சென்னை: திமுக கூட்டணியில் விரிசல் விழும் என்று பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எங்களுக்குள் முரண்பாடுகள் எழும். ஆனால் கூட்டணியில் விரிசல் விழாது. உங்களது ஆசையில்தான் மண் விழும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்த நாளை நாளை கொண்டாடவுள்ளார். இதையடுத்து சென்னை கொட்டிவாக்கத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார். அவரது பேச்சிலிருந்து:
உங்களால் நான்
72-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நான் – 75-ஆவது ஆண்டு பவள விழா கொண்டாடிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகப் பணியாற்றி வருவதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை! கோடான கோடி உடன்பிறப்புகள் - இங்கு என்னை வாழ்த்திய தலைவர்கள் – தமிழ்நாட்டு மக்கள் - உங்களால்தான் நான் முதலமைச்சராக அமர வைக்கப்பட்டிருக்கிறேன்! தி.மு.க. தலைமை பொறுப்பாக இருந்தாலும் – தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பாக இருந்தாலும் – இரண்டுமே பேரறிஞர் அண்ணா இருந்த இடம்! நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் அமர்ந்த இடம்! அந்த இடத்தில், இந்த சாதாரண – சாமானிய ஸ்டாலினையும் உட்கார வைத்தது, கழகத்தின் கோடான கோடி உடன்பிறப்புகள்தான்! உங்களின் இல்லத்துக்கும் – உள்ளத்துக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்!
நான் ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறேன்... இது, நான் நினைத்துப் பார்க்காத இடம்... இது, நான் நினைத்துப் பார்க்காத உயரம்! இந்த இடத்துக்கு என்னை அழைத்துக் கொண்டு வந்தவர்கள், உடன்பிறப்புகளான நீங்கள்தான்! கோபாலபுரம் நான் பிறந்த இடமாக இருந்தாலும் – தமிழ்நாடு முழுவதும்தான் என்னை வளர்த்தது! ஏன் என்றால், 60 ஆண்டுகாலமாகத் தமிழ்நாட்டில் கிழக்கு – மேற்கு, வடக்கு – தெற்கு, கிராமம் – நகரம், குறுக்கு – நெடுக்கு, வெயில் – மழை, இரவு – பகல், பசி – தூக்கம் பார்க்காமல், ஓடியாடி உழைத்து, கருப்பு – சிவப்புக் கொடியை ஏற்றியதால்தான், கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது! ஓயாமல் உழைத்த தலைவர் கலைஞரின் வழித்தடத்தில், நானும் ஓயாமல் உழைக்கிறேன். தலைவரான பிறகும் உழைக்கிறேன்… முதல்வரான பிறகும் உழைக்கிறேன்! அண்ணாவின் தம்பிக்குக் – கலைஞரின் உடன்பிறப்புக்கு ஓய்வும் இல்லை; சாய்வும் இல்லை என்ற எண்ணத்துடன் உழைக்கிறேன்! அதனால், இதுபோன்ற பிறந்தநாள் விழாக்கள் நெடுஞ்சாலைப் பயணத்தில் வரும் ஸ்பீட்-பிரேக் போல; ஒரு நிமிட ஓய்வு; அவ்வளவுதான்!
இந்த இனிய விழாவை, நான் மகிழத்தக்க வகையில் ஏற்பாடு செய்திருக்கும் மாரத்தான் அமைச்சர் - சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும்; அவருக்குத் துணைநின்ற சென்னை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், கழகத் தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! நன்றி!
இந்த நிகழ்ச்சியில் எனக்கு என்ன மகிழ்ச்சி என்றால், இது பிறந்தநாள் வாழ்த்துக்காக மட்டும் இல்லாமல், நம்முடைய தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் இணைந்து, மூத்த அமைச்சரும் கழகப் பொதுச் செயலாளருமான அருமை அண்ணன் துரைமுருகன் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டுக்கான உரிமைக்குரலை எழுப்புவதற்கு வாய்ப்பாக அமைந்திருப்பதுதான் என்னுடைய மகிழ்ச்சிக்குக் காரணம்!
மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களும் - சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களும் - அண்ணன் வைகோ அவர்களும் - தோழர்கள் சண்முகம் அவர்களும், முத்தரசன் அவர்களும் – என் பாசமிகு சகோதரர் திருமாவளவன் அவர்களும் - பேராசிரியர்கள் அய்யா காதர் மொய்தீன் அவர்களும், ஜவாஹிருல்லா அவர்களும் – அதேபோல, சகோதரர்கள் ஈஸ்வரன் அவர்களும், வேல்முருகன் அவர்களும், அருணாச்சலம் அவர்களும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும், பொன்.குமார் அவர்களும், ஸ்ரீதர் வாண்டையார் அவர்களும், எர்ணாவூர் நாராயணன் அவர்களும், முருகவேல்ராஜன் அவர்களும், கருணாஸ் அவர்களும், அதியமான் அவர்களும், அம்மாசி அவர்களும், தமீமுன் அன்சாரி அவர்களும், திருப்பூர் அல்தாப் அவர்களும், வசீகரன் அவர்களும் என இந்த மேடையே, உரிமைக்களமாக - வெற்றிக்கான அடித்தளமாக அமைந்திருக்கிறது.
இது 2026ம் ஆண்டுக்கான வெற்றி மேடை
பிறந்தநாள் விழா மேடையைப் போல் இல்லை, வெற்றி விழா மேடையைப் போல் இருக்கிறது! ஆமாம், இது வெற்றி விழா மேடைதான்! 2019-இல் இருந்து கொள்கைக் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று வரும் நாம், 2026-இலும் அடைய இருக்கும் வெற்றிக்குத் தொடக்க விழா மேடை இது! என்னைச் சந்திப்பவர்கள், ‘உங்கள் வெற்றிக்கு எது அடிப்படை?’ என்று கேட்டால், எங்களின் தோழமை உணர்வுதான் என்று அனைத்து இடத்திலும் மறக்காமல் பதிவு செய்பவன் நான்! ஏன், தமிழ்நாடு சட்டமன்றத்திலேயேகூட பதிவு செய்திருக்கிறேன்! ஊடக நண்பர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, கருத்தியல் கூட்டணி அமைத்திருக்கும் எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். ஆனால், விரிசல் வராது! எங்களின் ஒற்றுமையை எரிச்சலுடன் பார்த்து, விரிசல் வருமா என்று சிலர் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கலாம்... அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, உங்களின் ஆசையில்தான் மண் விழுமே தவிர; எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது!
தோழமைக் கட்சித் தலைவர்களே... என்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்தவர்கள் நீங்கள். உங்களை எப்போதும் என்னுடைய இதய நாற்காலியில் நான் உட்கார வைத்திருக்கிறேன்! உங்களுக்கு நான் உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன்... நம்முடைய ஒற்றுமைதான், தமிழ்நாட்டைக் காப்பாற்றியிருக்கிறது! தமிழைக் காப்பாற்றியிருக்கிறது! சமூகநீதியைக் காப்பாற்றியிருக்கிறது! சகோதரத்துவத்தைக் காப்பாற்றியிருக்கிறது! ஒற்றுமையைக் காப்பாற்றியிருக்கிறது! ஏன், ஒட்டுமொத்த இந்தியாவையே காப்பாற்றியிருக்கிறது!
அதிமுக கூட்டணி வென்றிருந்தால் என்னாகியிருக்கும்!
நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்... 2021-இல் தப்பித்தவறி அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருந்தால், இன்று தமிழ்நாடு தரைமட்டத்துக்குச் சென்றிருக்கும்! தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளும் அ.தி.மு.க. கொத்தடிமைகளால் அடகு வைக்கப்பட்டிருக்கும்! அ.தி.மு.க.-வை மிரட்டிப் பணிய வைத்து, அவர்கள் கட்சியையும் - தமிழ்நாட்டையும் கபளீகரம் செய்திருக்கும் பா.ஜ.க.!
இந்தக் கொடிய சக்திகளிடம் இருந்து, தமிழ்நாட்டை மீட்ட கூட்டணி, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! இன்றைக்கு, இந்தியாவுக்கு வழிகாட்டும் கூட்டணியும் நமது கூட்டணிதான்! தமிழ்நாட்டை மற்ற மாநில மக்கள் எல்லாம், வியந்து பார்க்குற வகையில் திராவிட மாடல் ஆட்சியைச் சிறப்பாக நடத்தி வருகிறோம்.
