சென்னை: லோக்சபா விவாதங்களின்போது அதிக அளவு குறுக்கீடு செய்து கேள்விகள் கேட்ட டாப் 10 எம்.பிக்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு எம்.பி மட்டுமே இடம் பிடித்துள்ளார். தர்மபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார்தான் அவர்.
இந்தப் பட்டியலில் அதிக அளவிலான புதுமுக எம்.பிக்கள்தான் இடம் பிடித்துள்ளனர் என்பது இன்னொரு சுவாரஸ்யமான தகவலாகும். மேலும் மொத்த எம்.பிக்களில் 250 புதுமுக எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக 41,104 கேள்விகளைக் கேட்டு அனுபவம வாய்ந்த எம்.பிக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளனர். இது கடந்த 4 ஆண்டு கால புள்ளிவிவரமாகும்.
டாப் 10 குறுக்குக் கேள்விகள் கேட்ட எம்.பிக்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குல்தீப் ராஜ் சர்மா. இவர் முதல் முறை எம்.பி ஆவார். 864 கேள்விகளைக் கேட்டு மிரட்டி விட்டார் இவர்.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் தமிழ்நாட்டுக்கு சந்தோஷம் தரக் கூடிய செய்தியும் உள்ளது. அது தர்மபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமாரின் பெயர் 4வது இடத்தில் இருப்பதுதான். அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் 526 கேள்விகள் கேட்டு அசத்தியுள்ளார். தர்மபுரி எம்.பியான செந்தில்குமார்ஆக்டிவாக செயல்படும் முக்கியமான எம்.பிக்களில் ஒருவர். தனது தொகுதிக்காக பல்வேறு நலத் திட்டங்களை தொடர்ந்து செய்து வரும் அவர், நாடாளுமன்றக் கூட்டங்களிலும் தவறாமல் பங்கேற்பவர் ஆவார்.
டாப் 10 எம்.பிக்களில் அதிக அளவிலான எம்.பிக்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள்தான். அதாவது 5 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். அனைவருமே புதுமுகங்கள்தான்.
நடப்பு லோக்சபாவானது 17வது லோக்சபாவாகும். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த லோக்சபாவில்தான் அதிக அளவிலான முதல் முறை எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளனர். அதாவது 270 எம்.பிக்கள் புதுமுக எம்.பிக்கள் ஆவர். அனைவருமே சிறப்பாக செயல்படுவது இன்னொரு ஆச்சரியமாகும்.
மொத்தம் 250 புதுமுக எம்.பிக்கள் 41,104 கேள்விகள் கேட்டுள்ளனர். 685 தனி நபர் மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளனர். விதி எண் 377ன் கீழ் 1908 முக்கியப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர்.
லோக்சபா கூட்டங்களில் பாஜக, திமுக, சிவசேனா கட்சி எம்.பிக்கள்தான் பெருமளவில் முறையாக கலந்து கொண்டுள்ளனர். அதிக அளவிலும் இவர்கள்தான் கலந்து கொண்டுள்ளனர்.
கேள்வி நேரத்தின்போது அதிகம் கேள்வி கேட்டவர்கள் பட்டியலில் பாஜகவின் மஜூம்தார் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் சுப்ரியா சூலே இருக்கிறார். 3வது இடம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத்தான். அக்கட்சியின் அமோல் ராம்சிங் கோலே இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் 1989ம் ஆண்டு முதல் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும், எஸ்.எம். கிருஷ்ணா அமைச்சரவையில் தலைமைக் கொறடாவாகவும் இருந்து தற்போது முதல் முறையாக எம்.பியாகியுள்ள ராஜா அமரேஸ்வரா நாயக் என்பவர் 493 அமர்வுகளில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
இவருக்கு இந்தியும், ஆங்கிலமும் பேசத் தெரியும் என்ற போதிலும், சரளமாக பேச முடியாது. இருந்தாலும் இவர் கேள்வி கேட்காமல் விடுவதில்லையாம். அதில் நான் சமரசம்செய்து கொள்ள மாட்டேன் என்று கம்பீரமாக சொல்கிறார் நாயக்.
கடந்த கால லோக்சபாக்களை விட இந்த லோக்சபாவில் புதுமுக எம்.பிக்கள் சிறப்பாக செயல்படுவது ஜனநாயகத்திற்கு சந்தோஷமானது என்பதில் சந்தேகமில்லை.
{{comments.comment}}