அவனோட மனசு (சிறுகதை )

Mar 10, 2025,02:23 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி


அடப்பாவி பயலே.. இவன் போகும் போது,  என்னத்த அள்ளிக்கிட்டு போகப் போறான்.. எங்க இருந்து வந்தான்  இவன்…? ஒரு பள்ளி கூட பசங்க போறதுக்கு ஒரு ஒத்தையடி பாத … அதைவிட மாட்டேன்னு சொல்லிட்டு …  இப்படி இரும்பு கேட் போடுகிறானே….!!!


சிவக்குமாராம்… சிவக்குமார்… சரியான சவக்குமார்… எல்லாரோட வயித்தறிச்சல  கொட்டிக்கிட்டா…..சவக்குழிக்குத்தான் போவான். புதுசா இந்த  வீட்டை  வாங்கிட்டானாம்.. என் வீட்டு சந்தில் யாரும் போகக்கூடாது என  அடம் பிடிக்கிறான்.  ஒரு அடி சந்து… ஒரு பத்து நிமிஷம்  பசங்க போக போறாங்க.. இதுக்கு  என்ன பாடு படுத்துறான்… !!!  கொட்டி தீர்த்தாள் திலகா.


அரை நிமிடத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகள்….இப்ப  ஐந்து கிலோமீட்டர் சுற்றி   பள்ளிக்கு போக வேண்டியிருக்கு .. நம்ம  பழைய சீனிவாசன். எப்படி பட்ட. மனுஷன். நம்ம குழந்தைங்க… அவர் வீட்டு சந்து வழியா போறத நின்னு….  பார்த்து ரசிப்பார்.  பசங்க ஸ்கூல் போற நேரத்துல ….அவரு வீட்டுக்கு வெளியில வந்து, எல்லாருக்கும் டாட்டா சொல்லுவார். நம்ம குழந்தைகளை பார்க்கிறபோது… அவர் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.  இப்ப இவன்  சுத்த கடுகடுத்தானாவுல  இருக்கான்.  இது  ஆனந்தியின் ஆதங்கம்.


அந்தத் தெருவில் உள்ள அத்தனை பேரும், சிவக்குமாரிடம் சென்று, பேசி பார்த்தனர். அவன் சரி சொல்வதாய் இல்லை. அந்த ஊர் கவுன்சிலரும் சென்று பேசிப் பார்த்தார். அப்போதும் அவன் கேட்கவில்லை.  அவன் மனசு அப்படி. இது என்  வீட்டு சந்து.  இது வழியா ஏன் போகனும் என சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். 




அவன்  வீட்டு சந்து தான்… .யாரு இல்லையின்னா . குழந்தைங்க அது வழியாக,  நடந்து போனா … தரை தேஞ்சா  போயிரும்.   பொறுமினாள் பொன்னி.


குழந்தைகள் செல்வது அவனுக்கு தொந்தரவாக இருந்தாலும் , ஒரு பத்து நிமிடம் தானே. காலையில் ஒரு பத்து நிமிடம் .மாலையில் ஒரு பத்து நிமிடம்.‌. திறந்து வைத்தாலே போதும்.  கல் மனசு காரன். அங்கலாய்த்தாள்  ஆனந்தி..


அந்த  ஒரு அடி சந்திற்கான  பணத்தினை… எட்டு குடும்பங்களும் சேர்ந்து பங்கிட்டு கொடுப்பதாய் சொல்லியும் அவன் மறுத்து விட்டான்… ஒரு நாள் அனைவரும் சேர்ந்து அந்த கதவினை திறக்க முற்பட்டனர்.  சிவக்குமார் 100 க்கு  போன் செய்துவிட்டான்.. போலீஸ் வந்து விசாரித்தனர். 


என்னப்பா… பள்ளி குழந்தைகள் தானே. ஒரு பத்து நிமிஷம் திறந்து விடுவதால் உனக்கு புண்ணியம் தானே. சமாதானமா போப்பா….!!! போலீஸ் வந்து சமாதானம் பேசியும், அவன் கேட்டை திறப்பதாய் இல்லை. 


அந்த தெருவில் உள்ள 8 வீடுகளின் பள்ளிக் குழந்தைகள்  மட்டுமே அந்த ஒரு அடி சந்தில்… பக்கத்து பள்ளிக்கு செல்வார்கள் . மற்ற யாருக்கும் அந்தப் பக்கம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை.  ஒரு சைக்கிள் கூட நுழைய முடியாது.. 


திடீரென்று அந்த எட்டு பேருக்கும் கோர்ட்டில் இருந்து சம்மன் வந்தது.  அதிர்ந்தனர் அனைவரும்.. சிவக்குமார் தான் கேஸ் போட்டுள்ளான். தனது கேட்டை உடைக்க வந்ததாகவும் , தன்னை அடிக்க வந்ததாகவும், கேஸ் போட்டிருக்கிறான் .  நஷ்ட ஈடு  ரெண்டு லட்சம் கேட்டும்… கேஸ் போட்டிருக்கிறான்.


அடப்பாவிபயலே… இப்படி கேஸ் போட்டு இருக்கானே….!!! சம்மன்  வந்தா கோர்ட்டுக்கு போகணுமா…?. ஆமாம்மா கண்டிப்பா போகணும் இல்லாட்டினா… அவனுக்கு சாதகமா ரெண்டு லட்சம் கொடுக்க தீர்ப்பாயிடும்… கோர்ட்டுக்கு  போனால் தீர்ப்பு வர ரொம்ப நாள் ஆகுமே…!!. ஐயோ இது எதுக்கு …என் புள்ளையை ஆட்டோவுல அனுப்பிக்கிறேன்…. எட்டு பேர் மேலயும் கேஸ் போட்டு இருக்கான்.   போய் தான் ஆகணும். என பலவாறாக  அனைவரும் பேசிக்கொண்டனர்.


