டெல்லி: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வெளியிட்டார். திரவுபதி முர்மு குடியரசுத் தலைவரான பிறகு நடைபெறும் முதல் ஆளுநர்கள் நியமனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மூத்த பாஜக தலைவர் ஆவார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்துள்ளார். 2 முறை லோக்சபா உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளார். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த அவருக்கு தற்போது ஆளுநர் பதவியை அளித்துள்ளது மத்திய அரசு.
தனக்கு கிடைத்துள்ள இந்த ஆளுநர் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகவும், தன்னை ஆளுநராக நியமித்த அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இல.கணேசன் இடமாற்றம்
மணிப்பூர் ஆளுநராக இருந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசன் நாகாலாந்து ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரும் முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து வந்த பகத் சிங் கோஷியாரி தன்னை அந்தப் பதவியிலிருந்து விடுவிக்குமாறு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். அதை ஏற்று அவருக்குப் பதில் மகாராஷ்டிராவின் புதிய ஆளுநராக ரமேஷ் பயஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நியமனம் செய்யப்பட்ட பிற ஆளுநர்கள்:
லெப்டினென்ட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் - அருணாச்சல் பிரதேசம்
லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா - சிக்கிம்
குலாப்சந்த் கட்டாரியா - அஸ்ஸாம்
சிவ பிரதாப் சுக்லா - இமாச்சல் பிரதேசம்
ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நஸீர் - ஆந்திரப் பிரதேசம்
பிஸ்வா பூசன் ஹரிசந்தன் - சட்டிஸ்கர்
சுஷ்ஸ்ரீ அனுசியா உய்க்கே - மணிப்பூர்
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - பீகார்
பகு சவுகான் - மேகாலயா
துணை நிலை ஆளுநர் பிரிகேடியர் டாக்டர் பிடி மிஸ்ரா - லடாக்
{{comments.comment}}