டிடி தமிழ் விழாவில் பாடப்படாத .. தெக்கணமும் திராவிடநல் திருநாடும்.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

Oct 18, 2024,06:47 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்ட டிடி தமிழ் டிவி விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரி மட்டும் இடம் பெறவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநருக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்த விழாவைக் கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


டிடி தமிழ் டிவி சார்பில் இன்று இந்தி மாத நிறைவு விழா நடைபெற்றது. அதில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஒரு படி மேலே போய் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதமும் எழுதியிருந்தார்.


இருப்பினும் இந்த விழா திட்டமிட்டபடி நடந்தது. விழாவில் இன்னொரு சர்ச்சை அரங்கேறியது. விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது பாடலின் 3வது வரியில் வரும் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரி மட்டும் பாடப்படவில்லை. மாறாக அடுத்த வரிக்குப் பாடியவர்கள் போய் விட்டனர். பாடும்போதே அதில் குழப்பம் ஏற்பட்டது.  ஒரு வேளை பாடுவதில் ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால் மீண்டும் கூட பாடச் சொல்லியிருக்கலாம் விழா ஏற்பாட்டாளர்கள். ஆனால் அப்படிச் செய்யவில்லை. மாறாக 3வது வரியை விட்டு விட்டு பாடி முடித்தனர்.


இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வேண்டும் என்றே திராவிட நல் திருநாடு என்ற வரியை ஆளுநர் தவிர்க்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்த்தாயை மட்டுமல்லாமல், தென் மாநிலங்களையே அவமதித்து விட்டார் ஆளுநர் என்று பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.




முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


ஆளுநரா? ஆரியநரா?


திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!


சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.


இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!


திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? 


தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். 


கடந்த காலத்திலும் கூட மத்திய அரசு விழாக்கள் சிலவற்றில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படாமல் தவிர்க்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் பாடலை எடிட் செய்து பாடிய விதம் பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது. ஏன் இப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை. இது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த சர்ச்சையை தவிர்த்திருக்க வேண்டும், ஏன் உருவாக்கினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.


அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை


முன்னதாக இந்தி வார நிறைவு  விழா குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்  தெரிவித்து அறிக்கை விடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


" எங்கெங்கு காணினும் சக்தியடா ” என்று பாவேந்தர்  பாரதிதாசன் பாடினார். தொட்டதெற்கெல்லாம் அவரை குறிப்பிடும் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் நாட்டில் “எங்கெங்கு காணினும் இந்தி” -யடா என்று பாடிக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.


நாடு முழுவதும் இந்தி மாதம் என்ற ஒன்றை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழா சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இன்று மாலை நடைபெறும் என்றும், அதில் தமிழக ஆளுநர் அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மத்திய அரசு முன்னெடுப்பது ஏற்கக்கூடியதல்ல என்று அவர் கூறியுள்ளார். 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்த் தாய் வாழ்த்தில் குளறுபடி.. கவனச் சிதறலால் நடந்த தவறு.. மன்னிப்பு கேட்டது டிடி தமிழ்!

news

டிடி தமிழ் விழாவில் பாடப்படாத .. தெக்கணமும் திராவிடநல் திருநாடும்.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

news

திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலையை கைவிட வேண்டும்.. எடப்பாடி பழனிச்சாமி

news

திராவிட நல் திருநாடு.. பயிற்சியின்றி தவறாக பாடியிருக்கிறார்கள்.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

news

9 மாதம் கழித்து 50 போட்ட விராட் கோலி.. டெஸ்ட் போட்டிகளிலும் புதிய மைல்கல்லை எட்டினார்!

news

தமிழ்நாடு ரேஷன் கடை பணிகளுக்கான காலி பணியிட அறிவிப்பு வந்தாச்சு.. விண்ணப்பிச்சுட்டீங்களா!

news

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 அறிவிப்பு வந்தாச்சு.. சட்டுப்புட்டுன்னு சீக்கிரம் அப்ளிகேஷனை போடுங்க!

news

சென்னையில் இந்தி மாதம்.. தமிழை சிறுமைப்படுத்தாதீர்கள்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

news

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்