சென்னை: பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் டிடிஎப் வாசனுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
பொதுமக்களுக்கு பயமுறுத்தல் ஏற்படும் வகையிலும், அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் வாசன். யூடியூபரான இவர் நெடுஞ்சாலைகளில் வேகமாக பைக் ஓட்டுவது, வீலிங் செய்வது என்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவர் மீது ஏன் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று பலரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் பகுதியில் போக்குவரத்து நிறைந்த சாலையில் வீலிங் செய்து அது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார் வாசன். பைக் தாறுமாறாக மோதி தூக்கி எறியப்பட்ட வாசனை, அந்தப் பகுதியில் வாகனத்தில் சென்றோர் இறங்கி ஓடி வந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யாரும் இல்லாத சாலையில் இதுபோல சேட்டை செய்து விபத்தில் சிக்கியிருந்தால் காப்பாற்றக் கூட ஆள் இல்லாத நிலைக்கு வாசன் போயிருக்கக் கூடும். கை எலும்பு முறிந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் வாசன். தற்போது வாசன் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவருக்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன. இனியாவது காவல்துறை வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டிவீட்டில், வாசன் என்ற ஒரு நபர் நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் மிக விரைவாக தன் இரு சக்கர வாகனத்தை செலுத்தியதோடு பல்வேறு சாகசங்களை செய்வதாக எண்ணிக்கொண்டு பல்வேறு வாகனங்களுக்கு இடையூறு செய்ததோடு, பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் காயமடைந்துள்ளார் என்று 'ஐயோ பாவம்' என்று நின்று விடாமல், பொது மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் வகையில் வாகனத்தை செலுத்தியதற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு காவல்துறை, அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இவரைப் போலவே பலரும் கூட வாசனைக் கடுமையாக கண்டித்துள்ளனர். சாகசம் செய்வதாக இருந்தால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ரேஸ் பீல்டில் போய் செய்யலாம்.. அதை விட்டு விட்டு இப்படி தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் அநியாயம் செய்யும் வாசனை இனியும் கட்டுப்படுத்தாவிட்டால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து அதிகரித்து விடும், அவருக்குமே கூட ஆபத்துதான் என்று பலரும் கூறி வருகின்றனர்
{{comments.comment}}