சென்னை: சீரியல் நடிகராக அறிமுகமாகி, சினிமாவில் உதவி இயக்குநராக புகுந்து, நடிகராக மாறி, இப்படி ஒரு நடிப்பாற்றலா என்று அனைவரையும் வியக்க வைத்து.. அந்த வியப்பு அடங்குவதற்குள் ஒரு மனிதனின் வாழ்க்கையே முடிந்து போய் விட்டது என்றால்.. அடுத்த நொடி நிச்சயமற்றதுங்க இந்த வாழ்க்கை. டேணியல் பாலாஜி.. சினிமாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்.. நேற்று இரவு அந்த பொக்கிஷம் மறைந்து போய் விட்டது.
ரொம்ப எதார்த்தனமான நடிகர்.. கொஞ்சம் கூட மிகை இல்லாத நடிப்பு.. டேணியல் பாலாஜி என்ற நபர் அந்த இடத்தில் மறைந்து போயிருப்பார்.. அவர் ஏற்றுக் கொண்ட அந்த பாத்திரம்தான் தலை தூக்கி நிற்கும்.. இப்படியெல்லாம் இயல்பான நடிப்பு கலந்த நடிகர்கள் வெகு அரிதானவர்கள்.. கிட்டத்தட்ட ரகுவரன் போன்ற ஒரு அசாத்தியமான திறமைசாலிதான் டேணியல் பாலாஜி.
ஜஸ்ட் 48 வயதுதான் ஆகிறது. மாரடைப்பால் நேற்று இரவு காலமாகியுள்ளார் டேணியல் பாலாஜி. நடிகர் முரளியின் தாயாரும், இவரது தாயாரும் அக்கா தங்கைகள். அண்ணன் தம்பியாக இருந்தாலும் கூட முரளியின் பெயரைச் சொல்லி வளர விரும்பாதவர் டேணியல் பாலாஜி. முரளியும் அப்படியே. தம்பிக்காக எங்கும் சிபாரிசு செய்யாதவர். இருவருமே அருமையான மனிதர்கள் என்பது மிகப் பெரிய ஆச்சரியமான ஒற்றுமை. முரளியும் இப்படித்தான் யாரும் எதிர்பாராத நேரத்தில் மரணத்தைத் தழுவினார். அவரது வழியில் இப்போது அவரது தம்பியும்.
சித்தி சீரியலில் அசத்தியவர் டேணியல் பாலாஜி. அதில் அவர் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர்தான் டேணியல்.. அதுதான் பின்னர் அவரது அடை மொழியாக வந்துஒட்டிக் கொண்டு விட்டது. அந்த சீரியலில் அவர் ஏற்று நடித்த அந்த சாடிஸ்ட் கதாபாத்திரம் பலரையும் வியக்க வைத்தது.. யாருங்க இந்த நடிகர் என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதன் பின்னர் அலைகள் என்ற சீரியலிலும் நடித்தார் பாலாஜி. தொடர்ந்து சினிமாவுக்கு வந்து விட்டார்.
தனது அண்ணன் முரளி நடித்த காமராசு படத்தில் உதவி இயக்குநராக அறிமுகமாகியவர் பின்னர் நடிப்புக்கு மாறினார். ஏப்ரல் மாதத்தில் படத்தில் அறிமுகமான இவருக்கு கெளதம் மேனன்தான் மிகச் சரியான அங்கீகாரத்தைக் கொடுத்தவர். காக்க காக்க படம் இவரது நடிப்புப் பசிக்கு முதல் தீனி என்றால் வேட்டையாடு விளையாடு படம்தான் மிகப்பெரிய வடிகாலாக அமைந்தது. அமுதன் என்ற வில்லன் கேரக்டரில் கமல்ஹாசனுக்கே சவால் விடும்படியாக மிரட்டியிருப்பார் டேணியல் பாலாஜி. அவரது பாடி லாங்குவேஜ் மிரட்டலான பேச்சு, ஸ்டைலிஷ் உச்சரிப்பு என்று கமல்ஹாசனையே தூக்கி சாப்பிட்டிருப்பார் இப்படத்தில்.
இப்படத்திற்குப் பின்னர் மிகப் பெரிய அளவில் பிரபலமானார் டேணியல் பாலாஜி. தொடர்ந்து பொல்லாதவன் படம் இவருக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தது. தொடர்ந்து வட சென்னை, பிகில், பைரவா என்று பல படங்களில் நடித்தார்.
ஒரு நடிகன், அவன் நடிக்கிறான் என்பது ஆடியன்ஸுக்குத் தெரியாத வகையில் நடிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.. டேணியல் பாலாஜி அப்படித்தான். அவரது படங்களைப் பார்த்தால் இதை எளிதாக உணர முடியும்.. அந்த வேடமாகத்தான் நாம் அவரை பார்க்க முடியும்.. அந்த இடத்தில் டேணியல் பாலாஜி என்ற நபர் இருக்க மாட்டார். அப்படி ஒரு எதார்த்தமான சூப்பரான கலைஞன்.
சமீபத்தில்தான் ஒரு கோவில் கட்டியிருந்தார் டேணியல் பாலாஜி. அவரது திறமையை தமிழ் சினிமா முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை. மிகச் சிறந்த நடிகரான அவருக்கு மிகப்பெரிய தீனியை தமிழ் சினிமா கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஏன் அப்படி அமையவில்லை என்பது ஆச்சரியமானது.
டேணியல் பாலாஜியின் மறைவு குறித்து அறிந்ததும் இயக்குநர்கள் கெளதம் மேனன், அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அவரது உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}