துபாய்: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான டிக்கெட்கள் முழுமையாக விற்றுத் தீர்ந்து விட்டன. போட்டி நடைபெறும் பிட்ச்சும் கூட தேர்வு செய்யப்பட்டு விட்டது. அந்த பிட்ச்தான் தற்போது சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான கிளைமேக்ஸ் நெருங்கி விட்டது. நாளை இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்குப் பயன்படுத்தப்படும் பிட்ச்சும் கூட தற்போது தேர்வாகி விட்டது. அந்த பிட்ச்தான் தற்போது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது பாகிஸ்தானை எந்த பிட்ச்சில் விளையாடி இந்தியா அசத்தலான வெற்றியைத் தட்டிச் சென்றதோ அதே பிட்ச்சில்தான் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த பிட்ச் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிட்ச்சில்தான் கடந்த பிப்ரவரி 23ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தது. இறுதிப் போட்டியிலும் இதையே பயன்படுத்த முடிவாகியுள்ளது. துபாயில் தற்போது வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. எனவே ஸ்பின் பவுலிங்குக்கு இது சாதகமாக கருதப்படுகிறது. அப்படி நடந்தால் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தியின் கை நாளை ஓங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
நாளைய போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. 2000மாவது சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இறுதி ஆட்டத்திலும் இந்தியா - நியூசிலாந்துதான் மோதின. அப்போது நியூசிலாந்து வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளன. இந்த முறை இந்தியா, நியூசிலாந்தை வீழ்த்தி பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
2000மாவது ஆண்டு இறுதிப் போட்டி மட்டுமல்லாமல், 2019 ஐசிசி உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி, 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் கூட நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது. இதுதான் இந்திய ரசிகர்களுக்கு பெரும் வலியாக உள்ளது. எல்லாவற்றுக்கும் சேர்த்து துபாயில் வைத்து சாத்து சாத்து என நியூசிலாந்தை இந்தியா சாத்தியெடுக்க வேண்டும் என்று வெறியாக உள்ளனர் இந்திய ரசிகர்கள்.
இந்தப் போட்டித் தொடர் முழுவதும் இந்தியா தனது போட்டிகளை துபாயிலேயேதான் ஆடியுள்ளது. பாகிஸ்தானுக்குப் போகவில்லை. மற்ற அணிகள்தான் துபாய்க்கும் பாகிஸ்தானுக்குமாக அலைந்து திரிந்துள்ளன. இது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு மட்டும் இதுபோன்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று மைக்கேல் ஆதர்டன், நசர் ஹுசேன் போன்ற முன்னாள் வீரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
{{comments.comment}}