சென்னை: திமுக அரசு செய்து வரும் சாதனைகளை, அமல்படுத்தும் திட்டங்களை எதிர்க்கட்சித் தலைவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! என்ன செய்வது? அதனால், வாய்க்கு வந்தபடியெல்லாம் பொத்தாம் பொதுவாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து புலம்பிக்கொண்டு இருக்கிறார். 20 விழுக்காடு வாக்குறுதிகளைகூட நிறைவேற்றவில்லை என்று எரிச்சலில் புலம்பியிருக்கிறார். நான் கேட்க விரும்புவது - அவரால் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா? திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டு வெட்டிப்பேச்சு பேசுவது போன்று, வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா? என்று கேட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சிவகங்கையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் ஆற்றிய உரை:
சிவகங்கை மண்ணுக்கு வரும் போதே எனக்கு சிலிர்ப்பு ஏற்படுகிறது! வீரம் பிறக்கிறது! முத்து வடுகநாதர், வீரமங்கை வேலுநாச்சியார் - மானம் காத்த மருது சகோதரர்கள் - தியாகச் சுடர் குயிலி போன்றோர் வாழ்ந்த மண் இந்த சிவகங்கை மண்! வீரத்துக்கு அடிப்படையான தமிழின் தொன்மையை, உலகுக்கு உரைக்கக்கூடிய கீழடித் தடயங்களும் கொண்ட மண்தான், இந்தச் சிவகங்கை சீமை!
வீரமும் புகழும் கொண்ட இந்த மாவட்டத்தை, நம்முடைய ஆற்றல் மிக்க அமைச்சர், பெரியகருப்பன் அவர்கள் எல்லா வகையிலும் சிறப்பாக வளர்த்தெடுக்கிறார்! நம்பி பொறுப்பு கொடுக்கலாம் என்று நான் நினைப்பவர்களின் பட்டியலில் இருக்கக்கூடியவர் தான் நம்முடைய பெரியகருப்பன் அவர்கள்! அவர் பேசுவது வேண்டுமானால், பொறுமையாக அமைதியாக இருக்கலாம், நிதானமாக இருக்கலாம்! ஆனால், செயலில் வேகமும் நேர்த்தியும் நிச்சயமாக இருக்கும்! அதனால்தான், இந்த விழாவையும், மாநாடு போல மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருக்கிறார். அவருக்கும் மாவட்டத்தின் ஆட்சியர் ஆஷா அஜீத் அவர்களுக்கும், மாவட்ட அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
சிவகங்கைச் சீமையை வளர்த்ததில் கழக ஆட்சிக்கு மிகப்பெரிய பங்குண்டு! கழக ஆட்சி அமைந்தாலே, நலத்திட்ட உதவிகள் சிவகங்கையைத் தேடி வரும்… அப்படி, சிவகங்கை மாவட்டத்திற்கு என்று கழக ஆட்சிக் காலங்களில் செய்யப்பட்டிருக்கக்கூடிய சில திட்டங்களை மட்டும் நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சிவகங்கை, திருப்பத்தூர், நெற்குப்பை, இளையான்குடி, கல்லல், காளையார்கோவில் உள்ளிட்ட பகுதி மக்கள் பயனடையக்கூடிய வகையில், 616 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்! சிவகங்கை மருத்துவக் கல்லூரி! 55 திருக்கோயில்களில், 14 கோடி ரூபாய் செலவில் திருப்பணி!
இளையான்குடியில், சார்பதிவாளர் அலுவலகம், நீதிமன்றக் கட்டடம், கருவூலம், ஆதிதிராவிட மாணவர்களுக்கான தங்கும் விடுதி, அரசு மருத்துவமனை விரிவாக்கம்! இளையான்குடியில் புறவழிச் சாலை!
சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாணவ மாணவியர் விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள்! மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை!சிவகங்கையில் புதிய நகராட்சிக் கட்டடம்! மகளிர் கல்லூரி!கூட்டுறவு தொழிற்பயிற்சி கல்லூரி என்று இப்படி சொல்லிக் கொண்டிருந்தால், நாள் முழுவதும் நான் வரிசைப்படுத்தி சொல்லிக்கொண்டே இருக்கலாம்!
