திருச்சி: கட்சி தாவப் போறீங்களா என்று கேள்விக்கு, அது மாதிரி பேசறவனை செருப்பால அடிப்பேன் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் திருநாவுக்கரசர். திருச்சி காங்கிரஸ் எம்.பியாக இருக்கிறார். ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்தவர் திருநாவுக்கரசர். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட்டார். பின்னர் தனிக் கட்சி ஆரம்பித்து இயங்கினார். அதன் பின்னர் பாஜகவுக்குப் போனார். அங்கு ராஜ்யசபா எம்பியாக இருந்தார்.
தற்போது சில வருடங்களாக அவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தலில் திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசுக்கு போட்டியிட சீட் தரப்பட மாட்டாது என்றும், திருச்சியில் மதிமுக போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் அதிருப்தி அடைந்த திருநாவுக்கரசர் பாஜகவுக்குப் போகப் போவதாகவும் செய்தி பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது திருநாவுக்கரசரிடம், ஒரு பிரபலமானவர் பாஜகவில் சேரப் போவதாக சொல்றாங்க.. அந்த வரிசையில் உங்களையும் சொல்றாங்க.. அதெப்படி பார்க்கறீங்க என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்
கேள்வியை உள் வாங்கிய வேகத்தில் திருநாவுக்கரசர், "அவனை செருப்பால அடிப்பேன்.. அந்த மாதிரி பேசறவனை செருப்பால அடிப்பேன்.. இனிமே சீமான் மாதிரி பேச நானும் முடிவு பண்ணிட்டேன். இதுமாதிரி கேள்வி கேட்டீங்கன்னா என்னுடைய பதில் இப்படித்தான் இருக்கும் என்று வேகமாக கூறினார் திருநாவுக்கரசர்.
இந்தப் பதிலைக் கேட்டு திருநாவுக்கரசுரடன் இருந்த அவரது கட்சியினர் கை தட்டி கலகலவென சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் செய்தியாளர்கள்தான் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
திருச்சியில் நான்தான் போட்டியிடுவேன்
தொடர்ந்து திருநாவுக்கரசர் பேசுகையில், திருச்சியில் மதிமுக போட்டியிட அதிக வாய்ப்பு இருக்குன்னு யார் சொன்னா.. இன்னார் சொன்னார்னு சொல்லுங்க.. சோர்ஸ் என்னான்னு சொல்லுங்க.. கட்சி சொல்வதைத்தான் கேட்போம்னு நேரு சொன்னார். நாங்களும் அதையேதான் சொல்கிறோம். கட்சி சொல்வதைக் கேட்போம். தொகுதிப் பங்கீட்டின்போது நாம போட்டியிடலாம்னு அவங்க சொல்வதும், நாம போட்டியிடுவோம்னு நாங்க கேட்பதும் இயல்புதான். யார் வேண்டுமானாலும் கேட்கலாம். கேட்பதற்கு அனைவருக்குமே உரிமை உண்டு. எங்களுக்கும் உரிமை உண்டு. நாங்களும் கேட்போம். அதில் நியாயம் இருக்கு. சிட்டிங் எம்பி என்ற வகையில் இங்கு போட்டியிடுவோம்னு சொல்ல எங்களுக்கும் உரிமை உள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. இறுதி வடிவம் பெறும்போது அது தெரியும்.
பிரதமர் பேசுவதற்கெல்லாம் நாம பதில் சொல்ல முடியாது. அவர் இஷ்டப்படுவதை பேசுகிறார். தேர்தல் நேரம் என்பதால் வாக்கு வங்கிகளைக் குறி வைத்தும் அவர் பேசலாம். வாக்கு வங்கிகளைக் கவர முடியுமா என்று உள்நோக்கத்துடனும் அவர் பேசலாம். அவர் பேசுவதற்கு அவர்தான் பொறுப்பு. அதற்கு நாம ஒன்றும் சொல்ல முடியாது என்றார் திருநாவுக்கரசர்.
{{comments.comment}}