இதை ஒன்றிய பா.ஜ.க. அரசால், தாங்கிக் கொள்ள முடியவில்லை! நம்முடைய மாநிலத்துக்கான எந்த நன்மையையும் செய்வது இல்லை! பிறகு, என்ன செய்கிறார்கள்? எப்படியெல்லாம் தமிழ்நாட்டை வஞ்சிக்கலாம் என்று பார்த்து பார்த்துச் செய்கிறார்கள்... நீட் தேர்வைத் திணித்தார்கள். புயல் – வெள்ளம் என்று பேரிடர் வந்தால், நிதி கொடுப்பதில்லை! இப்படி தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்!
கல்வியைச் சீர்குலைக்க முயல்கிறது பாஜக
இப்போது சமீப காலமாக, தமிழ்நாடு எதனால் முன்னணியில் இருக்கிறது என்று பார்த்தவர்கள், கல்வியால்தான் இவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, அந்தக் கல்வியைச் சீர்குலைக்க, தேசிய கல்விக் கொள்கையைத் திணித்தால் இவர்கள் கீழே சென்றிடுவார்கள் என்று நினைத்தார்கள்... ஆனால், நாம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை! அதனால் உடனே நிதி தரமாட்டோம் என்று சொல்கிறார்கள்... நான் வேதனையோடு சொல்கிறேன், பள்ளிக் குழந்தைகள் - ஆசிரியர்களுக்காகச் சம்பளம் தர்ற நிதியில் கூட, கைவைக்கும் அளவுக்குக் கொடூரமானவர்கள் கையில் இந்தியா சிக்கியிருக்கிறது!
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்ன சொல்கிறார்? “தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்றுக் கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நிதி ஒதுக்கச் சட்டத்தில் இடமில்லை" என்று மிரட்டுகிறார்!
நான் கேட்கிறேன், எந்தச் சட்டத்தில் இப்படி இருக்கிறது? மும்மொழிக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறதா? இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமா அது? உங்களுக்கு ஒரு நீட் தேர்வையே குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காத வகையில் நடத்தத் தெரியவில்லை. நீங்கள் தமிழ்நாட்டுக்கு அட்வைஸ் செய்கிறீர்களா? பெயர்தான் தர்மேந்திர பிரதான்! ஆனால், தருமமே உங்களிடம் இல்லையே!?
நம்முடைய குழந்தைகளின் கல்விக் கனவைச் சிதைக்கும் காரியத்தை தர்மேந்திர பிரதான் செய்ய, அதைக் கண்டிக்காமல், தடுத்து நிறுத்தாமல், மாண்புமிகு பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார். இதுதான் ஒரு பிரதமருக்கு அழகா? மாண்புமிகு பிரதமர் அவர்களே, இந்தியை எங்கள் மேல் திணிக்காதீர்கள்... எங்களுக்குத் தாய்மொழியான தமிழும் - உலகத்துடன் தொடர்பு கொள்ள ஆங்கிலமும் போதும்... தேவைப்பட்டால் இந்தி என்ன? கிரேக்கம் - இலத்தீன் மொழிகளைக்கூட அறிவியல் - தொழில்நுட்பம் மூலம் கற்றுக்கொள்ளப் போகிறோம்...
வட மாநிலத்தில் நமக்கு வரவேற்பு
இன்றைக்குத் தமிழ்நாடு இப்படி வளர்ந்திருக்கக் காரணம், நாம் தேர்ந்தெடுத்த இருமொழிக் கொள்கைப் பாதை! இந்தச் செய்திகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, நான் முரசொலியில் கட்டுரை எழுதி, அதனை நான் ட்வீட் போட்டால், எனக்கு வரும் பதில்களில், வடமாநிலத்தைச் சேர்ந்த பலரும் நம்முடைய நியாயத்தைப் உணர்ந்து, நமக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்...
