அரசியலுக்கு அஞ்சி தண்ணீரை  நிறுத்திய கர்நாடகம்: டாக்டர் ராமதாஸ் சாடல்

Sep 09, 2023,04:22 PM IST
சென்னை:  கர்நாடக மாநில அரசியல் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்தியுள்ளது கர்நாடக அரசு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு சமீபத்தில் முடிவு செய்தது. 

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் தொடர்ந்து பலமுறை உத்தரவிட்டும் கர்நாடக அரசு அதை ஏற்க மறுத்து வருகிறது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது திறந்து விடப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு, பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பு, அழுத்தம் காரணமாக நிறுத்தி விட்டது. இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு  காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நேற்றுடன் நிறுத்தி விட்டது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் 12-ஆம் நாள் வரை வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்  என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆணையிட்டிருக்கிறது. ஆனால், இவை எதையுமே மதிக்காமல் தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற அடுத்த 20 நாட்களுக்கு  குறைந்தது ஒரு டி.எம்.சி வீதம் 20 டி.எம்.சியாவது தண்ணீர் தேவை. கர்நாடக அணைகளில் 64 டி.எம்.சி தண்ணீர் இருக்கும் நிலையில், அம்மாநில அரசு நினைத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கி குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால், உள்ளூர் அரசியலுக்கு அஞ்சியும்,  தூண்டிவிடப்பட்டு நடக்கும் போராட்டத்திற்கு பயந்தும், சிறிதும் மனித நேயமின்றி தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வராவிட்டால் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியாது. இதை உணர்ந்து கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதுவுமே செய்யாமல் அமைதி காப்பதால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் விளையாது.

காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதுவரை காத்திருந்தால்  குறுவை பருவ நெற்பயிர்கள் முற்றிலுமாக கருகி விடும். எனவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி, இந்த வழக்கில் 21-ஆம் தேதி விசாரணை தொடங்கும் வரை, இடைக்கால ஏற்பாடாக வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்