டெல்லி: தேசிய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப் பிறகு டெல்லி காவல்துறை 2 முதல்தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. இந்த நபர் மீது சரமாரியான பாலியல் புகார்களைக் கூறி தேசிய மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் தொடர் போராட்டம் நடத்தியும் கூட வழக்குப் போடாமல் காலதாமதம் செய்ததால் டெல்லி காவல்துறை பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரிஜ்பூஷன் சரண் சிங்குக்கு எதிராக, சர்வதேச அளவில் இந்தியாவுக்காக பதக்கம் பெற்று வரலாறு படைத்த பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் பொகத் உள்ளிட்ட வீரர்கள், வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர் மீது பல்வேறு அதிர வைக்கும் பாலியல் தொல்லைப் புகார்களை வீராங்கனைகள் சுமத்தியிருந்தனர்.
ஆனால் நேற்று வரை பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளையாட்டு அமைச்சகமும் விசாரணை மட்டுமே நடத்தி வந்தது. இந்த நிலையில் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வரும் வீராங்கனைகள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா கடுமையாக சாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பி.டி. உஷாவை சமூக வலைதளங்களில் பல்துறையைச் சேர்ந்தவர்களும் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை போனது.
இந்த நிலையில் எங்குமே நியாயம் கிடைக்காததால் வீரர்கள், வீராங்கனைகள் சுப்ரீம் கோர்ட்டை நாடினர். நேற்று இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அரசுத் தரப்புக்கும், டெல்லி காவல்துறைக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. புகார்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது 2 முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது டெல்லி காவல்துறை.
இரண்டு முதல் தகவல் அறிக்கையில் ஒன்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளது. இதனால் கைது செய்யப்பட்டால் பிரிஜ்பூஷன் சரண் சிங்கால் ஜாமீனில் வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், அடுத்து பிரிஜ்பூஷன் சரண் சிங்கிடம் போலீஸார் விசாரணை நடத்தி அவரை கைது செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் எந்த வேகத்தில் நடக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
அதேசமயம், பிரிஜ்பூஷண் சிங் கைதாகி சிறைக்குப் போகும் வரை போராட்டத்தை விடப் போவதில்லை என்று மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தன் மீதான சுப்ரீம் கோர்ட் உத்தரவை பிரிஜ்பூஷண் சிங் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விளையாட்டுத்துறை அமைத்துள்ள விசாரணைக் கமிட்டி அறிக்கை வரும் வரை வீராங்கனைகள் காத்திருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குள் அவர்கள் ஜந்தர்மந்தருக்குப் போய் போராட்டத்தில் உட்கார்ந்து விட்டார்கள்.
நீதித்துறையின் நடவடிக்கைக்கு நான் மதிப்பளிக்கிறேன். இந்த வழக்கை டெல்லி போலீஸ் விசாரிக்��ட்டும். உண்மையை வெளிக்கொண்டு வரட்டும். நான் அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். நீதித்துறைக்கு முன்பு யாரும் பெரியவர்கள் இல்லை. நானும் சுப்ரீம் கோர்ட்டை விட பெரியவன் இல்லை. இதை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கமிட்டி ஒன்றை மத்தியவிளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நியமித்தார். ஏப்ரல் 5ம் தேதியே கமிட்டி தனது விசாரணை அறிக்கையை அமைச்சரிடம் கொடுத்து விட்டது. ஆனால் இதுவரை கமிட்டி அறிக்கை வெளியிடப்படவில்லை என்பதால்தான் வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.
வீராங்கனைகள் தரப்பில் கூறுகையில், நாங்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு டெல்லி காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. முதல் தகவல் அறிக்கை போடுவதற்காக நாங்கள் போராடவில்லை. பிரிஜ்பூஷண் சிங் போன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர் சிறையில்அடைக்கப்பட வேண்டும். அவரது பதவிகள் பறிக்கப்பட வேண்டும். அது நிறைவேறும் வரை போராடுவோம் என்று உறுதிபடக் கூறியுள்ளனர்.
{{comments.comment}}