ப்ரித்திக் என்பவரின் ட்வீட் என்ன தெரியுமா? “தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது சரிதான்... இந்தி மொழியால் என்னுடைய மைதிலி மொழி காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார்... அவின் என்பவர், “என்னுடைய தாய்மொழி மகதி! நான் ஸ்டாலினின் கருத்துகளுடன் ஒத்துப்போகிறேன். எங்களுடைய இளைய தலைமுறையால் மகதி மொழியைப் பேசவோ – புரிந்து கொள்ளவோ முடியவில்லை... இந்தித் திணிப்பைத் தடுங்கள்” என்று எழுதியிருக்கிறார்! இப்படி ஏராளமான பேர், இந்தி மொழியின் திணிப்பால் தங்களின் தாய்மொழிகள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது என்று எழுதியிருக்கிறார்கள்! இப்படி, அனைத்துக்கும் முன்னோடியாகவும் - அனைவருக்கும் வழிகாட்டியாகவும் இருப்பதுதான் நம்முடைய தமிழ்நாடு!
எனவே, எங்களை என்ன மிரட்டினாலும், உங்களால் இந்தி மொழியைத் திணிக்க முடியாது! மிரட்டினால், அஞ்சி நடுங்கிக் கூழைக்கும்பிடு போடுவதற்கு, அ.தி.மு.க. என்ற நினைத்தீர்களா? இது தி.மு.க.! மிரட்டினால், அடங்கிப் போகிறவர்கள் இல்லை; அடக்க நினைப்பவர்களை அடங்கிப் போக வைப்பவர்கள்! தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்மொழிக்காகவும் எத்தகைய அடக்குமுறையையும் எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்கள் நாங்கள்! இங்கு இருக்கும் நாங்கள் தமிழர்கள்! சுயமரியாதையுள்ள திராவிடர்கள்!
நாங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்
ஒன்றிய அரசு இப்போது என்ன நினைக்கிறார்கள்? இப்படி அறிவுப்பூர்வமாக - முற்போக்குச் சிந்தனையுடன் பேசுகிறார்களே! இங்கு மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் முழங்குகிறார்களே! இவர்களை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்த்தார்கள்... அதற்குத்தான், இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப்போகிறார்கள்! நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கையை - நம்முடைய பிரதிநிதித்துவத்தைக் குறைக்க நினைக்கிறார்கள்... அதனால்தான் முன்கூட்டியே இந்தப் பிரச்சினையை நாம் இப்போது கையில் எடுத்து இருக்கிறோம்.
ஏற்கெனவே, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தபோது, என்ன சொன்னார்? எதிர்காலத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகமாகப் போகிறது என்று பேசினார்... ஒன்றிய உள்துறை அமைச்சர் என்ன சொன்னார்? மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவந்தபோது, 2024 தேர்தலுக்குப் பிறகு தொகுதி மறுவரையறை இருக்கும் என்று சொன்னார். நாம் இப்போது கேள்வியெழுப்பிய பின்னர், இப்போது என்ன சொல்கிறார்கள்? பொத்தாம் பொதுவாக, தமிழ்நாட்டுக்குத் தொகுதிகள் குறையாது என்று சொல்கிறார்கள்! மற்ற மாநிலங்களுக்கு அதிகரிப்பார்களா? தெரியாது!
நாங்கள் கேட்கும் கேள்வி, நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? “மற்ற மாநிலங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் அதிகரிக்காது” என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்? முன்னாள் பிரதமர்கள் நேரு அவர்களும் – வாஜ்பாய் அவர்களும் உறுதி கொடுத்தது போன்று, பிரதமர் மோடி ஏன் உறுதி கொடுக்க மாட்டேன் என்கிறார்?
எழுத்துப் பூர்வமாக உறுதி கொடுக்க வேண்டும்
மாண்புமிகு பிரதமர் அவர்களே... எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுங்கள்! “இப்போது இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாது... 1971 மக்கள்தொகை அடிப்படையில், தமிழ்நாட்டுக்குரிய பிரிதிநிதித்துவம் கிடைக்கும்! தமிழ்நாட்டுக்குப் எந்த பாதிப்பும் ஏற்படாது!” என்று உறுதி கொடுங்கள். இன்றைக்குத் தமிழ்நாடு எழுப்பியிருக்கும் இந்த உரிமைக்குரலை, தெலங்கானா - கர்நாடகா – எதிரொலித்துக் கொண்டு இருக்கிறார்கள்... அவர்களுக்கு என்னுடைய நன்றி! மற்ற மாநிலங்களும் நியாயத்துக்காகவும் - உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்!
