டெல்லி : டெல்லி மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. டெல்லியின் முக்கிய சாலைகள் மூடப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை மூன்று சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல், சம்மனை தவிர்த்து வந்தார் கெஜ்ரிவால். இந்த நிலையில் தற்போது 4வது சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கும் அவர் வராவிட்டால் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இன்று அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை ரெய்டு செய்து, கெஜ்ரிவாலை கைது செய்யலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் பணியாளர்கள் அனைவரும் கெஜ்ரிவாலின் வீட்டிற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டு, கெஜ்ரிவாலின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு அனுப்பப்பட்ட மூன்று சம்மனுக்கும், ராஜ்ய சபா தேர்தல், குடியரசு தின விழா ஏற்பாடுகளில் பிஸியாக இருக்கிறார் அதனால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என டெல்லி முதல்வர் சார்பில் காரணம் தெரிவிக்கப்பட்டது. இதை டெல்லி பாஜக கடுமையாக விமர்சித்திருந்தது. நீங்கள் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களை நேர்மையான மனிதர் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறீர்கள். அப்படி நேர்மையானவராக இருந்தால் அமலாக்கத்துறையிடம் ஆதாரங்களை ஒப்படைத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியது தானே என கேட்டிருந்தனர்.
கெஜ்ரிவாலை முடக்கத் திட்டம் - ஆம் ஆத்மி
ஆனால் இந்த அமலாக்கத்துறை விசாரணை என்பது ஆம் ஆத்மி கட்சியையும், கெஜ்ரிவாலையும் முடக்கும் உள்நோக்கம் கொண்டது. இந்தியா கூட்டணியில் முக்கியத் தலைவராக இருக்கிறார் கெஜ்ரிவால். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்து முடக்கிப் போட பாஜக துடிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி மதுபான வழக்கில் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகிகளான மணிஷ் சிசோடியாவும், சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கெஜ்ரிவாலுக்கு 3வது சம்மன் அனுப்பப்பட்ட அதே நாளில் சஞ்சய் சிங்கிற்கும் ஜாமின் மறுக்கப்பட்டது. இந்த வழக்கில் நவம் 02ம் தேதி கெஜ்ரிவாலுக்கு முதல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அப்போது தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது சட்ட விரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். சம்மனுக்கு ஆஜராவதை தவிர்த்து விட்டு தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய பிரதேசம் சென்று விட்டார்.
ரெய்டு நடத்தினால் ஒரு பைசா கூட கிடைக்காது - ஆம் ஆத்மி
2வது முறையாக டிசம்பர் 21ம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட போது, நீங்கள் சம்மனில் குறிப்பிட்ட நேரத்தில் என்னால் ஆஜராக முடியாது. இது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்காக மத்திய அரசு அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் இந்த சம்மன்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா காக்கர், சம்மன் அனுப்புவதற்கு அவர்கள் யார்? அனைவருக்கும் தெரியும் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தியானத்தில் இருக்கிறார் என்று. அவர் கடந்த 10 நாட்களாக யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. இந்த செய்தியை பரப்பி, பரபரப்பை கிளப்பி இருப்பது பாஜக தான். ரெய்டு நடத்தினால் கைப்பற்ற என்ன இருக்கிறது. ஒரு பைசா கூட கைப்பற்றுவதற்கு கிடையாது. இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடன் செய்யப்படும் செயல் என தெரிவித்துள்ளார்.
{{comments.comment}}