கண்டி: இந்திய வீரர் விராட் கோலியின் பரம ரசிகை நான். அவர் சதம் அடிப்பார்னு நினைச்சேன்.. ஆனால் அவர் என்னை ஏமாத்திட்டார் என்று கூறிய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகையின் பேட்டி வைரலாகியுள்ளது.
ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் கண்டியில் நடந்த முதல் போட்டியில் சந்தித்தன. ஆனால் மழை காரணமாக இப்போட்டி கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இப்போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை அதிர வைத்து விட்டனர். அத்தனை விக்கெட்களையும் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஆடிய இந்தியா 266 ரன்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டு விட்டது. இதில் இஷான் கிஷான் அட்டகாசமாக ஆடி 82 ரன்களைக் குவித்தார். ஹர்டிக் பாண்ட்யா 87 ரன்களை விளாசினார். இருப்பினும் விராட் கோலிதான் ஏமாற்றி விட்டார். 7 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
யார் ஏமாந்தார்களோ இல்லையே ஒரு பாகிஸ்தான் பெண் ரசிகைதான் இதயம் உடைந்து போய் விட்டாராம். போட்டிக்குப் பின்னர் அவர் ஒரு சானலுக்கு அளித்த பேட்டியின்போது, நான் விராட் கோலியின் பரம ரசிகை. எனக்கு ரொம்பப் பிடித்த வீரர் அவர். அவருக்காகத்தான் நான் கண்டிக்கே வந்தேன். இப்போது அவர் சதமடிக்காமல் என்னை ஏமாற்றி விட்டார். எனக்கு இதயமே உடைந்தது போல உள்ளது.
நான் பாகிஸ்தானையும், இந்தியாவையும் ஆதரிக்கிறேன். எனது கன்னத்தைப் பார்த்தாலே தெரியும் (வலது கன்னத்தில் பாகிஸ்தான் கொடியையும், இடது கன்னத்தில் இந்தியாவின் கொடியையும் வரைந்திருந்தார் அப்பெண்).
பாபர் ஆஸம் பெரிய வீரரா, விராட் கோலி பெரிய வீரரா என்று கேட்டால் நான் விராட் கோலியைத்தான் தேர்வு செய்வேன். (அப்போது அருகே இருந்த ஒரு பாகிஸ்தான் ரசிகர், நம்ம நாட்டை ஆதரிச்சுப் பேசும்மா என்று கூறியதும், அவரை நோக்கித் திரும்பி, நமது பக்கத்து நாட்டை நேசிப்பது தவறில்லையே என்று டக்கென பதிலளித்தார் அப்பெண்). இதுபோன்ற மகத்தான அன்பு நீக்கமற நிறைந்திருப்பதால்தான் இன்றும் கூட உள்ளங்களில் நட்பு தழைத்தோங்கி நிற்கிறது.
இதற்கிடையே, பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சுக்கு முன்பு இந்தியா தடுமாறியது விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. ஒரு சாதாரண பாகிஸ்தான் அணியிடமே இந்தியா இத்தனை தடுமாறியுள்ளதே.. பெரிய பெரிய ஜாம்பவான் அணிகளை எல்லாம் உலகக் கோப்பையில் சந்திக்க வேண்டியிருக்கும். இந்திய பேட்ஸ்மேன்கள் மனதளவில் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சை சமாளிக்கும் ஆயத்த நிலையில் இல்லாதது சரியல்லை. இந்திய அணி சுதாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
{{comments.comment}}