சென்னை: அடாவடி செய்வதில் யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று தொடர்ந்து காட்டி வருகிறது பாஜக. அதேபோல, யாருக்கும் அடங்காமல் தொடர்ந்து அத்துமீறுவது என்று பிடிவாதமாக இருந்து வருகிறது திமுக.. அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.
தமிழக அரசியலில் இப்போது திமுகவும், பாஜகவும்தான் தொடர்ந்து சலசலப்பிலும், சர்ச்சையிலும் சிக்கி வருகின்றன. இது எதேச்சையாக நடக்கிறதா அல்லது திட்டமிட்டு இரு கட்சிகளும் இப்படிச் செயல்படுகின்றனவா என்ற சந்தேகம் மக்களுக்கு வரத் தொடங்கி விட்டது.
பாஜகவினர் பலர் சமூக வலைதளங்களில் பேசுவதும், எழுதுவதும், விமர்சிப்பதும் சர்ச்சையாகி வருகின்றன. உச்சகட்டமாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையே கூட செய்தியாளர்களிடம் பேசிய விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்கட்சியின் பல்வேறு பிரமுகர்கள் பயன்படுத்தும் வார்தைதகளும் கூட சர்ச்சையைக் கிளப்பின.
நடிகை காயத்ரி விவகாரம் தொடர்பாக அந்தக் கட்சியின் பிரமுகரான ராணிப்பேட்டை பாபு என்பவர் போட்ட டிவீட் போஸ்ட் மிகப் பெரிய அறுவறுப்பை ஏற்படுத்த விட்டது. நடிகை காயத்ரியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிகவும் கேவலமான முறையில் அவர் விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவிலிருந்தே கடும் அதிருப்தி கிளம்பியது. அண்ணாமலை இதைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லதல்ல என்ற கண்டனமும் கிளம்பியது. இதையடுத்து அந்த பாபுவை அண்ணாமலை சஸ்பென்ட் செய்துள்ளார். பாபு மீது காயத்ரி ரகுராம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் பக்கம் திரும்பினால் திமுக.. திமுகவா இது என்று அதிர்ச்சி அடையும் வகையில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது அக்கட்சி. திமுகவின் மூத்த தலைவர்களான கே.என். நேருவின் பேச்சும் செயலும் வாந்தி எடுக்க வைப்பதாக உள்ளது. இத்தனை மோசமாகவா ஒருவர் பேசுவார் என்று முகம் சுளிக்கும் வகையில் அவரது சமீபத்திய பேச்சுக்கள் உள்ளன. கெட்ட வார்த்தையை சர்வ சாதாரணமாக பொது வெளியில் அவர் உபயோகப்படுத்துகிறார். தொண்டர்களை அடிக்கிறார்.
இன்னொரு பக்கம் கோவில்களை இடித்ததை சாதனை போல கூறிப் பேசுகிறார் மூத்த தலைவரான டி.ஆர். பாலு. அவரது பேச்சு முழுமையாக கேட்கும்போது அவர் கூறியது வில்லங்கமாக இல்லை என்றாலும் கூட குறிப்பிட்ட தரப்பினரை இது புண்படுத்துமே என்ற யோசனையில்லாமல் அவர் பேசியிருப்பதை தவிர்த்திருக்கலாம். இளையவர்களுக்கு அறிவுரை கூறும் இடத்தில் இருப்பவரே இப்படி பேசியிருப்பது சரியான செயல் அல்ல.
அடுத்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர். இவரது செயல்பாடுகளும் சமீபத்தில் சர்ச்சையாகின. கல்லை எடுத்து தொண்டரை நோக்கி எறிவது போல இவர் நடந்து கொண்டது பலரது கண்டனங்களையும் வாரிக் குவித்தது. இப்படி மூத்த தலைவர்கள் மாறி மாறி சர்ச்சையில் சிக்கிய நிலையில், திமுகவின் சேலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.மாணிக்கம் நடந்து கொண்ட முறை மிகப் பெரிய அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.
தலித் இளைஞர் ஒருவரை ஊர் பொதுமக்கள் முன்னிலையில் மிக மோசமாக, கேவலமாக, முகம் சுளிக்க வைக்கும் வகையில் அசிங்கமாக, கெட்ட வார்த்தைகளில் திட்டியுள்ளார் இந்த மாணிக்கம். இந்த நபர் பேசி பல நாட்களாகியும் திமுக இவர் மீது நடவடிக்��ை எடுக்கவில்லை. திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இதுதொடர்பான வீடியோ வெளியே வந்த பிறகுதான் அந்த நபர் மீது வழக்குப் போடப்பட்டு கைது செய்யப்படுகிறார். கட்சியை விட்டும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆக, திமுகவும் சரி, பாஜகவும் சரி மாறி மாறி பல்வேறு அத்துமீறல்களிலும், அடாவடியிலும் ஈடுபட்டு வருவது மக்களுக்கு அயர்ச்சியைக் கொடுப்பதாக உள்ளது. மக்களுக்கான வேலைகள் எத்தனையோ இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட சில்லறைத்தனமான காரியங்களில் முக்கியக் கட்சிகளின் பிரமுகர்கள் ஈடுபடுவது அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும், கொள்கைகளுக்கும் எந்த வகையிலும் மதிப்பு அளிக்காது. தலைவர்களுக்கும் கெட்ட பெயரைத்தான் கொடுக்கும் என்பதை கட்சியினர் புரிந்து கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ள முன்வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.
{{comments.comment}}