Archaeology: பேரனோட பேரனோட பேரனோட பேரன்.. வந்து கண்டுபிடிச்ச.. "கிணறு"!

May 18, 2023,10:48 AM IST
- பிரேமா சுந்தரம்

அவிழ்க்கப்பட முடியாத சிக்கல்கள் நிறைந்த ஒரு விஷயத்தை விசித்திரத்தைப் பூமிக்கடியில் தோண்டி கண்டெடுத்து, மண்மூடிப் போன நம் மூதாதையரின் வாழ்க்கையை எப்படி இருக்கும் என உருவகப்படுத்தும் அகழ்வாராய்ச்சி என்ற வார்த்தையின் மீது எனக்கு எப்போதும் ஒரு ஈடுபாடு உண்டு.. 

ஆம்.. ஆறாம் ஏழாம் வகுப்புகளில் சமூக அறிவியலில் வரலாறு பிரிவு எனக்கு எப்போதும்  மிகப் பிடித்தது.. சிறு வயதில் இருந்தே எதையும் கற்பனை செய்து காட்சியாக ஓட்டி டீச்சர் விளக்குவதைப் புரிந்து கொண்டுபின் மனனம் செய்வது என் வழக்கம்.. அந்த வகையில் என் கற்பனைக்கு போதும் போதும் என தீனி போட்டது வரலாறு பிரிவும் தமிழில் செய்யுள் (செய்யுளுக்கென்று ஒரு தனி பதிவு போடுகிறேன்) பிரிவும் தான்.. 



சிப்பாய் கலகம், பிளாசிப் போர், பானிபட் போர்கள், உலகப் போர்கள், ரஷ்யப் புரட்சி என போர்கள் ஒருபுறம் என்னை வியக்க வைக்க வைத்தாலும் இந்த சிந்து சமவெளி நாகரிகமும் ஹரப்பா , மொஹஞ்சதாரோ , மெசபடோமியா போன்ற வார்த்தைகள் என்னை ஒரு உருவமில்லா பூதமாக மண்ணுக்கு அடியில் ஆக மட்டும் இழுத்துச் சென்றிருக்கின்றன..

எப்படி இருந்திருப்பார்கள் இந்த பிந்தைய கற்கால மக்கள்?... என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்?.. நன்கு வடிவமைக்கப்பட்ட நகர கட்டமைப்பு பூமிக்கடியில் காணக் கிடைக்கப் பெற்றதென்றால் இவர்கள் யாரிடம் பொறியியல் கற்றிருப்பார்கள்?  துரித வாகன வசதிகள் இல்லா அக்காலத்தில் எப்படி அவர்களால் சுடுகற்களாலும் மரத்தாலும் வீடும் , குளமும், வடிகால் வசதிகளும்  அமைக்க முடிந்தது? அதற்கு எவ்வளவு பெரிய பொறுமை தேவைப்பட்டிருக்கும் அவர்களுக்கு? கறுப்பர்கள் திராவிடன் என்றும் சிவப்பர்கள் ஆரியன் என்றும் எப்படி பிரித்தார்கள்?? 

ஒரு ஐந்து சென்டில் ஒரு இரண்டு மாடி வீட்டைக் கட்டுவதற்கே land approval, housing loan என நாயாய் அலைந்து ஒரு கான்டிராக்டர் கிட்ட மொத்தமா பேசி முடிச்சு நாம ஒரு பிளான் கொடுத்தா அதுக்கு சம்பந்தமே இல்லாம அவர் ஒரு பிளான்ல வீட்டைக் கட்டி நல்லா லைட் ப்ளூ கலர்ல வரவேற்பறையைப் பெயிண்ட் அடிச்சுடுங்கனு சொல்லும் போது ok னு சொல்லிட்டு மறுநாள் வந்து பார்த்தால்  சம்பந்தமே இல்லாம ப்ளோரசன்ட் பச்சை கலர்ல பெயிண்ட் அடிச்சு வச்சு இதான் சார் இப்போ டிரென்டிங் னு சொல்லி நம்ம வீட்டை அவருக்குப் புடிச்சா மாதிரி கட்டி சாவியைக் கையில கொடுத்துட்டு போயிடுவாங்க‌..

ஆனா இது எதுவுமே இல்லாம எப்படி ஆற்றங்கரை நாகரிகத்தில் இருந்து இவர்களால் நகர நாகரிகத்துக்கு மாற முடிந்தது? ஒரு பெருநகரத்தையே உருவாக்க முடிந்தது?? இப்படி ஆயிரம் கேள்விகள் மனதிற்குள் ரங்கராட்டினம் போல் சுற்றிவரும்.. உண்மையிலேயே டைனோசர் னு ஒரு விலங்கு இருந்துருக்குமா?? ஜுராசிக் பார்க் படத்துல மண்ணுக்கடில இருந்து தோண்டி டைனசரோட எலும்புக் கூடு கண்டு பிடிக்கிறாங்க.. அந்த எலும்பு படிமத்தை வச்சு அது எத்தனை வருடத்திற்கு முன்னாடி வாழ்ந்துருக்கும்னு கணிக்கிறாங்களே.. அது எப்படி?? 

இந்த மாதிரி விநோதமான கேள்விகள் எழும்.. நம்ம பக்கத்து ஊரு திருநெல்வேலி ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி மற்றும் மதுரை பக்கம் கீழடி னு சொல்லிட்டே போகலாம்.. அதெப்படி நம்ம முப்பாட்டன் இவ்வளோ புத்திசாலியா இருந்துருக்கான்?? அவன் மூளை அவனுடைய வழித்தோன்றலாகிய நமக்கு ஏன் இல்லைனு தோணும்.. இதெல்லாம் விட ஒரு பெரிய மர்மம் இந்த எகிப்து மம்மி.. எதுக்காக அவன் இறந்த உடலைப் பாதுகாத்தான்?? எப்படி பாதுகாத்தான்?? என்ன ரசாயனம் பயன்படுத்தினான்?? என்ன ஃபார்முலா?? இப்படி நிறைய தோணும்.. 

இப்படி விவஸ்தை இல்லாமல் என் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கப் போவதில்லை.. ஆனால் கேள்விகள் மட்டும் இந்த அகழ்வாராய்ச்சி போன்று பிரம்மாண்டமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது..

நம் சிறு வயதில் நம் வீட்டின் முன் இருந்த திண்ணை இன்று காணாமல் போய்விட்டது.. இப்போதிருக்கும் பல வீடுகள் பழைய வீடுகளின் திண்ணைகளும் கிணறுகளும் மண்ணால் நிரப்பப்பட்டு அதன் மேல் கட்டப்பட்டவையாகத்தான் கண்டிப்பாக இருக்கும்.. யாரு கண்டா?? என் பேரனோட பேரனோட பேரனோட பேரன் அவன் வரலாறு புத்தகத்தில் பூமிக்கு அடியில் அகழ்வாராய்ச்சியின் போது ஒரு பள்ளமான குழி காணப்பட்டது.. அது நம் மூதாதையர் நீருக்காக அமைத்த கிணறு என்னும் அமைப்பு என்று படித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்