அதுமட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசில் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில், அறிவித்து, செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும், நேற்று நான் காரைக்குடியில் ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன்.
அந்த பணிகளைப் பட்டியலிட்டு சொல்லவேண்டும் என்றால், காவிரி ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு, எட்டு பேரூராட்சிகளுக்கும், இரண்டாயிரத்து 452 ஊரக குடியிருப்புகளுக்கும், மூன்று நகராட்சிகளுக்கும், ஆயிரத்து 753 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் விரைவில் நிறைவடைய போகிறது!
காரைக்குடியில் சங்கரபதி கோட்டை மறுசீரமைப்பு
130 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்கீழ் 900 குடியிருப்புகள், மினி விளையாட்டு அரங்கம், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நியோ ஐ.டி பார்க் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சட்டக்கல்லூரிப் பணிகள், சிறாவயல் கிராமத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி ஜீவானந்தம் நினைவு மணிமண்டபம், 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செட்டிநாடு வேளாண்மை கல்லூரி சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் கூடுதல் மகப்பேறு மருத்துவ கட்டடம், அதி தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம், சிவகங்கை நகர் பேருந்து நிலையம் சீரமைப்பு. மானாமதுரையில் புதிய ஐ.டி.ஐ, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 248 வீடுகள் கட்டும் பணி.
நாட்டார் கால்வாய் திட்டம் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மானாமதுரை நகர் குடிநீர் திட்டம், 2 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருப்புவனம் பேரூராட்சி குடிநீர் வழங்கும் திட்டம், 17 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல் - பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் இளையான்குடி பேரூராட்சியில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் என்று பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
இப்படி, ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு மனிதரையும் நாடிச் சென்று உதவுவதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு! அப்படித்தான் “எல்லாருக்கும் எல்லாம்” என்று பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்! அதனால்தான், உங்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திலும், அண்ணனாக, தம்பியாக, அப்பாவாக, மகனாக உற்ற நேரத்தில் உதவக்கூடிய உறவாக, உடன்பிறப்பாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில், இந்தச் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடைபவர்களின் எண்ணிகையை சொல்கிறேன். அதை நீங்கள் தயவு செய்து கேட்கவேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், இரண்டு இலட்சத்து 38 ஆயிரத்து 428 குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்! வங்கிக் கணக்கில், பணம் வந்தவுடனே, எங்கள் அண்ணன் ஸ்டாலின், தாய்வீட்டுச் சீர் அனுப்பி வைத்திருக்கிறார் என்று என்னுடைய சகோதரிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
அதேபோல், கல்லூரிக்குச் செல்ல வேண்டுமே, சிறிய, சிறிய தேவைகளின் செலவுக்கு என்ன செய்வது என்று கஷ்டப்படும் மாணவ மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் என்று வருடத்திற்கு, 12 ஆயிரம் ரூபாயை, எங்கள் அப்பாவாக இருந்து, தருகிறார் என்று மாணவ மாணவிகள் சொல்கிறார்கள்!
அந்த “புதுமைப்பெண்” திட்டத்தில், ஏழாயிரத்து 210 மாணவிகளும் – “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தில், ஆறாயிரத்து 76 மாணவர்களும் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்! அடுத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களைப் பொறுத்தவரைக்கும், கடந்த காலங்களில், நான் துணை முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, மணிக்கணக்கில் மேடையில் நின்று வழங்கியிருக்கிறேன். சுழல்நிதியால் எத்தனையோ சகோதரிகள் சுயதொழில் செய்து இன்றைக்கு முன்னேறியிருக்கிறார்கள்.
அந்தத் திட்டத்தில் கணக்கெடுத்துப் பார்த்தால், 855 கோடி ரூபாய் கடனுதவி தரப்பட்டிருக்கிறது. பசியால் மாணவச் செல்வங்கள் அவதிப்படக் கூடாது என்று தொடங்கப்பட்டத் திட்டம் தான் காலை உணவுத் திட்டம், அந்தத் திட்டத்தில், 37 ஆயிரம் மாணவர்கள் சுவையாக வயிறார சாப்பிடுகிறார்கள்!
