சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் வாரிசு என்ற வாதத்தை வைத்து மக்களை சந்திக்க அவர்கள் முயலலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் அவர்களிடம் உள்ள கடைசி ஆயுதமாகும்.
கிட்டத்தட்ட மகாராஷ்டிராவில் நடந்த கதைதான் தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனாவும், பாஜகவும் நீண்ட நெடுங்காலம் கூட்டணி வைத்திருந்தன. இருவரையும் பிரித்துப் பார்க்க முடியாது என்ற அளவில் இருந்து வந்தன. ஆனால் எப்போது உத்தவ் தாக்கரே, பாஜகவை உதறி விட்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தாரோ என்றே பாஜக அவருக்குக் குறி வைத்து விட்டது.
அதிரடியாக சிவசேனாவை உடைத்த பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சியை உடைத்து ஆட்சியையும் பிடித்தது. அத்தோடு தேர்தல் ஆணையத்திலும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக முடிவெடுத்து, தற்போது சிவசேனா கட்சியும், அதன் சின்னமும் ஏக்நாத் ஷிண்டேவுக்குப் போய் விட்டது. பாஜகவை உதறிய உத்தவ் தாக்கரே தற்போது கட்சியும், சின்னமும் இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்து விட்டார். அவர் உச்சநீதிமன்றத்தையும், தனது தொண்டர்களையும் மட்டுமே தற்போது நம்பி உள்ளார்.
இதே பாணியில்தான் தற்போது அதிமுகவும் பலவீனமடைந்து நிற்கிறது. எடப்பாடி பழனிச்சாமி - ஓ. பன்னீர் செல்வத்தை பாலன் ஸ் செய்து அதிமுகவை வழி நடத்தி வந்தது பாஜக. ஆனால் அந்தத் தலைவர்களுக்கு இடையே பெரும் பிரச்சினை வெடித்து ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்தபோது அவர்களை இணைக்க முயற்சித்தது. ஆனால் அது நடக்கவில்லை. மேலும் சசிகலா, தினகரன் ஆகியோரையும் இணைக்கவும் பாஜக முயற்சித்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில் கட்சி பொதுக்குழுவில் அதிக ஆதரவுடன் இருந்து வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில்தான் ஹைகோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்குமாக எப்பாடியும், ஓபிஸ்எஸும் அலைந்தனர். அதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து விட்டது. இதற்கு முன்பாக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக ஓ.பி.எஸ்ஸை வலியுறுத்தி வேட்பாளரை வாபஸ் பெற வைத்தது பாஜக. இதன் மூலம் தான் எடப்பாடிக்கு ஆதரவாக இருப்பதை அது வெளிப்படுத்தியது.
தற்போது ஓ.பி.எஸ். நிராதரவாக விடப்பட்டுள்ளார். தொண்டர்கள் ஆதரவு எனக்குத்தான் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் ஓ.பி.எஸ். எனவே தற்போது அவரிடம் உள்ள ஒரே ஆயுதம் அது மட்டுமே. தொண்டர்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவை எடப்பாடி தரப்புக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் கூறி விட்டதால், இனி மொத்த நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே போவார்கள்.. "பவர்" இருக்கும் பக்கமே பலமாக இருக்கும் என்பது இயற்கை என்பதால் அந்த அடிப்படையில் அதிமுகவினர் எடப்பாடியைத்தான் பலமானவராக பார்ப்பார்கள் என்பதால், ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவால் அதிமுகவை வழிநடத்தக் கூடியவர், அரசை வழிநடத்தக் கூடியவர் என்று அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம் மட்டுமே. அதை மட்டுமே வைத்துக் கொண்டு தொண்டர்களிடம் ஓ.பி.எஸ் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியவர் எடப்பாடி பழனிச்சாமி" என்ற வாதத்தை அவர் முன்வைத்து தொண்டர்களை சந்திப்பார் என்று தெரிகிறது. இஅதில் அவர் வென்றால் மட்டுமே அவரது எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அப்படி இல்லாவிட்டால் ஒன்று எடப்பாடியிடம் சரணாகதி அடைய வேண்டும் அல்லது சசிகலாவுடன் இணைந்து தனிக்கட்சி காண வேண்டும் அல்லது பாஜகவில் இணைய வேண்டும் அல்லது அரசியலை விட்டு ஓய்வு பெற வேண்டும்.
ஓ.பி.எஸ். என்ன செய்வார்.. பொறுத்திருந்து பார்ப்போம்.
{{comments.comment}}