டெல்லி: ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்யலாம் என்ற யோசனையை ஒரு இளம் காங்கிரஸ் எம்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சி மேலிடம் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் இது ஆலோசனையில் இருப்பதாக தெரிகிறது.
ராகுல் காந்தி தகுதிநீக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து செய்ய வேண்டியவை குறித்து கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. அவை குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.
கூட்டத்தில் எம்.பி. ரவ்நீத் பிட்டு பேசும்போது, ராகுல் காந்தி தகுதி நீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். அவரது இந்த யோசனைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணிக்கம் தாக்கூர் எம்.பியும் ஆதரவு தெரிவித்தார். இருப்பினும் இந்த யோசனை குறித்துகட்சித் தலைமை எந்த கருத்தையும் அப்போது தெரிவிக்கவில்லையாம். பரிசீலிக்கலாம் என்று மட்டும் கூறியதாக கூறப்படுகிறது.
கூண்டோடு ராஜினாமா யோசனைக்கு கட்சியின் இளம் எம்.பிக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம், மூத்த தலைவர்கள் இதை விரும்புவார்களா என்று தெரியவில்லை. அவர்கள் மத்தியில் இதுகுறித்து தயக்கம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காரணம், அடுத்த முறை மீண்டும் எம்.பி சீட் கிடைக்குமா, கிடைத்தாலும் ஜெயிப்போமா என்ற குழப்பத்தில் அவர்கள் உள்ளனர். இந்த நிலையில் பாஜக போகும் போக்கும் ஒரு மாதிரியாக உள்ளது. எனவே இருக்கிற பதவியை முடிந்தவரை அனுபவித்து விடுவது என்ற யோசனையில் அவர்கள் உள்ளனர். எனவே கூண்டோடு ராஜினாமா முடிவை அவர்கள் ஏற்பார்களா என்று தெரியவில்லை.
கூண்டோடு ராஜினாமா செய்யலாம் என்ற யோசனையைத் தெரிவித்துள்ள ரவ்நீத் சிங் பிட்டு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். தீவிர ராகுல் காந்தி ஆதரவாளர். 2 முறை எம்.பி ஆனவர். முதல் முறை அனந்த்பூர் சாகிப் தொகுதியிலிருந்தும், தற்போது லூதியானா தொகுதியிலிருந்தும் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராகுல் காந்திக்காக தீவிரமாக போராட்டங்களில் ஈடுபட்டும் வருகிறார்.
{{comments.comment}}