டெல்லி : இஸ்ரோவின் மற்றொரு வரலாற்று சாதனையாக சந்திரயான் 3 விண்கலம் இன்று தனது பயணத்தை தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து எல்விம் 3 எம் 4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு, புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக விடப்பட்டது.
சந்திரனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் இந்த விண்கலம் இன்று பிற்பகல் 02.35 மணிக்கு தனது பயணத்தை தொடங்கியது. விண்கலத்தை ஏவும் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள். சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட குழுவினர் பெருமளவில் திரண்டிருந்தனர்.
சந்திரயான் 3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் ஒவ்வொரு கட்டமும் வெற்றிகரமாக நடந்தேறியது. கடைசியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த, புவி வட்டப் பாதையில் விண்கலம் வெற்றிகரமாக விடப்பட்டது. இதையடுத்து சந்திரயான் 3 விண்கலம் ஏவும் பணி வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இதை அறிவித்தபோது அவருடன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேலும் உடன் இருந்தார். அவரால் பேசக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தார். பேசவே முடியாமல் சிரித்த அவரது முகத்தில் தெறித்த உற்சாகம் நாடு முழுவதும் மகிழ்ச்சியில் துள்ள வைத்துள்ளது.
சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் நான்காவது விண்கலம் இதுவாகும். சந்திரயான் 3 ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை 05.47 மணிக்கு சந்திரனில் தரையிறங்க உள்ளது. அங்கு 40 நாட்கள் தனது பயணத்தை சந்திரயான் 3 விண்கலம் மேற்கொள்ளும்.
இதற்கு முன் 2019 ல் சந்திரயான் 2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் அது செயல் இழந்ததால் இந்த திட்டம் தோல்வி அடைந்தது. நாட்டு மக்களை பெரும் ஏமாற்றத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியது இது. அப்போது இஸ்ரோவின் தலைவராக இருந்த சிவன் பெரும் வேதனையில் கண்ணீர் விட்டு அழுததை நாடே சோகத்துடன் பார்த்தது. பிரதமர் நரேந்திர மோடி அவரைக் கட்டி அணைத்து ஆறுதல் கூறியதை யாராலும் மறக்க முடியாது.
இதைத் தொடர்ந்து சந்திரயான் 2 திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு சந்திரயான் 3 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி அடைந்தால் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.
சந்திரயான் 3 திட்டம் வெற்றி அடைய பிரதமர் மோடி, பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியா வழியாக தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டதை நாடே டிவி மூலம் நேரடியாக கண்டு மகிழ்ந்தது. சமூக வலைதளங்களிலும் இது மிகப் பெரிய அளவில் மக்களால் கொண்டாடப்பட்டது.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை இந்தியர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமும் கூட வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}