டெல்லி: டெல்லி மாநில பட்ஜெட் தாக்கல் இன்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அது தற்போது தள்ளிப் போயுள்ளது. மத்தியஅரசு இன்னும் ஒப்புதல் தராததால் பட்ஜெட் தாக்கல் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. கெஜ்ரிவால் முதல்வராக இருக்கிறார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது முதலே அந்த அரசுக்கு பாஜக மூலம் பெரும் குடைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது. துணை நிலை ஆளுநர் மூலமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆளுநருடன் போராடவே டெல்லி முதல்வருக்கு நேரம் சரியாக இருக்கிறது.
டெல்லி அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் முட்டுக்கட்டை வந்து கொண்டே இருக்கிறது. டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றும் கூட மேயரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திணறிப் போய் விட்டது. அந்த அளவுக்கு பாஜக வின் நெருக்கடி உள்ளது.
இந்த நிலையில் டெல்லி மாநில பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படவிருந்தது. ஆனால் கெஜ்ரிவால் அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. இதனால் பட்ஜெட் இன்று தாக்கலாகாது என்று தெரிகிறது.
இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மத்திய அரசு பட்ஜெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. டெல்லி பட்ஜெட்டை மத்தியஅரசு தடுத்து நிறுத்தி வைத்துள்ளது. சட்டசபையில் நாளை (இன்று) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட மாட்டாது.
நாளை (இன்று) முதல் டெல்லி அரசு ஊழியர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாது. இது பச்சை குண்டாயிசம் என்று காட்டமாக கூறியுள்ளார் கெஜ்ரிவால். மத்தியஉள்துறை அமைச்சகம்தான் டெல்லி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தர வேண்டும். ஆனால் அது நிறுத்தி வைத்துள்ளது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.
டெல்லி நிதியமைச்சராக மணீஷ் சிசோடியா இருந்தார். அவர் அமலாக்கப் பிரிவு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், கைலாஷ்கெலாட் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு அவர் பட்ஜெட் தாக்கல் செய்யவிருந்தார். ஆனால் தற்போது அதற்கு முட்டுக்கட்டை வந்துள்ளது.
{{comments.comment}}