மானாமதுரை/காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய நடை பயணத்தின்போது பல சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறின.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கி நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடை பயணத்தின்போது ஏராளமான பாஜகவினர் திரண்டு வருகின்றனர். அண்ணாமலை நடை பயணத்தில் கூடவே புகார் பெட்டியும் எடுத்துச் செல்லப்படுகிறது. அதிலும் பலர் புகார் மனுக்களைப் போடுகிறார்கள். அண்ணாமலையிடமும் நேரடியாக புகார் மனுவைக் கொடுக்கின்றனர்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களில் அண்ணாமலையின் நடை பயணம் நடைபெற்றது. அப்போது பல சுவாரஸ்யமான காட்சிகளைக் காண முடிந்தது.
காரைக்குடி நடை பயணத்தின்போது அண்ணாமலையிடம் ஒரு இஸ்லாமிய இளைஞர் திருக்குரான் நூலைக் கொடுத்து கை குலுக்கினார். அந்தப் புத்தகத்தை வாங்கிய அண்ணாமலை அதை நெற்றியில் வைத்து கும்பிட்டு பின்னர் அந்த இளைஞரை அணைத்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். அப்போது மூத்த தலைவர் எச். ராஜா அருகில் இருந்தார்.
அதேபோல இன்னொரு இடத்தில் ஜூஸ் கடைக்காரர் ஒருவர் அண்ணாமலைக்கு ஜூஸ் போட்டுக் கொடுத்தார். ஜூஸை வாங்கிக் குடித்த அண்ணாமலை அவரை கட்டி அணைத்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். அந்தக் கடைக்காரரிடம் சகஜமாக பேசினார்.
மானாமதுரையில் மண்பாண்டங்கள் செய்யும் ஒரு இடத்துக்கு விசிட் அடித்தார் அண்ணாமலை. அங்கு கடம் உள்ளிட்ட பல்வேறு வகையான மண்பாண்டங்கள் செய்யப்படுகின்றன. அதுகுறித்துக் கேட்டறிந்த அண்ணாமலை தொழில் எப்படி நடக்கிறது, வருமானம் எப்படி இருக்கிறது என்பது உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தார்.
பின்னர் மண்பாண்டங்கள் செய்வது எப்படி என்பதை நேரில் பார்த்த அவருக்கு தானே ஒரு மண்பாண்டம் செய்யும் ஆசை வரவே, குத்த வைத்து உட்கார்ந்து செய்ய ஆரம்பித்தார். ஒருவர் கற்றுக் கொடுக்க அதே போல தானும் செய்தார் அண்ணாமலை. அவர் செய்த குட்டி மண்பாண்டம் சூப்பராக வரவே அண்ணாமலைக்கு வெட்கப் புன்னகை பீறிட்டு வந்தது. மகிழ்ச்சியுடன் தான் செய்த மண்பாண்டத்தைப் பார்த்து அவர்களிடமிருந்து விடை பெற்று நகர்ந்தார்.
{{comments.comment}}