சென்னை: ஒரு காலத்தில் டிசம்பர் என்றாலே மனசெல்லாம் அப்படி ஒரு சந்தோஷமும், உற்சாகமும் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும். குளிர் தரும் மாதம் மட்டுமல்ல, மாதங்களில் சிறந்த மார்கழியும் இப்போதுதானே வரும்.. இப்படி தித்திப்பும் ஜில்லிப்பும் என இரட்டை உற்சாகத்தைக் கொடுக்கும் டிசம்பர் மாதம் இப்போதெல்லாம் திடுக்கிட வைக்கும் மாதமாக மாறி நிற்கிறது.
டிசம்பர் குளிரையும், மார்கழி அதிகாலைப் பனியும், பிரிக்க முடியாதவை.. ஆனால் வர வர இந்த டிசம்பர் மாதம் பிறந்தாலே மனசெல்லாம் ஒரு வித கிலி வந்து உட்கார்ந்து விடுகிறது. அச்சச்சோ.. டிசம்பர் வந்துருச்சா.. எப்படி இருக்கப் போகுதோ.. என்ன நடக்கப் போகுதோ என்ற ஒரு விதமான விரக்தியும் கூடவே வந்து விடுகிறது.
காரணம், டிசம்பர் மாதத்தில் நடைபெறும் அசம்பாவிதங்கள் அல்லது எதிர்பாராத சோகங்கள்தான். எல்லாமே இயற்கைதான், எதையும், எதோடும் முடிச்சுப் போடக் கூடாது என்றாலும் கூட டிசம்பர் மாதம் நம்மை வச்சு செய்கிற மாதமாக மாறி விட்டது என்னவோ உண்மைதான். குறிப்பாக டிசம்பர் மாதத்தில்தான் மிகப் பெரிய பேரழிவுகளை தமிழ்நாடு கண்டுள்ளது.
2004 சுனாமி: 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தெற்காசிய நாடுகளை புரட்டிப் போட்டது சுனாமி. இதில் தமிழ்நாடும் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தது. சென்னை, கடலூர், நாகப்பட்டனம் என பல கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாட்டுக் கடலோர மக்களின் உள்ளத்தை சுக்குநூறாக்கிய வருடம் இது.
2005 சென்னை வெள்ளம்: அதேபோல 2005ம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளப் பெருக்கை மக்கள் மறக்க முடியாது. மிகப் பெரிய பாதிப்பை சென்னை, நாகப்பட்டனம் உள்ளிட்ட மாவட்டங்கள் சந்தித்தன. பல உயிரிழப்புகளையும் தமிழ்நாடு இந்த வெள்ளத்தின்போது சந்தித்தது.
2005 சென்னை கூட்ட நெரிசல்: அதே 2005ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி வெள்ள நிவாரண உதவியை வாங்குவதற்காக சென்னை எம்ஜிஆர் நகரில் பெரும் கூட்டம் கூடியது. அந்த மக்கள் கூட்டத்தில் திடீர் நெரிசல் ஏற்பட்டதில் பலர் கூட்டத்தில் சிக்கி மிதிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். 42 பேர் இறந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது. சென்னையை அப்போது வெகுவாக உலுக்கிய மிகப் பெரிய துயரச் சம்பவம் இது.
2015 சென்னை பெரு வெள்ளம்: 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு பேரழிவை சந்தித்தது சென்னை. டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் சென்னையில் பெய்த மிகப் பெரிய பேய் மழையும், செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பும் சேர்ந்து சென்னையை மூழ்கடித்து விட்டது. சென்னை மாநகரமே முங்கிப் போய் விட்டதோ என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தது.
