- சஹானா
சென்னை: அரசியலில் விஸ்வரூப வளர்ச்சியையும், அதே அளவில் வீழ்ச்சியையும் கண்ட ஆளுமையான விஜயகாந்த்தின் 18 ஆண்டு கால அரசியல் பயணம் முடிவுற்றிருப்பது துயரை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் உடல்நிலை பாதிப்படைந்ததால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
விஜயகாந்துக்கு கொரோனா தொற்றும் உறுதியானது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 28) காலை 6:10 மணியளவில் விஜயகாந்த் உயிர் பிரிந்தது.
அரசியல் பாதை..
71 வயதான விஜயகாந்த், சுமார் 35 ஆண்டுகளாக திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தியது மட்டுமல்லாமல் அரசியலிலும் தனி முத்திரை பதித்தவர் என்பது பலரும் அறிந்ததே. இவர் 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' (தேமுதிக) என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தையும் துவக்கினார்.
2006ல் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இவருடைய கட்சி 234 தொகுதிகளிலும் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு அனேக இடங்களில் கணிசமான ஓட்டுகளைப் பெற்று திமுக மற்றும் அதிமுக.,விற்கு அடுத்த தனிப்பெரும் கட்சியாக உருவானது. இவர் சந்தித்த முதல் தேர்தலில் தனது முதல் களமாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட சுமார் 13 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடி எம்எல்ஏ.,வாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.
2வது தேர்தலில் எதிர்க்கட்சி
அனைத்து தொகுதிகளிலும் கணிசமான ஓட்டு சதவீதம் பெற்ற தேமுதிக.,வின் ஆதரவு, திமுக, அதிமுக.,விற்கு தேவைப்பட்டதாகவே கூறலாம். அடுத்ததாக 2011ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வளர்ச்சிக்கு கூட்டணியும் முக்கியம் என்பதை உணர்ந்த விஜயகாந்த், அதிமுக.,வுடன் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் 49 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, 29 தொகுதிகளில் வென்று, திமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்தது.
கட்சி துவங்கி முதல் தேர்தலில் காலடி எடுத்து வைத்த தேமுதிக, 2வது தேர்தலிலேயே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தேமுதிக என்ற கட்சியை அசுர வளர்ச்சியுடன் கொண்டு சென்ற விஜயகாந்த், ஜெயலலிதாவுடனான கருத்து வேறுபாடால் கூட்டணியை முறித்துக்கொண்டார். அதன்பிறகு, அவரது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களையும் சறுக்கல்களையும் சந்தித்தார்.
அவரது கட்சியில் எம்எல்ஏ.,வாக இருந்த பலரும் அதிமுக.,வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, தேமுதிக.,வில் இருந்து அடுத்தடுத்து கட்சி தாவினர். இதுவே அவரது அரசியல் வாழ்க்கையில் முதல் சறுக்கலாக பார்க்கப்படுகிறது.
முதல்வர் வேட்பாளர்
பின்னர், 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை கூட்டணியில் சேர்க்க அப்போதைய திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, ‛பழம் நழுவி பாலில் விழும்’ என்றெல்லாம் கூறி காத்திருந்தார். ஆனால், கருணாநிதியின் காத்திருப்பை பொய்யாக்கி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து ‛மக்கள்நல கூட்டணி’ என்ற பெயரில் 3வது அணி அமைத்து தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த்.
அக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் விஜயகாந்த். அத்தேர்தலில் இவரும், இவருடைய கூட்டணி கட்சியினரும் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தனர். இவர் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில், 34,447 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்
18 ஆண்டுகள் அரசியலில்..
பின்னர் படிப்படியாக அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதனால் வழக்கமான உத்வேகம் அவரிடம் குறைந்தது. தொண்டர்களும் வேறு கட்சியை பக்கம் நகர்ந்தனர். தொடர்ந்து உடல்நிலை பின்னடைவை சந்தித்ததால், வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் பூரண குணமடையாமல் தவித்து வந்தார்.
கடந்த டிசம்பர் 14ம் தேதி நடந்த தேமுதிக பொதுக்கூட்டமே அவர் கடைசியாக பங்கேற்ற கட்சி நிகழ்ச்சி. அக்கூட்டத்தில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதாவிற்கு பொதுச்செயலாளர் பதவி அளித்து ஆசி வழங்கினார் விஜயகாந்த்.
அரசியலில் அசுர வளர்ச்சியுடன் அதேசமயம் வீழ்ச்சியையும் ஒருசேர கண்ட விஜயகாந்தின் 18 ஆண்டு கால அரசியல் பயணம் இன்றுடன் (டிசம்பர் 28) முடிவடைந்திருப்பது வேதனையைத் தருவதாக உள்ளது.
சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
{{comments.comment}}