எம்ஜிஆர் டூ எடப்பாடி.. அதிமுக எடுத்த ரிஸ்க்குகள்.. கடந்து வந்த "கூட்டணிகள்"!

Sep 26, 2023,05:53 PM IST

- மீனாட்சி


சென்னை: 1972ம் ஆண்டு அதிமுகவை ஆரம்பித்தார் எம்ஜிஆர். இந்தக் கட்சி தொடங்கப்பட்டது முதலே கூட்டணி அரசியலைத்தான் கடைப்பிடித்து வருகிறது. இன்று எடப்பாடி பழனிச்சாமி வரை கூட்டணிகளும், அதிமுகவும் பிரிக்க முடியாத பந்தத்தில்தான் இருந்து வந்துள்ளன.


தி.கவிலிருந்து பிறந்தது திமுக.. அதிலிருந்து பிரிந்தது. அதன் பிறகு தமிழ்நாட்டின் அரசியலை திமுகவும், அதிமுகவும்தான் கோலோச்சி வந்துள்ளன. அன்றிலிருந்து இன்று வரை தமிழக அரசியலில் இவ்விரு கட்சிகள் இல்லை என்றால் அரசியலே இல்லை என்று கூறும்அளவுக்கு மாறிப் போயுள்ளன, மாற்றி வைத்துள்ளன. எத்தனை எத்தனை கட்சிகளோ பிறந்தன இவ்விரு கட்சிகளை யாராலுமே அசைக்க முடியவில்லை. இப்படிப்பட்ட கட்சிகளில் அதிமுக கடந்து வந்த பாதை குறித்து ஒர் அலசல் தான் இது. 


திமுகவிலிருந்து பிரிந்து வந்த எம்ஜிஆர் அடுத்து புதிய கட்சியைத் தொடங்க திட்டமிட்டபோது, அவரது தீவிர ஆதரவாளரான அனகாபுத்தூர் ராமலிங்கம் தான் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த அண்ணா திமுக  என்ற கட்சியை எம்ஜிஆருக்கு கொடுத்தார். அதை வைத்து உருவானதுதான் அதிமுக. 


1973 மே மாதம் நடந்த திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிர வைத்தது . இதுதான் அதிமுகவுக்குக் கிடைத்த முதல் எம்.பி பதவியாகும். அடுத்து 1973ம் ஆண்டு கோவை மேற்குத் தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செ. அரங்கநாயகம் வெற்றி பெற்றார். அந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 11 எம்எல்ஏக்கள் அக்கட்சிக்குக் கிடைத்தனர். 


1976ம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே 2வது மிகப் பெரிய கட்சியாக அதிமுக மாறியது. அதாவது திமுகவுக்கு அடுத்து அதிமுக என்ற நிலையை முதல் முறையாக அதிமுக எட்டியது. அக்கட்சிக்கு சட்டசபையில் 16 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். 


அதிமுகவின் முதல் கூட்டணி


அதிமுக அமைத்த முதல் கூட்டணி என்றால் அது காங்கிரஸ் கட்சியுடன்தான். 1975 முதல் 1977 வரை அமலாக்கப்பட்ட மிசா சட்டத்தின்போது காங்கிரஸுடன் நெருங்கியது அதிமுக.  1976ம் ஆண்டு திமுக அரசை மத்திய காங்கிரஸ் அரசு கலைத்தது. 1977ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. எம்ஜிஆர்  முதல்வரானார். 




அதிமுக வைத்த 2வது கூட்டணி ஜனதாக் கட்சியுடன் அமைந்தது. 1979ம் ஆண்டு மத்தியில் சரண் சிங் அமைத்த ஆட்சியின்போது அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைத்தது. சத்தியவாணி முத்து மற்றும் அரவிந்த பாலா பழனூர் அமைச்சரானார்கள். திராவிடக் கட்சி ஒன்று மத்தியில் அமைச்சரானது அதுதான் முதல் முறையாகும். மிகவும் குறுகிய காலமே இந்த ஆட்சி நீடித்தது.


1980ம் ஆண்டு எம்ஜிஆர் புதிய கூட்டணியை அமைத்தார்.  காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்ததால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது அதிமுக. மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியையும் பிடித்தது அதிமுக. 2வது முறையாக முதல்வரானார் எம்ஜிஆர்.