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், 12 இலட்சம் பேருக்கு சிகிச்சை அளித்திருக்கிறோம்! மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், ஒரு இலட்சத்து 34 ஆயிரம் பேர் பயனடைந்திருக்கிறார்கள்! 62 ஆயிரம் பேருக்கு, முதியோர் ஓய்வூதியம் வழங்கியிருக்கிறோம்! 27 ஆயிரத்து 938 பேருக்கு, மனைப் பட்டாக்கள் வழங்கியிருக்கிறோம்! 23 ஆயிரத்து 553 பேரின் நகைக்கடனை, தள்ளுபடி செய்திருக்கிறோம்! 24 ஆயிரத்து 969 உழவர்களுக்கு பயிர்க்கடன் வழங்கியிருக்கிறோம்!
எட்டு இலட்சம் உழவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது! மூன்றாயிரத்து 822 உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்பு வழங்கியிருக்கிறோம்! 65 திருக்கோயில்களில், குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம்! கழனிவாசல் கிராமத்தில் சிப்காட் வளாகம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது!
இதுமட்டுமல்ல, இந்தச் சிவகங்கை மாவட்டத்தில், இதுவரைக்கும் 91 ஆயிரத்து 265 பேருக்கு, 38 கோடியே 52 இலட்சத்து 55 ஆயிரத்து 476 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது! இதெல்லாம் சிவகங்கை மாவட்டத்திற்கு மட்டும், கடந்த மூன்றரை ஆண்டு ஆட்சி காலத்தில் நாம் செய்திருக்கிறோம்! அடுத்தடுத்து இன்னும் அதிகமாக செய்து தர இருக்கிறோம். அதற்கு அடையாளமாக இந்த விழாவில் மூன்று அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்…
முதல் அறிவிப்பு - இப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருக்கும் கட்டடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகி, அது பழுதடைந்து, இடப்பற்றாக்குறை சூழ்நிலையில் இருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதனால், பல துறைகளின் அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கிக்கொண்டு இருப்பதாலும், எல்லா மாவட்ட அலுவலகங்களும் ஒரே இடத்தில் சிறப்பாக செயல்படும் வகையில் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும்!
இரண்டாவது அறிவிப்பு - சிங்கம்புணரி, திண்டுக்கல் மற்றும் காரைக்குடி நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள் - திருப்பத்தூர் நகரப் பகுதிக்குள் வராமல் செல்லும் வகையில், திருப்பத்தூர் நகரத்திற்கு 50 கோடி ரூபாய் செலவில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு - கடந்த ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, விரிவாக்கப்பட்ட காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம் அமைக்க 30 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
இப்படி, நம்முடைய அரசு, துல்லியமாகவும் - துரிதமாகவும் செயல்பட்டு வருகிறது! அதனால்தான், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன என்ன செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு மேடையிலும் நான் புள்ளிவிவரத்துடன் சொல்லி வருகிறேன்…
இதையெல்லாம் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! என்ன செய்வது? அதனால், வாய்க்கு வந்தபடியெல்லாம் பொத்தாம் பொதுவாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து புலம்பிக்கொண்டு இருக்கிறார். 20 விழுக்காடு வாக்குறுதிகளைகூட நிறைவேற்றவில்லை என்று எரிச்சலில் புலம்பியிருக்கிறார். நான் கேட்க விரும்புவது - அவரால் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா? திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டு வெட்டிப்பேச்சு பேசுவது போன்று, வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா?
மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. காரணம், நாங்கள் அரசாங்கத்தில் இருக்கிறோம். அரசை வழிநடத்திக்கொண்டிருக்கிறோம். அதனால் உங்களிடம் புள்ளிவிவரத்தோடு சொல்ல விரும்புகிறேன். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்! இன்னும் 116 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்படவேண்டும்!
அரசில் மொத்தம் 34 துறைகள் இருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் இரண்டு-மூன்று திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அளவில்தான் மீதம் இருக்கிறது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஒப்புக்கொள்கிறோம். இல்லை என்று மறுக்கவில்லை. இதை தெரிந்தும் தெரியாதது போன்று, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசுகிறார்! பாவம் அவர்! மற்றொரு கட்சித் தலைவர் அறிக்கையை அப்படியே Copy-Paste செய்து வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார், பேசிக்கொண்டு இருக்கிறார்.
