சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தினர் எதிர் வரும் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கலந்து கொண்டனர்.
விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சமீபத்தில்தான் வக்கீல்கள் அணி, தகவல் தொழில்நுட்ப அணி என பலருடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மகளிர் அணி ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். சட்டசபைத் தொகுதி வாரியாக மகளிர் அணி நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடைபெற்றது. மகளிர் அணியை சிறப்பாக கட்டமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
"தளபதி"ன்னு சொல்லணும்!
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது மகளிர் அணியினருக்கு பல்வேறு உத்தரவுகள், அறிவுரைகளை புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒரு பெண் விஜய் என்று பெயரை சொன்னபோது பெயரைச் சொல்லக் கூடாது. தளபதி என்று சொல்ல வேண்டும் என்று அவரை திருத்தினார் புஸ்ஸி ஆனந்த்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் நிர்வாகிகள் மிகவும் உற்சாகத்துடன் கூட்டம் முடிந்து வெளியே வந்தனர். சமீப காலமாக விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியலை நோக்கியுள்ளதாகவே இருக்கிறது. விரைவில் அவர் தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.
தொகுதி வாரியாக கடந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகின்றார். விஜய்யின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்போது என்று தெரியவில்லை. அதேசமயம், அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை விஜய் மட்டும்தான் வெளியிடுவார் என்று புஸ்ஸி ஆனந்த் இன்றைய கூட்டத்தில் தெரிவித்தாராம்.
{{comments.comment}}