ரெண்டு வருஷமா கேஸ்  நடந்தது.  எட்டு வீட்டு நபர்களுக்கும் …கேஸ்க்காக வக்கீல் பீஸ்…அது இது என …ஒரு லட்ச ரூபாய் செலவானது.




இரண்டாம் ஆண்டு இறுதியில் தீர்ப்பு வந்தது. தீர்ப்பில் ஒவ்வொரு குடும்பமும் ஐந்து ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கும்,  குழந்தைகள் நலன் கருதி, கதவினை  காலையில் அரை மணி நேரமும் மாலையில் அரை மணிநேரமும் திறந்து வைப்பதற்கும் உத்தரவு இடப்பட்டது. அவன் கேட்ட நஷ்ட  ஈடு தள்ளுபடி  செய்யப்பட்டதாக  தீர்ப்பானது. 


கோர்ட் தீர்ப்பு வந்த பிறகும்… அவன் கதவை திறக்கவேவில்லை . எட்டு வீடுகளும்,  வீட்டுக்கு ஐந்தாயிரம் என 40 ஆயிரம் கொடுக்க தயாராய்  இருந்தனர். ஆனால் அவன் கதவை திறக்க முடியாது என அனைவரிடமும் தெரிவித்து விட்டான்.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்ற கருத்தினை கண்ணன் முன்வைத்தார். ஆனால் செல்லையா அதை மறுத்து விட்டார். இனிமேலும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம். அது அவன் இடம். அவனுக்கு மனமில்லை. அது அவனோட மனசு. அவனே மாறினால் ஒழிய ….நம்மால் மாற்ற முடியாது.   நாம் நம்மை மாற்றிக் கொள்வோம். என் பேரனை நானே சைக்கிளில் கொண்டு  விட தீர்மானித்து விட்டேன் என்றார்.


அந்த எட்டு குடும்பங்களில் வயதில் மூத்தவர் செல்லையா. அனுபவம் மிக்கவர். அனைவராலும் நல்ல மனிதர் என போற்றப்பட்டவர். அவர் கூறியதில்  மற்றவர் யாரும் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. அனைவரும் கட்டுபட்டனர்.


இதற்கு மேல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பயனில்லை எனக் கருதி ,  8 குடும்பங்களின் குழந்தைகள்… ஐந்து கிலோமீட்டர் சுற்றி, அந்த ஸ்கூலுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டனர்.


ஆனால் அந்த எட்டு குடும்பங்களுக்கும்… அவன் மேல் இருந்த  கோபம் தனியவே இல்லை. இப்படி ஒரு அடாவடி பேர்வழியா இருக்கிறானே என உள்ளூர கொதித்தனர். அவனே  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து , நம்மை அலயவிட்டு… பின் அவனே நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல் ,அடம் பிடிக்கிறான். இவனை என்ன செய்வது….?. இதுவே அனைவரின் ஆதங்கம்….!!!


சிவகுமார்… சிவகுமார் …. என்னப்பா பண்ற… தள்ளாத வயதில் மூச்சிறைக்க  ஓடி வந்தார் செல்லையா.. அந்த ஐயா இவனை நோக்கி ஓடி வருவதை கண்டு… சிவகுமார் அதிர்ந்து போனான்.


அப்பா… சிவக்குமாரு. … தம்பி …..உன் பையன் சைக்கிள்ல  போகும்போது காலேஜ் … திருப்பத்துல ரோட்டுல விழுந்து கிடந்தான்ப்பா. கடைக்கு போன  நான்  நல்லநேரம் பார்த்தேன். தலையில நல்ல காயம்.  இரத்தம் உறைஞ்சு  கிடந்தது.  உடனே  நம்ம  பாலாஜி  மருத்துவமனையில் சேர்த்துட்டு வர்றேன்.  தலையில தையல் போடணுமாம்.   ஸ்கேன் எடுக்கனுமாம்.  உடனே பத்தாயிரம் கட்ட சொன்னாங்க. உடனே கட்டிட்டேன் . நீ உடனே கிளம்புப்பா.


சிவக்குமார் சிலையாய் நின்றான்.   எப்படி இவருக்கு இப்படி. மனம்… வந்தது … நமக்கு சொந்தமான இடத்தில் மற்ற குழந்தைகள் நடந்து செல்வதை  என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  அதற்காக கேஸ் போட்டு அவர்களை அலக்கழித்தேன்.  இவர் எப்படி என் மகனுக்காக பத்தாயிரம் ரூபாய் கட்டிவிட்டு…. இந்த வயதில் இப்படி ஓடி வருகிறார் .   எப்படி…?  


ஐயா …!!! என  கையெடுத்து கும்பிட்டான்  சிவக்குமார்.    குரல் தழுதழுத்தது.  கண்கள் பனிந்தன.


முதல்ல ஆஸ்பத்திரிக்கு போப்பா …சிவா.. இன்னும் காசு தேவைப்பட்டால் கேளுப்பா… தரேன் அப்புறம் திருப்பி கொடுக்கலாம்..


இந்த வார்த்தையை கேட்டு சிவக்குமார் உறைந்து போனான்.. புத்தியில் பட்டென்று ஏதோ உறைக்க.. அழுது புலம்பியபடி மருத்துவமனையை நோக்கி ஓடினான்.


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்