத்தை வழங்கி பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 9.1.2025 அன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி - மாநிலத்தின் கல்வி உரிமையை நிலைநாட்டியுள்ள முதலமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.
நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியையும் பாழ்படுத்தி ஒன்றியத்தில் 5 ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வினரின் கொள்கைகளை மாநிலங்களிலும் கொண்டுவர மேற்கொள்ளப்படும் இந்த வரைவு நெறிமுறைகளையும், இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கு குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள், 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள் 2025 ஆகியன தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் உள்ளதோடு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.
குறிப்பாக தமிழ்நாட்டின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால், இந்த வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக்கோரி, கழகத் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளதற்கு ஏற்ப கழக மாணவரணியின் சார்பில் 06.02.2025 அன்று போராட்டம் நடத்தப்படும் என்றும், கழக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள் என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
வக்பு சட்ட திருத்த மசோதா- மத்திய அரசுக்குக் கண்டனம்
சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்!
சிறுபான்மையினரின் நலனைப் பாதிக்கும் வக்ப் சட்ட திருத்த மசோதா 2024-யை கொண்டு வந்து - நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலும் முறைப்படி விவாதம் நடத்தாமல்- எதிர்கட்சி உறுப்பினர்களை எல்லாம் வெளியேற்றி ஆரோக்கியமான விவாதமே பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிநாதம் என்பதை மறந்து - எதிர்கட்சிகள் அளித்த 44 திருத்தங்களையும் ஏற்காமல் அவசர அவசரமாக டெல்லித் தேர்தலை மனதில் வைத்து ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்ற துடிப்பதற்கு இந்த எம்.பி.க்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இச்சட்டத் திருத்தம் மீண்டும் அவையில் கொண்டு வரப்படும்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக தலைவரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தீவிரமாக எதிர்த்து வாக்களித்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தமிழ்நாட்டுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் தேவை
தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்த முறை தமிழ்நாட்டின் திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்திற்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவித்திட வேண்டும்!
ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதி நிலை அறிக்கைகளில் இதுவரை தமிழ்நாட்டிற்கு முத்திரைத் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. ரயில்வே திட்டங்களில் தமிழ்நாடு அடியோடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. நம் மாநிலம் நேரடி வரியாக ஒன்றிய அரசுக்கு 100 ரூபாய் கொடுத்தால், நம் மாநிலத்திற்கு 29 ரூபாய் மட்டுமே திருப்பித் தரப்படுகிறது. ஆனால் 100 ரூபாய் கொடுக்கும் பா.ஜ.க. ஆளும் அஸ்ஸாம் மாநிலத்திற்கு 354 ரூபாயும், உத்தரபிரதேச மாநிலத்திற்கு 333 ரூபாயும், மத்திய பிரதேசத்திற்கு 279 ரூபாயும், ஒன்றிய ஆட்சியை தக்க வைக்க உதவும் கூட்டணிக் கட்சி ஆளும் பீஹார் மாநிலத்திற்கு 922 ரூபாயும் திருப்பி கொடுக்கிறார்கள் என்றால் தமிழ்நாடும்- தமிழ்நாடு மக்களும் நிதி ஒதுக்கீட்டில் எவ்வளவு மோசமாக வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
இதே நிலைதான் வருவாய் பகிர்வு மற்றும் மானியப் பகிர்வு அனைத்திலும் நீடிக்கிறது. தமிழ்நாடு அனைத்து வகை நிதி ஆதாரத்திலும் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்பதை இக்கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது.
கடந்த நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு என்ற பெயரே இல்லாமல் தாக்கல் செய்த ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த முறை நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி, பேரிடர் நிதி உள்ளிட்டவற்றை ஒதுக்கீடு செய்யதிடவும், தமிழ்நாட்டிற்கு என்று முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை அறிவித்திடவும் ஒன்றிய பா.ஜ.க. அரசை இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவறான கணிப்பு.. மக்கள் வானிலை மையத்தை கேள்வி கேட்கணும்.. தமிழ்நாடு வெதர்மேன் ஆவேசம்!
சண்டிகர் மேயர் தேர்தல்.. பாஜக அதிரடி வெற்றி.. அதிர்ச்சியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி
கவனிக்காத பிள்ளைகள்.. சிலிண்டரை வெடிக்க வைத்த டாக்டர்.. மனைவி பலி.. மயிலாடுதுறையில் கொடுமை
வாஷிங்டனுக்கு மேலே.. நடு வானில் மோதிக் கொண்ட விமானமும் ஹெலிகாப்டரும்.. 19 பேர் பலி
ரோடுகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. வளைத்துப் பிடித்து ரூ. 1.30 கோடியை வசூலித்த சென்னை மாநகராட்சி!
தினம் ஒரு கவிதை.. என்னுயிர் அம்மா
பாஜகவுக்கு எதிராக கடுமையாக களமாடியவர்.. நடிகை வினோதினி மநீமவிலிருந்து விலகியது ஏன்?
கருவேப்பிலை புளிக்குழம்பு.. செஞ்சு பார்த்து சாப்பிடுங்க.. சும்மா ஜம்மு ஜம்முன்னு இருக்கும்!
தேசத் தந்தை மகாத்மா காந்தி நினைவு நாள்.. முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
{{comments.comment}}