மதுரை: டங்ஸ்டன் போராட்டத்திற்குக் கிடைத்துள்ளது சாதாரண வெற்றி அல்ல. மாபெரும் வெற்றி. அரிட்டாபட்டி உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் போராட்டம் வெற்றி பெற, சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்த அனைத்துக் கட்சிகளுக்கும், மக்களுக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை எதிர்த்து நடத்தி வந்த போராட்டம் மிகப் பெரிய வெற்றியாக மாறியுள்ளது. அந்தத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசு ரத்து முடிவை எடுக்கக் காரணமாக அமைந்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று அரிட்டாபட்டியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக அரிட்டாபட்டிக்கு முதல்வர் வந்தார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் முதல்வரின் கார் அரிட்டாபட்டிக்கு வருவதற்கு நீண்ட நேரம் பிடித்தது.
அரிட்டாபட்டிக்கு வந்து சேர்ந்த முதல்வர் அங்கு மக்கள் பிரதநிதிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டனர். அனைத்துக் கிராம மக்கள் சார்பில் கள்ளழகர் சிலை, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. அதை மகிழ்ச்சியுடன் முதல்வர் பெற்றுக் கொண்டார். இதையடுத்து முதல்வர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
முதல்வர் ஆற்றிய உரையிலிருந்து:
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியை அடிப்படையாக வைத்து அந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு, அந்த ஆட்சியை வழி நடத்திக் கொண்டுள்ள இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல வாழ்த்து சொல்ல பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வட்டாரத்தில் இருக்கக் கூடிய பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னையில் வந்து சந்தித்தனர்.
அவர்கள் என்னைச் சந்தித்தபோது உங்களுக்கு நன்றி சொல்ல வந்துள்ளோம் என்று சொன்னார்கள். நீங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய காரணத்தால்தான் அழுத்தம் தந்த காரணத்தால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. ஆக உங்களுக்கு நன்றி சொல்ல, விழா நடத்த நீங்கள் உத்தரவு தர வேண்டும். உங்களுக்குப் பாராட்டு விழா நடத்தவுள்ளோம் என்று சொன்னார்கள். எனக்கு எதுக்கு பாராட்டு விழா. அது எனது கடமை என்றேன். இல்லை நீங்கள் வந்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள் அன்புக் கட்டளையிட்டார்கள். அதை ஏற்று வந்திருக்கிறேன்.
இந்த விழாவைப் பொருத்தவரை இதை எனக்கான பாராட்டு விழா என்று கருதவில்லை. உங்களுக்கான பாராட்டு விழா என்றுதான் நான் கருதுகிறேன். உறுதியாக நின்று குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் போராட்டத்தையும் தொடர்ந்து நடத்தியுள்ளீர்கள். உங்களுக்குத்தான் முதலில் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை எனக்கான பாராட்டு விழாவாக கருதாமல் உங்களுக்கான பாராட்டு விழாவாக கருதுகிறேன். நான் வேற நீங்க வேற என்று பிரிக்க விரும்பலை. நமக்கு கிடைத்துள்ள வெற்றி இது.
ஒன்றிய பாஜகவைப் பொருத்தவரை டங்ஸ்டன் சுரங்கத்தை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டார்கள். ஆளும் கட்சி, மக்கள் சக்தியோடு அதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். மகிழ்ச்சி மிக்க வெற்றியாக இது அமைந்திருக்கிறது. உங்களது மகிழ்ச்சியில் நானும் கலந்து கொள்ள உங்களிடத்தில் வந்திருக்கிறேன். உங்களது முகத்தைப் பார்க்கும்போது முக மலர்ச்சியைப் பார்க்கும்போது ஆர்வத்தைப் பார்க்கும்போது ஆரவாரத்தைப் பார்க்கும்போது இங்கேயே இருந்து இங்கேயே பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. ஆனால் நேரமில்லை. நாளை விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்திற்குப் போக வேண்டும். எனவே சுருக்கமாக தெரிவிக்க விரும்புவது, பாஜக அரசைப் பொறுத்தவரைக்கும் என்னென்ன கொடுமைகள், அக்கிரமங்களை மக்களுக்கு துரோகமான செயல்களை செய்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.
இன்றைக்கும் இந்தியாவில் இருக்கக் கூடிய பல்வேறு மாநிலங்களிலிருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம், பேரணி நடத்திக் கொண்டுள்ளனர். குளிரிலும், வெயிலிலும் நூற்றுக்கணக்கான விவசாயப் பெருங்குடி மக்கள் இறந்து போயுள்ளனர். ஆனால் அப்படி நடத்த போராட்ட 2 வருட காலம் நடந்தது. டங்ஸ்டன் ஏலம் விடப்பட்ட செய்தி வெளியானதும் நீங்க போராட்டம் நடத்தினீர்கள். 3 மாதத்திலேயே வெற்றியைக் கண்டுள்ளீர்கள். அதுதான் முக்கியம். மத்திய அரசு பணிந்து அதை ரத்து செய்துள்ளது. இதற்குக் காரணம் மக்களும், தமிழ்நாடும், அரசும் காட்டிய கடுமையான எதிர்ப்பும்தான் காரணம். இது சாதாரண வெற்றி இல்லை, மாபெரும் வெற்றி
டங்ஸ்டன் பிரச்சினைக்கு மூல காரணம் என்னவென்றால், மாநில அரசுடைய அனுமதி இல்லாமல் முக்கிய கணிம வளங்களை மத்திய அரசே ஏலம் விடலாம்னு நாடாளுன்றத்தில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம்தான் காரணம். இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது அதை திமுக மட்டுமல்ல கூட்டணிக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்த்தோம். ஆனால் இப்போது எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய அதிமுக என்ன செய்தது. அவர்கள் எதிர்க்கவில்லை. மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கக் கூடிய தம்பிதுரை இந்த சட்டத்தை ஆதரித்து வரவேற்றுப் பேசியுள்ளார். இதுதான் டங்ஸ்டன் பிரச்சினையின் தொடக்கப் புள்ளியாக இருந்தது.
