ஊட்டி: தென் மாநிலங்கள் உள்ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுடைய தொகுதி விழுக்காடு குறையாது என்கிற உறுதிமொழியை தமிழ்நாட்டு மண்ணில் நின்று பிரதமர் நரேந்திர மோடி வழங்கவேண்டும். அதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஊட்டியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது ஊட்டியில் புதிய அரசு மருத்துக் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர். பின்னர் முடிவுற்ற பல்வேறு பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
இதையடுத்து விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது முக்கியமான மூன்று பிரச்சினைகள் குறித்து பேசினார். முதல்வரின் பேச்சிலிருந்து..
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை அபாயம்
நாங்கள் உழைப்பது இந்தியா முழுமைக்குமான சமூகநீதி - மாநில சுயாட்சி – கூட்டாட்சி - மதநல்லிணக்கம் ஆகிய உயர்ந்த கருத்தியல்களை வென்றெடுப்பதற்காக தான். அதனால் தான் நம்முடைய கழகத்தின் எம்.பி.க்கள் எல்லோரும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எடுத்து வைக்கும் வாதங்கள் இந்தியாவையே காப்பாற்றுவதாக அமைந்திருக்கிறது. இதைப்பார்த்து இப்போது என்ன செய்கிறார்கள் - தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க சதி செய்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மிகப்பெரிய சதி நடக்க இருப்பதை முதன்முதலில் உணர்ந்து அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடுதான். வரவிருக்கின்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், மேற்கொள்ளப்போகின்ற தொகுதி மறுசீரமைப்பு, நம்மைப் போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப் போகிறது.
மக்கள் தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாக கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள் - நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையை பெரிய அளவில் இழக்க நேரிடும். இதைப்போல, பிற தென் மாநிலங்களும் தங்களுடைய தொகுதிகள் எண்ணிக்கையை இழப்பார்கள். உடனடியாக இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினேன். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இதுபோல பாதிக்கப்படுகின்ற மாநிலங்கள் எல்லாவற்றையும் இணைத்து சென்னையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது.
ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 22 கட்சிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தின் முடிவின்படி, அகில இந்தியா முழுமைக்குமான கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்திருக்கிறோம். அந்த குழுவின் சார்பில், பிரதமர் திரு. மோடி அவர்களை சந்திக்க தேதி கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறோம். பிரதமர் அவர்களும் விரைவில் நேரம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். இன்னும் சில மணி நேரத்தில், இராமேஸ்வரத்திற்கு பிரதமர் வர இருக்கிறார். நீலகிரி விழாவில் கலந்து கொள்வதால், இராமேஸ்வரம் விழாவில் என்னால் பங்கேற்க முடியாத நிலைமை. இந்த சூழ்நிலையை நான் அவருக்கு ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். அந்த நிகழ்ச்சியில், நம்முடைய அமைச்சர் பெருமக்கள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தின் மூலமாக, இந்த நிகழ்ச்சியின் மூலமாக, உங்கள் மூலமாக தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய பிரதமர் மோடி அவர்களை நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தைப் நீங்கள் போக்கவேண்டும். தென் மாநிலங்கள் உள்ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுடைய தொகுதி விழுக்காடு குறையாது என்கிற உறுதிமொழியை தமிழ்நாட்டு மண்ணில் நின்று நீங்கள் வழங்கவேண்டும். அதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும். இது ஏதோ வெறும் தொகுதியின் எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல - இது நம்முடைய அதிகாரம், உரிமைகள் மற்றும் எதிர்கால நலன்கள் பற்றிய கவலை!
புதுச்சேரியுடன் சேர்த்து 40 எம்.பி.கள் இருக்கும்போதே தமிழ்நாட்டின் குரலை நாடாளுமன்றத்தில் நசுக்குகிறார்கள். இந்த எண்ணிக்கையும் குறைந்தால், தமிழ்நாட்டையே ஒழித்துவிடுவார்கள்; நசுக்கிடுவார்கள். இந்தித் திணிப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்புத் திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிப்பு என்று நம்முடைய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நம்முடைய மாநிலத்துக்காக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பேசுகிறார்கள். அதனால்தான், நம்முடைய வலிமையை குறைப்பதற்கு பா.ஜ.க. துடியாக துடிக்கிறது.
வக்பு சட்டத்தை எதிர்த்து வழக்கு
தொலைக்காட்சியை ஆன் செய்தால், யூடியூப், சோஷியல் மீடியாவுக்குள்ள போனால், நம்முடைய உறுப்பினர்கள் பேச்சுதான் அனைத்து இடங்களிலும் ஒலிக்கிறது. வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எப்படி நள்ளிரவு 2 மணிக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு அனைத்து எதிர்க்கட்சிகளுடன் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று பார்த்திருப்பீர்கள். தொடக்கம் முதலே தமிழ்நாடு அரசும், தி.மு.க.வும் அதைக் கடுமையாக எதிர்த்தோம். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்த நம்முடைய திரு. ஆ.ராசா அவர்களும், திரு. அப்துல்லா போன்றவர்கள் எல்லாம் அந்தப் பரிந்துரைகளை படித்துப் பார்த்துவிட்டு எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், எதையும் காதில் வாங்காமல், வக்ஃபு திருத்த சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அப்போதும், அனைத்து எதிர்க்கட்சிகளும் விவாதத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக, அறிவுப்பூர்வமாக, விளக்கமாக தங்களுடைய நிலைப்பாட்டை முன் வைத்தார்கள்.
