பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க.. புதிய மசோதா.. சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல்

Jan 10, 2025,05:31 PM IST

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்தார்.


தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் இன்று 5வது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:


பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்பாக உரிய சட்டத் திருத்தங்களோடு இரண்டு சட்டமுன்வடிவுகளை இந்த அவையில் அறிமுகம் செய்வதற்குமுன், அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய விவரங்களைத் தங்களுடைய அனுமதியோடு முன்னுரையாக நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.


சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரும் அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு. (சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வரும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை நாம் தினந்தோறும் அறிந்தும், உணர்ந்தும் வருகிறோம்.


இதன்மூலமாக, பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக, தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லும் மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூகப் பங்களிப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது.




அதேநேரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர்மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதிலும் உறுதியோடு செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு. அரசின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி இந்த மாமன்றத்தில் நான் பலமுறை எடுத்துரைத்துள்ளேன்.


பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டிற்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த அரசில்தான். பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு பற்றி 2 இலட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியுள்ளதும் இந்த அரசுதான். சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்திருப்பதும் இந்த அரசுதான்.


அனைத்துப் பெண்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபட முனைவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும். இந்த வகையில், B.N.S. சட்டத்தின் கீழும், நமது மாநில அரசு சட்டங்களின் கீழும் ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டு இருந்தாலும், இத்தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது.


இந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்குவதற்கு, B.N.S, மற்றும் B.N.S.S. சட்டங்களில் மாநில சட்டத் திருத்தத்திற்கும், ’தமிழ்நாடு 1998-ஆம் ஆண்டு பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத் தடை செய்யும் சட்டத் திருத்தத்திற்கும், சட்டமுன்வடிவுகளை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.


புதிய மசோதாவில் என்ன உள்ளது?


இந்த புதிய சட்ட திருத்தத்தின் படி மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் தண்டனை  அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.


பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடும் காவல் தண்டனை அளிக்க முடியும் அது மட்டுமல்லாமல் பெண்ணை பின் தொடர்ந்தால் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் பிணையில் விடுவிக்காத படியும் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. 


அதேபோல் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் பெற்றுக் கொடுக்க முடியும். குறிப்பிட்டு சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்டோபர் முதல் மார்ச் வரை மட்டுமே படங்களில் நடிப்பேன்.. மற்ற நேரங்களில் ரேஸ்.. அஜீத் அறிவிப்பு

news

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க.. புதிய மசோதா.. சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல்

news

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் உள்ள பாசிச சக்திகள்.. அடையாளம் காண்போம்.. திருமாவளவன்

news

வாரத்திற்கு 90 மணி நேர வேலை... எல் அண்ட் டி சிஇஓ.,வுக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் சூப்பர் பதில்!

news

ஈரோடு கிழக்கு தொகுதி.. வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.. முதல் ஆளாக பத்மராஜன் மனு செய்தார்!

news

பெரியார் சொல்லாதவற்றை சொன்னார் என பொய் பரப்பும் தற்குறிகள்.. துரைமுருகன் ஆவேசம்!

news

பொங்கலுக்கு ஊருக்குப் போலாமா.. இன்று முதல் 13ம் தேதி வரை .. 21,904 சிறப்புப் பேருந்துகள்!

news

பெரியார் குறித்த பேச்சு.. நாம் தமிழர் சீமான் மீது குவியும் புகார்கள்.. இதுவரை 11 மாவட்டங்களில் FIR

news

Vaikunta Ekadasi 2025.. "கோவிந்தா...கோவிந்தா" கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்