இதைத் தொடர்ந்து 2 முறை தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். எதிர்ப்பு தெரிவித்து. அதையும் அரசியல் காரணத்திற்காக மறைக்கப் பார்க்கிறார்கள். தொடக்கத்திலேயே நம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். பொய்ப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். எழுதிய கடிதங்களையும் மீறி மத்திய அரசு ஏலம் விடுவதற்கான முயற்சியைச் செய்தனர். தொடர்ந்து போராட வேண்டிய அவசியம் வந்தது.
23.11.2024 கிராம சபை கூட்டத்தில் மக்கள் டங்ஸ்டன் ஏலத்திற்கு எதிராக தீர்மானம் போட்டனர். அமைச்சர் மூர்த்தி அதில் கலந்து கொண்டார். இந்தத் திட்டத்திற்கு, நிச்சயமாக முதல்வர் அனுமதி தர மாட்டார் என்று எடுத்துச் சொல்லியுள்ளார். அரசு தடுத்து நிறுத்தும், அது உறுதி என்று கூறியிருந்தார். அடுத்து மேலூரில் வணிகர்கள், பொதுமக்கள் சார்பில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. டங்ஸ்டன் சுரங்கத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அப்போதும் சொன்னார். அன்று மதியமே பிரதமருக்கு நான் அவசரக் கடிதம் எழுதினேன். திட்டத்தை ரத்து செய்து கோரிக்கை வைத்து நானே எழுதினேன்.
அன்று மாலையிலேயே மதுரை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் அனைத்து வணிகர் அமைப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. மூர்த்தி கலந்து கொண்டு விளக்கினார். சட்டசபையில், 9.12.2024 அன்று நானே தீர்மானம் கொண்டு வந்தேன். சிலர் குறுக்குசால் ஓட்ட முயற்சித்தனர். நான் அதை அரசியலாக்க விரும்பவில்லை. இது அரசியலே இல்ல. இது நம்ம பிரச்சினை. நான் இருக்கிற வரை டங்ஸ்டன் நிச்சயம் வராது. அனுமதி தந்தால்தான் கொண்டு வர முடியும். அதையும் மீறி வந்தால் முதலமைச்சராக இருக்க மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னேன். அதில் திட்டவட்டமாக இருக்கிறோம், இதுதான் முடிவு என்று சொன்னேன். சில அமைச்சர்கள் கூட ஏன் அந்த வார்த்தையைச் சொன்னீர்கள் என்று கேட்டார்கள். எனக்கு பதவியைப் பற்றிக் கவலை இல்லை. மக்கள்தான் முக்கியம் என்று அவர்களிடம் கூறினேன்.
மக்களின் போராட்டத்தை மதித்து ஒன்றிய அரசு இந்த ஏல அறிவிப்பை ரத்து செய்துள்ளனர். எல்லாக் கட்சிகளுக்கும், உங்கள் சார்பாக இந்தப் பகுதி மக்களுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இது என்னுடைய அரசு அல்ல உங்களுடைய அரசு. உங்களில் ஒருவனாக இருந்து கடமையை நிறைவேற்றவேன் என்று பதவியேற்றபோதே சொன்னேன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றுதான் பதவியேற்றேன். அந்த இடத்திலிருந்துதான் ஆட்சியை நடத்தி வருகிறேன். உங்களுக்காகதான் இந்த ஆட்சி என்று கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வட கிழக்குப் பருவ மழை.. 1871ம் ஆண்டுக்குப் பிறகு.. 3வது முறையாக நீண்ட நாள் நீடித்த பருவ மழை!
மகா கும்பமேளா 2025 : எகிறும் விமான டிக்கெட் கட்டணம்... 600% லாபம் பார்த்த விமான நிறுவனங்கள்
TN BJP president Race: தமிழ்நாட்டு பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் இவரும் இருக்கிறாரா?
100 நாள் வேலை நிலுவைத் தொகை.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
தைப்பூசத்தையொட்டி.. பழனி முருகன் கோயிலில் 3 நாட்களுக்கு கட்டணமில்லா தரிசனம்.. அமைச்சர் சேகர்பாபு
உத்தரகாண்ட் மாநிலத்தில்.. பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது.. இன்று முதல்!
நெடுஞ்சாலைகள்,பொது இடங்களில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள்.. அமைக்க.. ஹைகோர்ட் தடை!
பெற்றோர்களே.. குட்டீஸ்கள் சாப்பிடும் போது கவனம்.. கேரட் தொண்டையில் சிக்கி சிறுமி மரணம்!
மறக்க முடியாத மழை நினைவுகளுடன்.. விடைபெற்ற வட கிழக்குப் பருவமழை.. அடுத்து வெயிலுக்கு காத்திருப்போம்!
{{comments.comment}}