சென்னை: பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுகவினருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை விமர்சிக்க தகுதியே இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆளுநர் ரவி சமீபத்தில் பேசுகையில், இந்தியா ஒரு கருத்தை வைத்தால், தமிழ்நாடு அதை எதிர்க்கிறது, தனியாக நிற்கிறது. தமிழ்நாடு என்ற வார்த்தையே தவறு. தமிழகம் என்பதுதான் பொருத்தமானது என்று கூறியிருந்தார்.
ஆளுநரின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் கடுமையாக கண்டித்து பேசி வருகின்றனர். ஜெயக்குமார் அதிமுகவின் சில தலைவர்களும் கூட தமிழ்நாடு என்பதே சரியானது. நாங்கள் அண்ணாவின் வழியில் வந்தவர்கள், தமிழ்நாடு என்பதைத்தான் ஏற்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு என்ற வார்த்தை டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது. தேசிய அளவில் அது டிரெண்ட் ஆகி வந்தது. இந்த நிலையில் திமுகவினரின் இந்த பிரசாரத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டுகள்:
திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுக கட்சியினருக்கு ஆளுநர் ஆர். என்.ரவியை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?
தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்லும் நீங்கள் ஆளுநரின் உரையில் என்ன குறை கண்டீர்?
சங்க கால இலக்கியங்களில் தமிழகம், தமிழ்நாடு என்ற இரு சொற்களும் இடம்பெற்றிருக்கின்றன.
தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது மாண்புமிகு தமிழக ஆளுநரின் கருத்து. அதை திமுகவினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை. 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநில புனரமைவுக்குப் பிறகு திராவிட நாடு கோரிக்கை தனித்தமிழ்நாடு என்று சுருங்கியது.
இன்றளவும் தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து முழங்கும் பிரிவினைவாத விஷ செடிகளை வளர்த்து விட்டதில் திமுகவின் பங்கு அனைவரும் அறிவர். வழக்கம்போல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சியில் உள்ள குளறுபடிகளை மறைப்பதற்காக திசைதிருப்பும் முயற்சியாகவே திமுகவினரின் செயல்பாடுகள் உள்ளது என்று அண்ணாமலை சாடியுள்ளார்.
{{comments.comment}}