2024 மிச்சாங் புயல்: 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தையும் மறக்க முடியாது. மிச்சாங் புயல் வந்து சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களை உலுக்கி எடுத்தது. டிசம்பர் 3ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை பெய்த கன மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். 15க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
தூத்துக்குடி நெல்லை வெள்ளம்: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் இப்படி மிச்சாங் புயலால் சிக்கி தவித்த நிலையில் அதே டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்கள் பெரு மழையை சந்தித்து மிகப் பெரிய வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்தன. தூத்துக்குடியும், நெல்லையும் மிகப் பெரிய அழிவை சந்தித்தன. 150 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிலான வெள்ள அவலத்தை இரு நகரங்களும் சந்தித்தன. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்படி ஒரு மழையை நெல்லை, தூத்துக்குடி மக்கள் அதுவரை பார்த்தது இல்லை. இத்தனைக்கும் புயலோ அல்லது வேறு எதுவுமோ இல்லை. வெறும் மழைதான் இவ்வளவு பெரிய சீரழிவை ஏற்படுத்தி விட்டது. தென் மாவட்ட மக்கள் மறக்க முடியாத பெரும் சோகம் அது.
பதம் பார்த்த டிசம்பர் புயல்கள்: இவை மட்டுமா.. 2011ம் ஆண்டு தானே புயலும் கூட டிசம்பரில்தான் தமிழ்நாட்டைப் பதம் பார்த்தது. கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கி உயிரிழந்தனர். பெரும் பொருட் சேதத்தையும் தமிழ்நாடு சந்தித்தது. அதேபோல 2018ல் கஜா புயல், 2016ல் வர்தா புயல், 2017 ஒக்கி புயல் என்று எல்லாமே டிசம்பரில் வந்த பெரும் சோகங்கள்தான்.
டிசம்பரில் அழிந்த தனுஷ்கோடி: இந்த சோகத்திற்கெல்லாம் மிகப் பெரிய உச்சமே இப்படி ஒரு அழகான டிசம்பரில்தான் அதை விட அழகான தனுஷ்கோடி தீவு புயலில் சிக்கி சின்னாபின்னமானதும் நடந்தது. 1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு முதல் அடுத்த நாள் காலை வரை வீசிய மிகப் பெரிய புயல் தனுஷ்கோடியை சூறையாடி மண்ணோடு மண்ணாக மாற்றிப் போட்டது. ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று வரை தனுஷ்கோடி மண் மேடாகவே காட்சி தருகிறது. மனிதர்கள் வசிக்க முடியாத நகரமாக அதை அரசு அறிவிக்கும் அறிவிக்கும் அளவுக்கு அந்தத் தீவு அழிந்து போய் விட்டது.
இப்படி இயற்கைச் சீற்றங்கள் தமிழ்நாட்டை பார்ட் பார்ட்டாக பதம் பார்த்த மாதம்தான் டிசம்பர். இதே டிசம்பரில் மக்களின் மனம் கவர்ந்த பல தலைவர்களும் கூட இயற்கை எய்தியுள்ளனர்.
டிசம்பர் 5 - ஜெயலலிதா மரணம்
டிசம்பர் 7 - பத்திரிகையாளர், நடிகர் சோ மரணம்
டிசம்பர் 11 - இசைக் குயில் எம்எஸ் சுப்புலட்சமி மறைந்த நாள்
டிசம்பர் 24 - எம்ஜிஆர் மறைந்த தினம், தந்தை பெரியார் மறைந்த தினம்
டிசம்பர் 25 - ராஜாஜி மறைந்த தினம்
எந்த வகையில் பார்த்தாலும் டிசம்பர் சந்தோஷமான மாதமாக கடந்த சில வருடங்களாக இல்லை. இந்த வருடமும் கூட ஜஸ்ட் மிஸ்ஸாக ஒரு மாபெரும் புயலை டிசம்பர் மிஸ் செய்துள்ளது என்றுதான் கூற வேண்டும். டிசம்பர் இன்று பிறந்துள்ள நிலையில் நேற்று வரை உக்கிர தாண்டவம் ஆடி விட்டுப் போயிருக்கிறது ஃபெஞ்சல் புயல். இது டிசம்பர் மாதத்துக்கான முன்னெச்சரிக்கையா என்று தெரியவில்லை.
இந்த வருடமாவது டிசம்பர் சந்தோஷமாக கடந்து முடியுமா என்பதே ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக, ஆசையாக உள்ளது.. பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}