மதுரை: மதுரையின் பிரமாண்ட அடையாளமாக உருவெடுத்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரை என்ற பெயர் காலை முதலே டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்து வந்தது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று மாலை திறந்து வைக்கப்படுவதால் மதுரை மட்டுமல்லாமல் தென் தமிழ்நாடே உற்சாகத்தில் மூழ்கியிருந்தது. கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளான இன்று மதுரையில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னையில் அண்ணா பெயரில் நூற்றாண்டு நூலகத்தை மறைந்த முதல்வர் கருணாநிதி திறந்து வைத்து சென்னைக்கு புதிய அடையாளம் கொடுத்தது போல, மதுரையில் கருணாநிதி பெயரில் இந்த பிரமாண்ட நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி இன்று திறந்து வைத்தார்.
மதுரை மட்டுமல்லாமல் தென் தமிழ்நாடு முழுமைக்கும் பயன் அளிக்கக் கூடிய வகையில் இந்த நூலகம் அமைந்துள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோருக்கு இந்த நூலகம் மிகப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிரமாண்ட விழா
இன்று மாலை 5 மணியளவில் மதுரை புது நத்தம் சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தை முதல்வர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கலந்து கொண்டார். அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மதுரை மேயர், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
முன்னதாக நூலக வளாகத்தில் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நூலகத்தைத் திறந்து வைத்து அவர் ஒவ்வொரு தளமாக சென்று சுற்றிப் பார்த்தார்.
மதுரையின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோவில், வண்டியூர் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மஹால், ராஜா முத்தையா மன்றம், தமுக்கம் மைதானம் என பல இதுவரை இருந்து வந்த நிலையில் தற்போது இந்த வரிசையில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு நூலகமும் பிரதானமாக இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}