பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்கே நமது சமுதாயம் நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டு விட்டது. இப்போது பெண் குழந்தைகளைக் கொண்டாடுவதோடு அவர்களைக் காக்கவும், கல்வியைப் புகட்டவும், சமூகத்தில் உரிய பங்கு கிடைக்கவும் ஆண் சமுதாயம் உறுதுணையாக இருந்து வருகிறது.
பெண் குழந்தைகள் உரிய முறையில் ஊக்குவிக்கப்பட்டால் அவர்கள் எப்படி தலைநிமிர்ந்து நிற்பார்கள் என்பதற்கு நம்முடைய சென்னை மேயர் பிரியா ராஜன் ஒரு நல்ல உதாரணம். பெண்களுக்கு குறிப்பாக அரசியல் களம் காண விரும்பும் இளம் பெண்களுக்கு பிரியா ராஜன் நல்ல ரோல்மாடல்.
அரசியல் பின்புலம் கொண்டவர்தான் பிரியா ராஜன். இவரது தாத்தா செங்கை சிவம் திமுககாரர். அந்த வழியில் வந்தவர்தான் பிரியா ராஜனும். அதேசமயம், இவரிடம் கூடவே திறமையும் இருந்தது. திறமையும் சேர்ந்து கொண்டதால்தான் இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது.
அரசியலில் நுழையும் பெண்கள் சந்திக்கும் அதே பிரச்சினையைத்தான் பிரியாவும் ஆரம்பத்தில் எதிர்கொண்டார். தமிழிசை செளந்தரராஜன் பாஜக தலைவராக இருந்தபோது அவரது தலைமுடியைக் கிண்டலடித்தனர். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனது அருமையான செயல்பாட்டால் பதிலடி கொடுத்து வாயடைத்தார் தமிழிசை.
தமிழிசை போலவே பிரியா ராஜனும் ஆரம்பத்தில் கிண்டலுக்குள்ளானார். சரியாக பேசத் தெரியவில்லை. அலங்கார பொம்மை போல வந்து போகிறார் என்றெல்லாம் கிண்டலடித்தார்கள். ஆனால் எல்லாக் கிண்டல்கள், கேலிகளையும் தனது சாதுரியத்தாலும், புன்னகையாலும் தூள் தூளாக்கினார் பிரியா ராஜன்.
கடந்த மழை வெள்ளத்தின்போது சென்னை நகர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார். அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இணைந்து சளைக்காமல் நகரை வலம் வந்தார். ஒரு பெண் பிள்ளையால் இதெல்லாம் முடியுமா என்று பலர் இளக்காரமாக பார்த்தபோது அதை பொய் என்று நிரூபித்து அனைவரையும் அசர வைத்தார்.
மாநகராட்சி மாமன்றக் கூட்டங்களையும் சிறப்பாக நடத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். சொந்தக் கட்சி கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், பிற கட்சி கவுன்சிலர்களும் கூட இவரை இப்போது அதிகமாக விமர்சிப்பதில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அனைவருக்கும் உரியவராக பொறுப்பான மேயராக செயல்படுகிறார் பிரியா ராஜன்.
அரசியலில் சாதித்த பெண்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.. இந்திரா காந்தி, மாயாவதி, ஜெயலலிதா, மமதா பானர்ஜி வரிசையில்.. நிச்சயம் எதிர்காலத்தில் பிரியா ராஜனும் இடம் பெற வேண்டும்.. அந்த அளவுக்கு தனது தகுதிகளையும் வளர்த்துக் கொள்வார் என்று நாம் நம்பலாம். இப்படிப்பட்ட மேயர் பிரியா ராஜன் பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளை கொண்டாடுவோம்! என்ற உயரிய நோக்கத்தில் சமுதாயத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் நேற்று ரிப்பன் கட்டட வளாகத்தில் பெண் குழந்தைகளின் நலன் காக்க உறுதிமொழிகளை ஏற்றும், ஆக்கப்பூர்வமான பல கருத்துக்களை கூறியும் பேசினார்.
{{comments.comment}}