சென்னை: தான் அசைவம் சாப்பிடுவோர் அதிகம் வசிக்கும் பகுதியில் கடந்த 10 வருடமாக வசித்து வருவதாகவும், அது தனக்கு மிகவும் அசவகரியமாக இருப்பதாகவும், தன்னை சைவம் சாப்பிடுவோர் வசிக்கும் பகுதிக்கு இடம் மாற்ற உதவுமாறு ஒரு மூதாட்டி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்திருந்தார். அவரது கோரிக்கையை நிறைவேற்ற தற்போது போலீஸார் களம் இறங்கியுள்ளனர்.
சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அனுசுயா என்ற 85 வயது மூதாட்டி சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், தனது மகன் 10 வருடங்களுக்கு முன்பு தன்னை விட்டு பிரிந்து விட்டார். நான் இப்போது திருவல்லிக்கேணியில் தனியாக வசித்து வருகிறேன். மிகவும் சிரமமாக இருக்கிறது. மேலும் நான் சைவம், ஆனால் நான் வசிக்கும் பகுதியோ அசைவம் சாப்பிடுவோர் அதிகம் வசிக்கும் பகுதி. இதனால் எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.
எனது மகனைக் கண்டுபிடித்துத் தர வேண்டும். அதேபோல எனக்கு சைவம் சாப்பிடுவோர் வசிக்கும் பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு பார்த்துத் தர வேண்டும். எனக்கு ஆதரவற்றோர் முகாமில் வசிக்க விருப்பமில்லை. நானே சமைத்து சாப்பிடுவதையே விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அவரை ஆட்டோவில் பத்திரமாக வழியனுப்பி வைக்க உத்தரவிட்ட போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இதுதொடர்பாக விசாரித்து மூதாட்டிக்கு உதவிகளைச் செய்யுமாறு துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு உத்தரவிட்டார். அதன்படி பாட்டியின் வீட்டுக்கே நேரில் சென்ற துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், அவரது பிரச்சினைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து முதலில் அவரது மகனைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரது விருப்பப்படி ஒரு வாடகை வீடு பார்த்துத் தரப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து மூதாட்டி துணை ஆணையருக்கும்,நடவடிக்கை எடுக்கஉத்தரவிட்ட ஆணையருக்கும் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொண்டார்.
மூதாட்டியின் மகன் தற்போது மும்பையில் இருப்பதாக தெரிய வந்துள்ளதாம். அவருக்கு 60 வயதுக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. அவரைத் தொடர்பு கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
{{comments.comment}}