ADMK Leaves NDA.. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக!

Sep 25, 2023,05:36 PM IST

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அதிரடியாக அறிவித்துள்ளது.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில், இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவைக் குறி வைத்துப் பேசி வருவது தொடர்பாக விவாதிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.


இதில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களும் பெரும் திரளாக கூடியிருந்தனர்.




இந்தக் கூட்டத்தில் பாஜக கூட்டணி தொடர்பாகவும், அண்ணாமலை குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் பலரும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர். ஆலோசனையின் இறுதியில் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றியது அதிமுக.


அதன்படி கடந்த ஒரு வருடமாக தமிழ்நாட்டு பாஜக தலைமை திட்டமிட்டு வேண்டும் என்றே அதிமுக தலைவர்களை அவதூறாக சித்தரித்தும், விமர்சித்தும், குறி வைத்தும் பேசி வந்ததாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும், 2 கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் எடுப்பதாக அதிமுக முடிவு செய்து தீர்மானம் போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.




அதிமுக தலைமையில் இந்த முடிவை கட்சித் தொண்டர்கள் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் சென்னை தலைமையகம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். வழக்கமாக கூட்டணிவைத்தால்தான் கொண்டாடுவார்கள். ஆனால் கூட்டணி முறிவை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.


கருத்து சொல்ல மறுத்த தலைவர்கள்


முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மூத்த தலைவர்கள், சொல்லி வைத்தது போல செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது அதற்குப் பதிலளிக்க மறுத்து விட்டனர். மழுப்பலான  பதிலை மட்டுமே கொடுத்து விட்டு சென்றனர். செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த வேலுமணி  வெறும் புன்னகையை மட்டுமே வீசி விட்டுச் சென்றார்.


நாக்கை துண்டிப்போம் என்று ஆவேசமாக பேசி அண்ணாமலையின் கடும் கோபத்துக்கு ஆளான செல்லூர் ராஜு புன்னகை பூத்த முகத்துடன் வந்தார். அவரும் இன்று சரியாக பேசவில்லை. "இப்பதான் தலைவரே வர்றோம்.. பேசிட்டு வந்து சொல்றேன்.,. அட விடுங்க தலைவா.. பார்க்கலாம் இருங்க" என்று தமாஷாக பேசியபடி உள்ளே சென்றார் ராஜு.


தீவிர மோடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "பொதுச் செயலாளர் கூட்டம் போட்டிருக்கிறார். அவரது முடிவே எங்கள் முடிவு" என்று பொத்தாம் பொதுவாக பேசி விட்டுச் சென்றார். தம்பித்துரை, தங்கமணி ஆகியோர் எதுவும் பேசாமல் கப்சிப்பென்று போய் விட்டனர்.




அதேசமயம், தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் பெருமளவில் கூடியிருந்த தொண்டர்கள் கட்சித் தலைமையின் முடிவுக்காக காத்திருந்தனர். அவர்களில் பலரும் பாஜக கூட்டணி வேண்டாம் என்று ஆவேசமாக கூறியதையும் காண முடிந்தது.


பிரச்சினை என்ன


அதிமுக பாஜக கூட்டணியில் சமீப காலமாக பெரும் புகைச்சல் நிலவுகிறது. அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே தொடர்ந்து வாய்ச் சண்டை நடந்து வருகிறது. ஜெயலலிதா குறித்துக் கூறிய கருத்துக்கள், பேரறிஞர் அண்ணா குறித்துக் கூறிய கருத்துக்களால் அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.


அதிமுகவின் ஜெயக்குமார், கூட்டணியில் பாஜக இல்லை என்று அறிவித்தார். இது பாஜக மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுகுறித்து அண்ணாமலையும் கருத்து தெரிவித்து பதிலடி கொடுத்தார். கூட்டணி வேண்டாம் என்று சொல்லும் தைரியம் அதிமுகவுக்கு இருக்கிறதா.. டிவிஏசி விசாரணைகள் இருப்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது என்று அண்ணாமலை  மிரட்டலாக பேசினார்.


இந்த நிலையில்தான் தற்போது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டினார்.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உருவான அதிமுக பாஜக கூட்டணி இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் இது நிரந்தர முடிவாக இருக்குமா அல்லது தேர்தல் சமயத்தில் மீண்டும் கூடிக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மோடி, அமித்ஷா என்றால் பயம்.. அமைச்சர் கே.என்.நேரு

news

ரூ. 4.6 கோடி.. வாங்கிய பரிசுப் பணத்தில் கால்வாசியை வரியாக கட்டும் குகேஷ்.. தோனி சம்பளத்தை விட அதிகம்

news

தங்கம் விலை.. சில நாட்களாக மாற்றமின்றி.. இன்று திடீர் உயர்வு... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

news

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட சட்ட மசோதா.. மக்களவையில் தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. நாட்டின் பன்முகத்தன்மையை முழுமையாக அழித்து விடும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

Sugar symptoms.. உங்களுக்கு சர்க்கரை நோய் வர போறகிது என்பதற்கான அறிகுறிகள்

news

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் சேவை சரியானது... மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

news

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு.. 48 மணி நேரத்தில் வலுப்பெறும்.. 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : கன்னி ராசிக்காரர்களே.. திட்டமிட்டு செயல்பட்டால் நன்மை கிடைக்கும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்