லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது பயிர்களை குரங்குகளிடமிருந்து காப்பதற்கு நூதனமான உத்தி ஒன்றைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
அது என்ன தெரியுமா...?
கரடி போல வேடமிட்டு வயல்களில் பாதுகாப்புப் பணியில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த வித்தியாசமான முயற்சிக்கு கையோடு நல்ல பலன் கிடைத்துள்ளதாம். குரங்குகள் அட்டகாசம் தற்போது குறைந்துள்ளதாம்.
லக்கிம்பூர் கேரி பகுதி விவசாயிகளுக்கு சமீப காலமாக குரங்குத் தொல்லையால் பெரும் பஞ்சாயத்தாக இருந்து வருகிறதாம். வயல்களுக்குள்ளும், தோட்டங்களுக்கும் புகும் குரங்குகள் அங்குள்ள பயிர்களை அழித்து விடுகின்றன. சேதமாக்கி விடுகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
என்னென்னவோ செய்து பார்த்தும் குரங்குகளை விரட்ட முடியாமல் தவித்தனர் விவசாயிகள். இந்த நிலையில்தான் ஜஹன் நகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஒரு ஐடியா தோன்றியது. அதை உடனடியாக செயல்படுத்த களம் இறங்கினர். கரடி போல வேடம் இட்டு வயல்களில் காவல் காத்தால் குரங்குகள் பயந்து ஓடி விடும் என்பதே அந்த ஐடியா. இதையடுத்து விவசாயிகளிடம் பணம் வசூலித்து கரடி உடை வாங்கப்பட்டது. இதர்கு ரூ. 4000 செலவானதாம்.
இப்போது இந்த கரடி உடையுடன் விவசாயிகள் மாறி மாறி காவல் காத்து வருகின்றனர். இந்த கரடி வேட காவலுக்கு சற்று பலன் கிடைத்துள்ளதாம். ஓரளவுக்கு குரங்குகளைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாம். இருப்பினும் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் அப்பகுதியில் இருப்பதால் அதை விரட்டியடிக்க வனத்துறையினர் உதவ வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகளும் ஏதாவது செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.
கரடி வேடத்தில் காவல் காக்க ஆட்களை காசு கொடுத்து அமர்த்தியுள்ளனர் விவசாயிகள். இந்தக் காவல் பணிக்கு ஒரு நாளைக்கு ரூ. 250 கொடுக்கப்படுகிறதாம். இதையும் கூட விவசாயிகளே தங்களுக்குள் ஷேர் செய்து கொள்கின்றனராம். ஆனால் வெயில் நேரத்தில் இப்படி கரடி உடையுடன் நீண்ட நேரம் இருப்பது பெரும் சிரமமாக இருப்பதாக வேடம் போடுபவர்கள் புலம்புகிறார்களாம்!
குரங்கை விரட்டப் போய் கரடியைப் பிடித்து.. இப்போது கரடி உடையால் உடம்புக்கு பிரச்சினை வருவதால்.. விவசாயிகள் அடுத்து என்ன பண்ணலாம் என்ற யோசனையில் உள்ளனராம்!!
{{comments.comment}}