சென்னை: கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம், இந்தியில் பேசி, இந்தி படித்தாக வேண்டும் என்று பாடம் கற்றுக் கொடுத்த சிஐஎஸ்எப் வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டுள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:
கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் @CISFHqrs வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்
பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர். "நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது" என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர், "தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும்" என்று உரத்தக் குரலில் கூறி தமிழ் பொறியாளரை அவமதித்திருக்கிறார். மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயல் கண்டிக்கத்தக்கது.
விமான நிலையங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரில் பலர், தங்களின் பணி என்ன? என்பதை மறந்து விட்டு, இந்தி தேசிய மொழி, அதைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பயணிகளை அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் அரசியல் கட்சியினர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட அவர்கள் பலமுறை அத்துமீறியிருக்கின்றனர். இந்தி மொழி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என்ற அடிப்படைக் கூட தெரியாத அவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகளிடமும், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களிடமும் இதுகுறித்து அறிவுரை கூற என்ன தகுதி இருக்கிறது?
இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்ற பொய்யை காலம் காலமாக சில மத்திய அமைச்சர்களும், மத்திய அரசு அதிகாரிகளும் மீண்டும், மீண்டும் கூறி வருவதன் காரணமாகவே உண்மை தெரியாத மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களின் பணி வரம்பு என்ன? என்பதையும், இந்தி நாட்டின் அலுவல் மொழி மட்டும் தான் என்பதையும் அவர்களுக்கு அவர்களின் உயரதிகாரிகள் புரிய வைக்க வேண்டும்.
கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
டிடிவி தினகரன் பாய்ச்சல்
சென்னை வருவதற்காக கோவா விமான நிலையத்திற்குள் வந்த தமிழ்நாட்டு பெண் பயணியிடம், இந்தி தான் தேசிய மொழி, இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி மொழியை கற்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மிரட்டும் தொணியில் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பல்வேறு மொழிகளைப் போல இந்தியும் ஒரு அலுவல் மொழியே தவிர தேசிய மொழி கிடையாது என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில் விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்படும் வீரர்கள் இந்தி பேசச்சொல்லி பயணிகளை கட்டாயப்படுத்துவதாக வரும் செய்திகள் தொடர் கதையாகி வருகின்றன.
இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களையும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியிருக்கும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை அனைவரும் மீண்டும் உணர வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, கோவா மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்து மொழிகளுக்கும் உண்டான மரியாதை வழங்குவதை உறுதி செய்வதோடு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}