பிரபல பத்திரிகைகள் தங்களுடைய இணைய பக்கத்தில் அவருடைய காப்பியடித்த அறிக்கையை பதிவிட்டார்கள். இதுதான் அவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் எப்படிப்பட்டவை என்பதற்கான சான்று! இப்போது வாய்ச்சவடால் விடும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களின் போது, அ.தி.மு.க. சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை எடுத்து ஒவ்வொரு வாக்குறுதிக்கு கீழும், அதை நிறைவேற்றிய நாள், அதற்கான அரசாணை எண், அதனால் பயனடைந்தவர்கள் விவரம் என்று பட்டியலிட்டு புத்தகமாக வெளியிடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா?
முழுவதுமாக பத்தாண்டுகள் ஆட்சி செய்து, தமிழ்நாட்டை அதல பாதாளத்தில் தள்ளியதை மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்து, புது புதுக்கதைகளோடு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்!
சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலைத் திட்டம் என்று சொன்னார்களே! நிறைவேற்றினார்களா?
மகளிருக்கு 50 விழுக்காடு மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று சொன்னார்களே! யாருக்காவது கொடுத்திருக்கிறார்களா?
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன் வழங்கப்படும் என்று சொன்னார்களே! கொடுத்தார்களா?
தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்’ வந்துவிட்டதா?
பத்து ஆடை அலங்காரப் பூங்காக்கள் என்று அறிவித்தார்களே, எங்கு இருக்கிறது? 58 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்று சொன்னார்களே! யாராவது அப்படி பயணம் செய்திருக்கிறீர்களா?
பொது இடங்களில், இலவச 'Wi-Fi' என்று சொன்னார்களே! எந்த இடத்திலாவது அந்த வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்களா? இப்படி வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாழாக்கியவர்கள் - தமிழ்நாடு திவாலாகிவிட்டது என்று புது புரளியைக் கிளப்புகிறார்கள். தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தரை மட்டத்துக்கு அனுப்பியவர்கள் - பொய்களாலும் அவதூறுகளாலும் நம்மை வீழ்த்த முடியுமா! என்று பார்க்கிறார்கள்.
உண்மையில், இன்றைக்கு பேசும் எதிர்க்கட்சித் தலைவருடைய ஆட்சிக்காலத்தில், தமிழ்நாடு என்ன நிலைமையில் இருந்தது? 2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உபரி வருவாய் மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, 2013-ஆம் ஆண்டு முதல் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியதுதான், அ.தி.மு.க. அரசு! 2017-19 ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகளவு வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை தத்தளிக்க விட்டார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான நெருக்கடியிலிருந்து, தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம்!
இத்தனைக்கும், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அவர்கள் முதுகு வளைந்து சேவை செய்த அவர்களுக்கு இணக்கமான ஒன்றிய அரசு இருந்தது! அப்போதும் எதையும் கேட்டு பெறவில்லை! பதவிக்காக மட்டும் டெல்லிக்கு சென்றார்கள்!
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தததும் அதே ஒன்றிய அரசு, நம்மை தமிழ்நாடு அரசாகப் பார்க்காமல், கொள்கை எதிரிகளாக பார்த்து திட்டங்களை முடக்கினார்கள்! ஒன்றிய அரசின் அந்த ஓரவஞ்சனைகளையும் மீறிதான், தமிழ்நாட்டை முன்னேற்றிக்கொண்டு இருக்கிறோம்! ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும், மாநில அரசின் நிதியை செலவு செய்து திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்!
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் கையாலாகாத நிர்வாகச் சீர்கேடுகள் ஒருபுறம் - ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாராமுகம் மறுபுறம்! தமிழ்நாட்டை ஒன்றிய அரசு எப்படி வஞ்சிக்கிறது என்று மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு விலாவாரியாக பேட்டி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறார்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் அது எதையும் காதிலேயே வாங்குவதில்லை. அது எதையும் படிப்பதும் இல்லை! மிகவும் சாதாரணமாக தமிழ்நாடு திவால் ஆகிவிட்டது என்று சொல்கிறார் என்றால், தமிழ்நாடு திவால் ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணமா? என்று கேட்கத் தோன்றுகிறது.