1984ம் ஆண்டு அதிமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டது. இருவரும் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தனர். இதில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. 1984 சட்டசபைத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தது. மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எம்ஜிஆர். 3வது முறையாக முதல்வரானார். மருத்துவமனையில் படுத்துக் கொண்டே எம்ஜிஆர் ஜெயித்த தேர்தல் இது.


வி.என் ஜானகி அமைத்த கூட்டணி


எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி வி.என். ஜானகி தலைமையில் ஒரு பிரிவும், ஜெயலலிதா தலைமையில் இன்னொரு பிரிவுமாக கட்சி உடைந்தது. ஜானகி தலைமையிலான அதிமுக, சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்றக் கழகம் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்தது. தோல்விக்குப் பின்னர் அரசியலை விட்டு விலகினார் ஜானகி. கட்சி ஜெயலலிதா வசம் வந்தது.


ஜெயலலிதா வசம் அதிமுக வந்ததும், அதுவரை எம்ஜிஆர் கடைப்பிடித்து வந்த பல்வேறு நடைமுறைகளையும் அடியோடு மாற்ற ஆரம்பித்தார் ஜெயலலிதா. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்த அதிமுக 39 தொகுதிகளில் 38 இடங்களை வென்றது. திமுக படு தோல்வி அடைந்தது.


ஜெயலலிதா 1989ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் அவர் மத்தியில் ஆட்சியில் இருந்த சந்திரசேகரின் ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார். 1991 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. அதிமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது.


1996 சட்டமன்றத் தேர்தலில்  காங்கிரசுடனான தனது கூட்டணியைத் தொடர்ந்தது அதிமுக. ஆனால் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று, பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோல்வியடைந்தார். 1996 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது அதிமுக.


பாஜகவுடன் முதல் கூட்டணி


1998 பொதுத் தேர்தலின் போது, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில், அதிமுக, பாஜகவுடன் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டது. ஆனால் 1999ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஆதரவை விலக்கிக் கொண்டது அதிமுக. இதனால் பாஜக ஆட்சி வீழ்ச்சியடைந்தது. 

இதைத் தொடர்ந்து,1999 ம் ஆண்டு பொது தேர்தலில் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தது அதிமுக.  இந்த கூட்டணிக்கு லோக்சபா தேர்தலில் தோல்வியே கிடைத்தது. 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.


2001 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக,  தலைமையிலான கூட்டணியில், இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், இடதுசாரி முன்னணி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) ஆகிய கட்சிகள் இடம் பெற்றன. இந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது அதிமுக. 


2004 பொதுத் தேர்தலில் ,மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து, அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது அதிமுக. 


தேமுதிகவுடன் கூட்டணி


2011 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) கட்சியுடன் கூட்டணி வைத்தது அதிமுக. இந்தக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.


2014 பொதுத் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் சேர வேண்டாம் என்று முடிவு செய்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது அதிமுக. ஜெயலலிதாவின் இந்த ரிஸ்க் அவருக்கு சாதகமாகவே அமைந்தது.  37 தொகுதிகளில் வெற்றி பெற்று,  16வது மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது அதிமுக. இது இந்திய வரலாற்றில் எந்த கட்சியும் அடையாத மாபெரும் வெற்றியாகும்.


2016 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் கூட்டணி இல்லாமல் அதிமுக தனித்துப் போட்டியிட்டு, 234 இடங்களில் 135 இடங்களில் தேர்தலில் வெற்றி பெற்றார் ஜெயலலிதா. தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்யாத அற்புதமான வெற்றிக்காக அவர் எடுத்த துணிச்சலான முடிவு இது. 


எடப்பாடி தலைமையில் அதிமுக - பாஜக


2016ம்  ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளில் அதிமுக - பாஜக தலைமையிலான கூட்டணி போட்டியிட்டது. இதில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் படு தோல்வியைச் சந்தித்தது. 


2021 சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக - பாரதிய ஜனதா கூட்டணி தொடர்ந்தது. ஆனால் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக படு தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்தது. திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில், பாஜகவுடன் இணைந்திருப்பதால்தான் தோல்வி என்று கருதிய அதிமுக, 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் அணி சேராமல் தனித்துப் போட்டியிட்டு கணிசமான இடங்களை வென்றது.


இப்போது மீண்டும் பாஜக கூட்டணியை உதறியுள்ளது அதிமுக. வரும் லோக்சபா தேர்தலிலும், அதைத் தொடர்ந்து வரவுள்ள சட்டசபைத் தேர்தலிலும் அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கும்.. கூட்டணி எப்படி இருக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்