தேவகோட்டை: கல்வியை புத்தகத்தில் மட்டும் படிக்காமல் அனுபவத்தோடு கற்கும் போது வாழ்க்கையின் எந்த சூழ்நிலையும் மறக்காது என்பதற்காக மாணவர்களை ஃபீல்ட் ட்ரிப் அழைத்து சென்று விளக்கிக் கூறி அவர்களை மோல்டு செய்வதாக பெருமையுடன் கூறியுள்ளார் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்.
ஒவ்வொரு மாணவ மாணவிகளும் பள்ளிகளில் கற்கும் ஒவ்வொரு விஷயங்களும் நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவை. ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள முயலும் போது அதை அனுபவமாக எடுத்துக்கொள்ளும் போது அதை எளிதாக கற்க முடியும். அப்போதுதான் கற்றலின் திறமை மேம்படும்.ஏனவே தான் ஒருவருக்கு கல்வி அறிவுடன் அனுபவ அறிவு மிகவும் அவசியம் என்பார்கள் நம் முன்னோர்கள்.
அந்த வரிசையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளி மாணவர்களுக்கு கற்றலை அனுபவத்தோடு கற்கும் போது வாழ்க்கையிலும் எந்த சூழலிலும் மறக்காது என்பதற்காக களப்பயணம் மூலம் காவல் நிலையம் கல்லூரி, விவசாய பண்ணை, வங்கி, பாஸ்போர்ட் அலுவலகம் போன்ற இடங்களுக்கு நேரில் சென்று விளக்கம் பெற்று வருகின்றனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் கூறியதாவது:
கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு களப்பயணம்:
மாணவர்கள் களப்பயணம் செல்லும்போது நேரடியாக வாழ்க்கைக்கான கற்றலை தெரிந்து கொள்கின்றனர். எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து முடித்து செல்லும் மாணவர்கள் அதன் பிறகு குடும்ப மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக படிக்கக்கூடிய சூழ்நிலை இல்லாததால் 10ம் வகுப்பு,12ம் வகுப்புக்கு பின்னர் படிப்பார்களா என்று தெரியாத நிலை இருந்தது. இதனை கருத்தில் கொண்டு தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுரிக்கு மாணவர்களை அழைத்து சென்று இயற்பியல், வேதியியல் , கணினி அறிவியல் , நூலகம் என அனைத்தையும் நேரில் பார்த்த பிறகு அவர்கள் நிச்சயமாக இந்த கல்லூரியில் படிப்பேன் என்று நோக்கத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள்.
அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கல்லுரி படிப்பு படிப்போம் குறிக்கோளை ஏற்படுத்தி கொள்ள களப்பயணம் உதவியாக உள்ளது.கல்லூரியில் களப்பயணத்தில் பேராசிரியர்களிடம் மாணவர்கள் தொடர்ந்து கேள்விகள் கேட்டு பதில்கள் பெறும்போது அவர்களது கல்வி அறிவு மேம்படுகிறது. பள்ளியில் புத்தகத்தை மட்டுமே படிக்கும் மாணவர்களுக்கு இது புதிய அனுபவத்தை கொடுக்கும். மேலும் பொருளாதாரத்தில் ,சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் இது போன்று கல்லூரிகளுக்கு அழைத்து வரும்போது அவர்கள் பிற்காலத்தில் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஒரு குறிக்கோளாக உண்டு பண்ண வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.
காவல் நிலையம் - களப்பயணம்:
காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காவல் நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் விரிவாக விளக்கப்பட்டது.
அஞ்சல் அலுவலகத்துக்கு களப்பயணம் :
அஞ்சல் அலுவலகத்துக்கு அழைத்து சென்று வந்த பிறகு மாணவி ஜெயஸ்ரீயின் தாயார் பள்ளிக்கு நேரில் வந்து ,சார் அஞ்சல் அலுவலகத்தில் என் மகள் என்னை அழைத்து சென்று படிவங்கள் பூர்த்தி செய்து ,மேலாளர் இவர்தான் என்று கூறி அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்து கணக்கு துவக்கி கொடுத்தார் என்று சொன்னபோதுதான் களப்பயணத்தின் நன்மை தெரிந்தது.
SBI வங்கிக்கு களப்பயணம் :
கல்லுரி படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற பிறகு கூட வங்கி படிவம் பூர்த்தி செய்ய தெரியாத நிலையில் உள்ள போக்கை மாற்றி மாணவர்களுக்கு வங்கி தொடர்பான கிரீன் கார்டு பெறுதல்,ATM மெஷினை பயன்படுத்தி பணம் எடுத்தல் , சுவைப் மெஷின் பயன்படுத்துதல்என்பது உட்பட எளிதாக பல்வேறு விஷயங்களை கற்று கொடுக்கிறோம்.
விவசாயம் அறிந்து கொள்ளுதல்:
அரசு தோட்டக்கலை பண்ணைக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்து சென்று பதியம் இடுதல்,டிராக்டர் ஓட்டுதல் , வேளாண்மை தொடர்பான அடிப்படை அறிவை தொடர்ந்து பண்ணை சுற்றுலா மூலம் வளர்த்து வருகின்றோம்.
பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு களப்பயணம்:
பாஸ்போர்ட் அலுவலத்துக்கு மாணவர்களை அழைத்து சென்று பாஸ்போர்ட் எடுப்பது தொடர்பான அடிப்படை அறிவை விரிவாக விளக்கி நேரடி கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தி வருகின்றோம்.
ரேடியோ நிலையம் அழைத்து செல்லுதல் :
அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலி நிலையத்துக்கு மாணவர்களை தொடர்ந்து அழைத்து சென்று நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது போன்று இன்னும் பல இடங்களுக்கு தொடர்ந்து அழைத்து செல்கிறோம் என பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.
{{comments.comment}}