இன்றைக்கு நாம் விழிப்புடன் இருந்து, நம்முடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் இனி ஒருபோதும் தமிழர்களின் கையில் அதிகாரம் வராது! தமிழர்களின் சொல்லுக்கு மரியாதையே இருக்காது! அதனால்தான், காலையில் நான் வெளியிட்ட வீடியோவில், உடன்பிறப்புகள் எல்லாம், இந்தச் செய்தியை அனைவருக்கும் எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்...
அதிமுக பங்கேற்பது மகிழ்ச்சி
இங்கே கூட்டணிக் கட்சியினர் அனைவரும் வந்திருக்கிறீர்கள்... நீங்கள் இது சம்பந்தமாகத் தொடர்ந்து கூட்டம் போட்டுப் பேசி, இது பற்றிய விழிப்புணர்வைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்! மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நான் அழைப்பு விடுத்திருக்கிறேன்... அதில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்... பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. கலந்து கொள்ளும் என்ற செய்தி வந்திருக்கிறது. மகிழ்ச்சி!
சிலர், கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்... நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம், இன்றைக்கு பா.ஜ.க.வை மகிழ்விக்க நீங்கள் செய்யும் சுயநல அரசியலால் தமிழ்நாட்டுக்குத் தீங்குதான் ஏற்படும்! பா.ஜ.க.வை நம்பி சென்றவர்கள், அவர்களின் தேவை தீர்ந்தவுடனே மற்ற மாநிலங்களில் என்ன ஆனார்கள் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள்...
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க.வினருக்கும் சேர்த்து நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டுக்குத் துணையாக நில்லுங்கள்... தயவு செய்து உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதீர்கள்! நாம் அனைவரும் ஓரணியில் இருக்கிறோம் என்று மற்ற மாநிலங்களுக்குக் காட்ட வேண்டும்! அதுமூலமாகத்தான் வர இருக்கும் ஆபத்த தடுத்து, நம்முடைய உரிமையை வென்றெடுக்க முடியும்! வென்றெடுத்தால்தான், எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்! நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாம் இதைச் செய்தே ஆக வேண்டும்! இதில் தவறிவிட்டோம் என்றால், நமக்கான அடையாளமே இல்லாமல் போய்விடும்!
எனவே, நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்... நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே அணியில் இருப்போம்! தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதே பழைய கேள்விகள்தான் கேட்டார்கள்.. அதே பதில்களையே நானும் சொன்னேன்.. சீமான்
நா.த.க. தலைவர் சீமானிடம் ஒன்றே கால் மணி நேரமாக நடந்த போலீஸ் விசாரணை முடிவடைந்தது
கூட்டணியில் ஒரு விரிசலும் விழாது.. மாறாக உங்களது ஆசையில்தான் மண் விழும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ரம்ஜான் நோன்பு.. மார்ச் 2 முதல் தொடக்கம்.. தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவிப்பு
3 வயது பெண் குழந்தை மீது குற்றம் சாட்டிப் பேசிய.. மயிலாடுதுறை கலெக்டர் அதிரடி இடமாற்றம்
பாலியல் கொடுமைக்குள்ளான.. 3 வயது குழந்தை மீது புகார் கூறுவதா.. கலெக்டருக்கு அண்ணாமலை கண்டனம்!
உயிர் மற்றும் உரிமை பிரச்சினை.. மக்களிடம் கொண்டு சேருங்கள்.. முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ
வானிலை ஆய்வு மையத்தின்.. முதல் பெண் தலைவராக நாளை பொறுப்பேற்கிறார்.. அமுதா!
முதல்வர் வேட்பாளர் விஜய்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. பிகே வருகைக்குப் பிறகு மாறிய தவெக மனசு!
{{comments.comment}}