மற்றொன்றும் சொல்கிறார். அரசு செய்வதெல்லாம் வெட்டி செலவாம். வெட்டி செலவு என்று எதை சொல்கிறார்? மகளிர் உரிமைத் தொகையை சொல்கிறாரா? காலை உணவுத் திட்டத்தை சொல்கிறாரா? எதை கொச்சைப்படுத்த இப்படி பேசுகிறார்?
எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே… எங்களுக்கு தெரியும், எந்த செலவு செய்தால் மக்களுக்கு நன்மை என்பது! உங்கள் நிர்வாகத்தை மக்கள் ஞாபக மறதியால் மறந்திருப்பார்கள் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள்!
எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே… நீங்கள் போடும் எல்லா கணக்கும் தப்பு கணக்கு தான்! மக்கள் எங்களுடைய செயல்பாடுகளையும் - மக்கள் நலத்திட்டங்களையும் கணக்கு போட்டு முதல் மதிப்பெண் கொடுக்கிறார்கள்! எங்களுக்கு அது போதும்!
மற்றொன்றும் சொல்கிறார்
தி.மு.க. ஆட்சிக்கு 13 அமாவாசைகள்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு காலெண்டரை கிழித்துக்கொண்டு இருக்கிறார். அதுதான் இப்போது அவருடைய வேலை. அவர் இருட்டில் உட்கார்ந்து அமாவாசையை எண்ணிக்கொண்டு இருக்கிறார். இருக்கட்டும் பரவாயில்லை… நாம் மக்களுக்கான நன்மைகளை எண்ணி, திட்டங்களை செயல்படுத்துவோம்! மக்களுடைய மகிழ்ச்சிளை மட்டும் எண்ணிப் பார்ப்போம்!
நேற்று நான் சிவகங்கைக்கு வந்ததிலிருந்து மக்கள் கொடுத்த வரவேற்பையும், அவர்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியையும் பார்க்கும்போது, உதயசூரியன் ஒளியில், தொடர்ந்து தமிழ்நாட்டை தி.மு.க.தான் என்றும் ஆளும்! ஆளும்! என்று கூறி மக்களுக்காக என்றும் நாங்கள் உழைப்போம்! உழைப்போம்! என்று சொல்லி நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
உங்களுக்காக, உங்களுடைய பிரச்சனைகளுக்காக, உங்களுடைய நன்மைகளுக்காக, ஒவ்வொருவருடைய வீட்டிற்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனைகள் சென்றுக்கொண்டிருக்கிறது. அது தொடரும்! தொடரும்! என்பதை மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்லி, திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரையில் என்றைக்கும் மக்களுடன் இருந்து பணியாற்றக்கூடிய இயக்கம்தான் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்தி மக்களுக்காக என்றும் உழைப்போம்! உழைப்போம் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது.. வருக.. முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட சஸ்பென்ஸ் டிவீட்!
Thaipoosam 2025.. மதுரையிலிருந்து பழனிக்கு 2 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.. தெற்கு ரயில்வே
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கா போறீங்க.. அதுக்குன்னே ஆப் வந்தாச்சு மக்களே.. இனி எல்லாமே ஈஸிதான்!
திமுக அரசு அமல்படுத்தும் திட்டங்களை ..எடப்பாடி பழனிச்சாமியால் தாங்கிக்க முடியலை.. முதல்வர் ஸ்டாலின்
திருவள்ளுவரையும், வள்ளலாரையும் களவாட முயற்சிப்பதே திமுகதான்.. வானதி சீனிவாசன் தாக்கு!
பரந்தூருக்கு பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கலாமே.. டாக்டர் அன்புமணி யோசனை
செல்வப் பெருந்தகை அவர்களே.. இதுதான் காங்கிரஸின் ராஜ தந்திரமா.. கேள்விகளை அடுக்கிய அண்ணாமலை!
பெரியார் குறித்த பேச்சு.. சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் குதித்த பெரியாரிய அமைப்பினர்!
கத்தியால் குத்திய நபரை போராடி பாத்ரூமுக்குள் அடைத்து வைத்த சைப் அலிகான்.. தப்பியது எப்படி?
{{comments.comment}}