காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்காலில் ஒரு பெண் கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளார்.
ஒன்றரை வருடமாக கொரோனாவால் ஏற்படும் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ முகாம்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்காலில் ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது ஒரு கொரோனா உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.
காரைக்காலைச் சேர்ந்த 35 வயதுப் பெண் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரது நிலை மோசமானதைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மீண்டும் கொரோனாவுக்கு ஒரு உயிர்ப்பலி ஏற்பட்டிருப்பது புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களை அதிர வைத்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 4 நாட்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து காரைக்கால் முழுவதும் மருத்துவ முகாம்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஊக்குவித்து வருகின்றனர். முகக் கவசம் அணிவதை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்குமாறும் கோரிக்கைவிடுக்கப்பட்டு வருகிறது.
{{comments.comment}}