Annamalai: சவுக்கடி, செருப்பு புறக்கணிப்பு, கடும் கோபம்.. வரலாறு காணாத ஆவேசம் காட்டிய அண்ணாமலை!

Dec 26, 2024,07:24 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது மாநில பாஜக தலைவர் அண்ணாமலை காட்டிய கடும் ஆவேசம் பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரை  காவலில் வைக்க  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


வழக்கு சரியான திசையில் போய்க் கொண்டிருப்பதாக அனைவரும் நினைத்தபோது வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் இடம் பெற்றிருந்த வாசகங்களும் பரபரப்பை ஏற்படுத்தின. பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை வெளியிடக் கூடாது. பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் முதல் தகவல் அறிக்கை வெளியாகியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.


இந்த நிலையில், மாணவி பாலியல் வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் தனித் தனியாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. டாக்டர் தமிழிசை உள்ளிட்ட பாஜகவினரும், முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினரும் போராட்டம் நடத்தி கைதானார்கள்.


இந்நிலையில்தான்  கோயம்பத்தூர் விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இதுவரை காணாத அளவுக்கு கடும் கோபத்துடன் அவர் பேசினார். தூ தூ என்று இடை இடையே கடும் கோபத்துடன் காரித் துப்பவும் செய்தார். இப்படி இதுவரை எந்தப் பேட்டியிலும் அவர் கடும் கோபம் காட்டியதில்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது பிரஸ்மீட் இருந்தது. 




அண்ணாமலை தனது பேட்டியின்போது கூறுகையில், தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சிக்கு மரியாதை இல்லை.   திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் செருப்பு அணிய மாட்டேன்‌. இதற்கு முடிவு தெரிந்தாக வேண்டும். ஒவ்வொரு பாஜகவினர் வீட்டிலும் இனி போராட்டம் நடைபெறும். ஒரே இடத்தில் போராட்டம் நடத்துவதால் தான் எங்களை காவல் துறையினர் ஏவி விட்டு கைது செய்கிறார்கள். 


திமுக அரசை கண்டித்து  சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். கோவையில் உள்ள எனது இல்லத்தின் அருகே நாளை காலை 10 மணிக்கு எனக்கு நானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன். மற்ற பாஜக தொண்டர்கள் இதை செய்ய வேண்டாம். பாதிக்கப்பட்ட சகோதரிகளுடன் நாம் துணையாக இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டும்.


தமிழ்நாட்டில் எத்தனை பாலியல் வன்கொடுமைகள் வெட்கமாக இல்லையா.. அண்ணா பல்கலை கழக வழக்கத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்று சொல்வது வெட்கமாக இல்லையா.. சிசிடிவி கேமராவுக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என கூறியது வெட்கமாக இல்லையா..


பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் எஃப் ஐ.ஆர் கசிந்தது எப்படி அதனைப் படித்தால் ரத்தம் கொதிக்கிறது. குற்றம் நடந்த பெண்ணுக்கு, ஆனால் முதல் தகவல் அறிக்கையில் தவறு செய்தது ஞானசேகரனா..? மாணவியா..?  என கேட்கும் அளவுக்கு உள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளனர். மாணவியை அவமானப்படுத்தி விட்டனர். ஒரு குடும்பத்தையே நாசம் செய்து விட்டனர். 

முதல் தகவல் அறிக்கை எப்படி கசிந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் திமுகவில் இருந்ததால்தான் காவல்துறையினர் நடவடிக்கையும் மெத்தனமாக இருந்துள்ளது எனக் கூறியுள்ளார் அண்ணாமலை.


இதைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் அவர் போட்ட பதிவில்,  சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர்  டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்,  மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.


குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் முழு பொறுப்பு. 


திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


தலைவர்கள் கருத்து 


அண்ணாமலையின் கடும் ஆவேசம், சவுக்கடி போராட்டம் குறித்து திமுக கூட்டணி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், பிரதான எதிர்க்கட்சி யார் என்பது குறித்து அதிமுக, பாஜக இடையே மோதல் இருந்து வருகிறது. அவரவர் இருப்பைக் காட்ட இப்படிச் செய்கிறார்கள். தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் போராட்டம் தேவையற்றது. அது நகைச்சுவையாக மாறி விடக் கூடாது. பாலியல் விவகாரத்தில் அரசியல் செய்கிறார் அண்ணாமலை என்று கூறியுள்ளார்.


அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்காக தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ள சவுக்கால் அடிக்கமுடிவு செய்து விட்டாரா அண்ணாமலை. திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதா என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர்  திருநாவுக்கரசர் கூறுகையில், போராட்டக் களத்தில் இதுவரை இப்படி ஒரு போராட்ட யுக்தியை யாரும் பார்க்கவில்லை. இது என்ன மாதிரியான போராட்டம் என்று கேட்டுள்ளார்.


எப்ஐஆரை வெளியிட்டோர் மீது நடவடிக்கை தேவை


இதற்கிடையே, முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுகுறித்துக் கூறுகையில், முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


இதே கோரிக்கையை பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் வலியுறுத்தியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலைத்திட்டம்.. தகவல் அறியும் உரிமை சட்டம் .. வரலாறு படைத்த நாயகன் மன்மோகன் சிங்!

news

நல்ல தலைவர், பொருளாதார மேதையை நாடு இழந்து விட்டது... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

news

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நண்பராக விளங்கியவர் மன்மோகன் சிங் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

news

Manmohan singh.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. இந்தியாவின் சிறந்த பொருளாதார மேதை!

news

எப்ஐஆர் நகல் வெளியானது சட்டப்படி குற்றம்.. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.. போலீஸ் கமிஷனர் அருண்

news

Annamalai.. சவுக்கால் அடிப்பேன்.. திமுக ஆட்சி போகும் வரை செருப்பு போட மாட்டேன்.. அண்ணாமலை ஆவேசம்!

news

Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி

news

Annamalai: சவுக்கடி, செருப்பு புறக்கணிப்பு, கடும் கோபம்.. வரலாறு காணாத ஆவேசம் காட்டிய அண்ணாமலை!

news

Chandrapriyanga.. மகன்களுக்கு சமையல் கற்று தரும் சந்திரபிரியங்கா.. செம்ம செம.. சூப்பர் அம்மாதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்