டெல்லி: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்பட்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பதவியேற்பு விழாவில் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி, நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக இன்று பதவியேற்க உள்ளார். இரவு 07.15 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் 30 பேர் கொண்ட அமைச்சரவையுடன் பிரதமர் மோடி பதவியேற்றுக் கொள்ள உள்ளார். இதில் வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட 2000 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பிரதமரின் பதவியேற்பு விழாவில் தங்களுக்கு இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை என நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கூறி இருந்தனர். எதிர்க்கட்சி தலைவர்கள் யாருக்கும் அழைப்பு கிடையாது. வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறி இருந்தனர்.
ஆனால் அவர்கள் பேட்டி அளித்த சிறிது நேரத்திலேயே பிரதமர் அலுவலகத்தில் இருந்து மல்லிகார்ஜூனேவை போனில் அழைத்து, பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழ் விரைவில் அவருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், இந்த பதவியேற்பு விழாவில் திரினமூல் காங்கிரஸ் பங்கேற்காது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
பாஜக லோக்சபா தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆதரவு கடிதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் 2 நாட்களுக்கு முன் அளிக்கப்பட்டது. அதோடு எம்.பி.,க்களின் ஆதரவு கடிதத்தையும் தேசிய ஜனநாயக கூட்டணி, ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளனர். பிரதமரின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று இரவு பதவியேற்க உள்ளதால், முன்னதாக காலையில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி உள்ளார்.
{{comments.comment}}