மக்களவையில் நம்முடைய அருமை சகோதரர் ஆ.ராசா அரைமணி நேரத்துக்கு மேலாக நெருப்பு பறக்க பேசியது தலைப்புச் செய்தி ஆனது. மாநிலங்களவையில் நம்முடைய திருச்சி சிவா அவர்கள் 20 நிமிடத்துக்கு மேல் பேசி உணர்ச்சிபூர்வமாக அங்கே முழங்கியிருக்கிறார். இது ஒருபுறம்! இன்னொரு பக்கம், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை - எவ்வளவு நேரம் பேசினார் தெரியுமா? ஒரே ஒரு நிமிடம்தான்! கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆகின்ற பேட்ஸ்மன் கூட இதை விட அதிக நேரம் களத்தில் இருப்பார். அப்படி அவர் பேசிய ஒரு நிமிடத்திலேயும் அ.தி.மு.க. இதை எதிர்க்கிறதா? ஆதரிக்கிறதா? என்று சொல்லவில்லை. ஆனால், நாங்கள் இந்த மசோதாவை நிறைவேற்றப்பட்ட அன்று காலையிலேயே சட்டமன்றத்துக்கு கருப்பு பட்டை அணிந்து கொண்டு வந்து எதிர்ப்பைப் பதிவு செய்தோம்! அதுமட்டுமல்ல, தி.மு.க. சார்பிலும், உச்சநீதிமன்றத்தில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறேன். நாளை நம்முடைய துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேரில் வழக்குத் தொடுக்கப்படும்.
நீட் விலக்கு சட்ட மசோதா நிராகரிப்பு
மற்றொரு செய்தியையும் பாத்திருப்பீர்கள். தமிழ்நாடு அனுப்பிய நீட் விலக்கு சட்ட மசோதாவை நிராகரித்திருக்கிறது ஒன்றிய பா.ஜக. அரசு. அதையும் நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் நான் அறிவித்துவிட்டு. அடுத்தகட்ட சட்ட, அரசியல் நடவடிக்கைகளைத் தீர்மானிக்க வருகின்ற 9-ஆம் தேதி தமிழகத்தில் இருக்கக்கூடிய, சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் என்ன செய்கிறார்? நேற்று முன்தினம் நீட்-ஆல் மாணவ, மாணவியர்கள் பலியானதற்கு திமுக மீது குற்றம் சொல்லி, அறிக்கை விடுகிறார். நான் கேட்கிறேன். தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது தமிழ்நாட்டில் நீட் இருந்ததா? இல்லை! தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த வரை நீட் இல்லை! இவ்வளவு ஏன்? அம்மையார் ஜெயலலிதா இருந்தவரை கூட நீட்டைத் தமிழ்நாட்டுக்குள்ளே அனுமதிக்கவில்லை. அவர் மறைவுக்கு பிறகுதான் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பா.ஜ.க.வுக்கு பாதம் தாங்கிகளாக இருந்து இதை அனுமதித்தார்கள். இதுதான் உண்மை.
நான் இப்போது கேட்பது – அப்போது ஆதரித்தீர்கள் – அனுபவித்தீர்கள் – அதையெல்லாம் விட்டுவிடுவோம். இப்போது நான் கேட்பது - கூட்டணியில் இருந்தபோதும், கூட்டணியாக தேர்தலைச் சந்தித்தபோதும் நீட் விலக்கு வேண்டும் என்று ஏன் நீங்கள் பா.ஜ.க-விடம் நிபந்தனை விதிக்கவில்லை? ஆனால், நம்முடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மூலமாக இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தெளிவாக சொன்னார் - நீட்டை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தேர்தலில் உறுதிமொழி அளித்தார். நாங்கள் சொல்ல வைத்தோம். இப்போது கேட்கிறார் பழனிசாமி, நீட் ரகசியத்தை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாரே! இந்தியா கூட்டணி ஆட்சி மட்டும் ஒன்றியத்தில் அமைந்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு நிறைவேறி இருக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, “பா.ஜ.க. கூட கூட்டணி இருக்கிறது - இல்லை” என்று மாற்றி மாற்றி பேசுகின்ற உங்களுக்கு நான் இந்த மேடையில் இருந்து சவால் விடுறேன். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் மேல் உங்களுக்கு துளியாவது அக்கறை இருந்தால், பா.ஜ.க. கூட கூட்டணிக்கு போவதற்கு முன்னால், “நீட் விலக்கு தந்தால்தான் கூட்டணி!” என்று வெளிப்படையாக அறிவிக்க தயாரா? உருப்படியாக ஒன்றும் செய்யாமல், வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு இருப்பதாலேதான், மக்களால் மீண்டும் மீண்டும் நீங்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறீர்கள். எங்களைப் பொறுத்தவரையில், மக்களான உங்கள் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கையால் சொல்கிறேன் - சங்க காலத்து உரம் பெற்று, குடியாட்சி காலத்தில் கோலோச்சும் தமிழ்நாட்டை எத்தகைய அரசியல் சூழ்ச்சிகளும் வீழ்த்திட முடியாது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வீழ்த்தவும் விட மாட்டான்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
{{comments.comment}}