சென்னை: சாலையில் வீலிங் செய்து விபத்துக்குள்ளாகி, சிறைக்குப் போய் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ள பைக்கர் டிடிஎப் வாசன், சர்வதேச லைசென்ஸ் வைத்து பைக் ஓட்டுவேன் என்று கூறியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஆனால் அப்படி அவரால் பைக் ஓட்ட முடியாது என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
யூடியூபரான டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் சாகசம் செய்வது வழக்கம். அதி வேகமாக வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலைகளில் வீலிங் செய்வது, வேகமாக பைக் ஓட்டுவது, சாகசம் செய்வது என்று தொடர்ந்து சாலை விதிகளை மதிக்காமலேயே செயல்பட்டு வந்தார். கடந்த செப்டம்பர் 17ம் தேதி பெங்களூரு சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தார். காயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்தில் டிடிஎஃப் வாசனின் கை எலும்பு முறிந்து, பலத்த காயம் ஏற்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி, பரபரப்பானது. காவல் துறையினர் வாசனை கைது செய்தனர். அவர் மீது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் 3 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். வாசனின் மனு மூன்று முறையும் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுபக்கம், வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து (06.10.2023 முதல் 05.10.2033 வரை) காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் விடுதலையாகி வெளியே வந்தார். சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விபத்தில் கை போனதை விட லைசென்ஸ் போனதுதான் வருத்தமாக இருந்தது. அதை நினைத்து மனம் வருந்தினேன். லைசென்ஸ் ரத்து என்பதை கேள்விப்பட்டு கண் கலங்கிவிட்டேன். அதே நேரத்தில் என்னிடம் சர்வதேச லைசென்ஸ் இருக்கிறது. அதனால் தொடர்ந்து பைக் ஓடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
வாசன் இப்படிக் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச லைசென்ஸை வைத்துக் கொண்டு இந்தியாவில் வாகனம் ஓட்ட முடியாது என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கியுள்ளது.
{{comments.comment}}