எடப்பாடி பழனிச்சாமி விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம்.. அதிரடி தீர்மானங்கள்.. ரூட்டைப் பிடித்த அதிமுக!

Aug 16, 2024,07:31 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிச்சாமி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போவதாக அதிமுக  செய்தித் தொடர்பாளரும், பேச்சாளருமான வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் இன்று நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்திலும், எடப்பாடி பழனிச்சாமி வகுத்துத் தரும் பாதையில் தேர்தல் பணிகளை ஆற்றுவது என்று தீர்மானமும் போட்டுள்ளனர்.


2026 சட்டசபைத் தேர்தலை நோக்கி தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை திரும்பியுள்ளன. திமுக தனது பூர்வாங்க வேலைகளை இப்போதே ஆரம்பித்து விட்டது. ஒருங்கிணைப்புக் குழு போட்டு அதன் ஆலோசனைக் கூட்டமும் நடந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதேபோல அதிமுகவும் தனது வேலைகளை ஆரம்பித்து விட்டதாக ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.


இந்தப் பின்னணியில்தான் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும், அதிமுகவின் செயற்குழுக் கூட்டமும் இன்று அடுத்தடுத்து நடைபெற்றன. இரு பெரும் கட்சிகளின் இந்தக் கூட்டங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது. திமுக தனது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் அதை விட முக்கியமாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பேச்சு இருந்தது. 200 தொகுதிகளில் வெற்றி வாகை சூட வேண்டும் . அதுதான் நமது இலக்கு. அதில் சுணக்கம் காட்டாமல் செயல்பட வேண்டும் என்று திமுகவினருக்கு டார்கெட் வைத்து விட்டார்.


மறுபக்கம் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் போடப்பட்டன. அதில் முக்கியமாக பார்க்கப்படுவது எடப்பாடி பழனிச்சாமி வகுத்துத் தரும் பாதையில் செயல்படுவோம் என்ற தீர்மானம்தான். அதிமுக நிறைவேற்றிய தீர்மானங்கள் விவரம்:




தீர்மானம்-9


கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' 

எடப்பாடி பழனிசசாமி  அவர்கள் வகுத்துத் தருகின்ற தேர்தல் வியூகப்படி, வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும்; 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும் கழகம் மகத்தான வெற்றி பெறும் வகையில், கழக நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றி, வெற்றிக் கனியைப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களுக்கு சமர்ப்பிக்க சூளுரை!


தீர்மானம்-8


தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்குக் காரணமான விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம். தொழில் வளர்ச்சி குன்றியதற்கு காரணங்களை அறிந்து, அவற்றை சரிவர நிவர்த்தி செய்யாத விடியா திமுக அரசுக்கு கண்டனம். நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கடன்மேல் கடன் வாங்கியும், வரிமேல் வரி விதித்தும், மக்களை கடனாளியாக்கியதுதான் விடியா திமுக அரசின் சாதனை. விடியா திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி - 'சாதனை ஆட்சி அல்ல, வேதனை ஆட்சியே.


தீர்மானம்-7


மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ் நாட்டிற்குத் தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும்; போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம். மருத்துவக் காப்பீடு பிரீமியத்திற்கு 18 சதவீத GST வரியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தல். வயநாடு நிலச் சரிவை, தேசியப் பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தல்.


தீர்மானம்-6


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம். மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்தாத விடியா திமுக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கடும் கண்டனம்.


தீர்மானம்-5


மக்கள் நலன் கருதி, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த உன்னதமான பல திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கி செயலிழக்கச் செய்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம். 


தீர்மானம்-4


தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளைக் காப்பாற்றத் தவறிய விடியா திமுக அரசின் மெத்தனப் போக்கிற்கு கடும் கண்டனம்.


தீர்மானம்-3


மக்கள் நலன் கருதி மின்கட்டண உயர்வை ரத்து செய்திடவும், மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்திடவும் விடியா திமுக அரசை வலியுறுத்தல்.


தீர்மானம்-2


நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.  விலையில்லா வேட்டி,சேலை வழங்குவதிலும், விலையில்லா பள்ளிச் சீருடைகள் வழங்குவதிலும் மெத்தன போக்கோடு இருந்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.


தீர்மானம்-1


2024, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கழகக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும்; அயராது தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. கழகத்தின் வெற்றிக்காக அயராது உழைத்திட்ட கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றியும், பாராட்டும்!


விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம்




இன்றைய கூட்டம் குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணி முறிவுக்குக் காரணம் அவர்கள்தான். மக்கள் எங்களை மறந்து விட்டதாக அண்ணாமலை கூறுகிறார். அவர்தான் மக்களால் விரைவில் மறக்கடிக்கப்படப் போகிறார். பொதுச் செயலாளர் எடப்பாடியார் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவித்தார்.


சமீபத்தில்தான் சசிகலா தமிழ்நாடு சுற்றுப்பயணம் என்ற பெயரில் ஒரு பயணத்தை ஆரம்பித்து அதிமுகவினரை சந்திக்க ஆரம்பித்தார். ஆனால் அது எந்த பலனையும் கொடுத்ததாக தெரியவில்லை. மறுபக்கம் பாஜக கூட்டணியில் சேர்ந்ததால் டிடிவி தினகரன் சோபையிழந்து காணப்படுகிறார். ஓ.பி.எஸ்ஸும் அமைதியாக உள்ளார். இந்த நிலையில் அதிமுகவினரை முழு வீச்சில் திரட்டும், தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ளவும், தேர்தல் பணிகளுக்கு ஆயத்தப்படுத்தும் வகையிலும் அதிரடி சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


களத்தில் திமுகவும், அதிமுகவும் அதிரடியும், அதி வேகமும் காட்டத் தொடங்கி விட்டன. மற்ற கட்சிகளின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

அதிகம் பார்க்கும் செய்திகள்